சிறப்புக் கட்டுரைகள்

துயரம் தந்த விருது + "||" + From Tragedy Award

துயரம் தந்த விருது

துயரம் தந்த விருது
கேமராவுக்கு ‘போஸ்’ கொடுக்கும் செயற்கையான சுபாவங்களை தவிர்த்துவிட்டு இயல்பாக நடக்கும் நிகழ்வுகளை அப்படியே தன் கேமராவுக்குள் சிறைபிடித்து அழகு பார்க்கிறார்.
கொரோனா ஊடங்கு காலகட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்களை கதைபோல் விவரிக்கும் விதத்தில் உயிரோட்டமான புகைப்படங்களை எடுத்து காட்சிப்படுத்தி விருது பெற்றிருக்கிறார், ரமிதா ரத்தோட். 21 வயதாகும் இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். புகைப்படக்கலை மீது கொண்ட காதல், இவர் எடுக்கும் புகைப்படங்களை உயிர்ப்புடன் காட்சியளிக்கவைக்கிறது. கேமராவுக்கு ‘போஸ்’ கொடுக்கும் செயற்கையான சுபாவங்களை தவிர்த்துவிட்டு இயல்பாக நடக்கும் நிகழ்வுகளை அப்படியே தன் கேமராவுக்குள் சிறைபிடித்து அழகு பார்க்கிறார். ரமிதா மும்பையில் உள்ள பயிற்சி மையத்தில் புகைப் படக்கலை பற்றிய சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறார்.

கண்ணில் படும் எதார்த்தமான காட்சிகளையெல்லாம் கேமராவுக்குள் பதிவு செய்யும் ஆர்வம் கொண்ட ரமிதாவுக்கு கொரோனா ஊரடங்கு காலகட்டம் கண்களில் நீர் வழிய வைத்திருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த வீடு திரும்ப முடியாமல் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உடமைகளுடன் தவித்ததை தனது கேமராவில் படம் பிடித்திருக்கிறார். அது புலம் பெயர் தொழிலாளர்களின் அவலங்களை கதையாக விவரிக்கும் ஆவண படமாக அமைந்திருக்கிறது. அந்த புகைப்பட தொகுப்புக்கு அமெரிக்காவை சேர்ந்த கிரேட்டர் குட் அறக்கட்டளை விருது வழங்கி பாராட்டி இருக்கிறது. ‘2020-ம் ஆண்டில் மாற்றத்துக்கான பெண்களின் குரல்’ என்ற பிரிவில் ரமிதாவின் படம் விருதுக்கு தேர்வாகி இருக்கிறது.

ரமிதாவின் தாயார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் ஊரடங்கின்போது கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு உதவி இருக்கிறார். தாயாருடன் சேர்ந்து சேவை பணியை தொடர்ந்த ரமிதா தனது புகைப்பட கலையையும் கையில் எடுத்துவிட்டார். தான் செல்லும் இடங்களில் பார்க்கும் காட்சிகளை எல்லாம் படமாக்கியுள்ளார். அதுவே அவருக்கு புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது.

‘‘நான் 10 வயதுக்குள் மூன்று மாநிலங்களில் வசித்திருக்கிறேன். பல இடங் களுக்கு பயணம் செய்திருக்கிறேன். பயணத்தின்போது எதிர்கொண்ட நிகழ்வுகளை கதையாக சொல்ல விரும்புவேன். 10-ம் வகுப்பு படித்தபோது கேமரா மீது காதல் உண்டானது. எனது தந்தை வைத்திருந்த கேமராவைகொண்டு புகைப் படங்கள் எடுத்தேன். அவை கதை சொல்லும் என் ஆர்வத்துக்கு தீனி போடுவதாக அமைந்திருந்தன.

ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த கஷ்டங்களை நேரில் பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அவர்களிடம் குழப்பங்கள், பதற்றம், பயம் இருந்தது. தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை குடும்பத்தை பிரிந்து வேலை பார்க்கும் இடங்களில்தான் செலவிடுகிறார்கள். அந்த இடத்தை காலி செய்துவிட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்ததை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. பெரும்பாலானோருக்கு குடும்பத்தை பற்றிய கவலை இருந்தது.

வேறொரு மாநிலத்தில் நிர்கதியாக நின்றபடி சொந்த ஊருக்கு திரும்ப போக்குவரத்து வசதி இல்லாமலும், கையில் பணம் இல்லாமலும் தவித்தார்கள். அவர்களின் குடும்பத்தினரிடமும் எப்படி திரும்பி வர போகிறார்களோ என்ற கவலை இருந்தது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேமரா லென்ஸ் மூலம் சொல்ல விரும்பினேன். புகைப்பட ஆவணமாக பதிவு செய்ய தொடங்கினேன். ஆரம்பத்தில் பெரும்பாலானோர் தங்களை பற்றி பேசவும், தாங்கள் அனுபவிக்கும் துன்பங்களை வெளிப் படுத்தவும் தயங்கினார்கள். அந்த காலகட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்ததால் நானும் மிகுந்த பாதுகாப்போடு இருக்கவேண்டியதிருந்தது. என்னை மற்றவர்களோடு பழகாமல் தனித்திருக்கும்படியும் என் பெற்றோர் வற்புறுத்தினார்கள்.

முதியோர்களை கொரோனா எளிதில் தாக்கிவிடும் என்ற அச்சமும் இருந்ததால், என் பாட்டியின் நலன் கருதி மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுமாறு பெற்றோர் வற்புறுத்தினார்கள். ஒரு வழியாக அவர்களிடம் போராடி அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க தொடங்கினேன். புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் எளிதில் வைரஸ் பாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள் என்ற எண்ணமும் சிலரிடம் இருந்தது. காவல்துறையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பிறகு எனது நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவு அளித்தார்கள்’’ என்பவர் தனது புகைப்பட தொகுப்புக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகிறார். விருது பெற்ற ரமிதாவுக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கிறது.