கிளைகளை நட்டு புதிய பூஞ்செடிகளை உருவாக்கும்போது...


கிளைகளை நட்டு புதிய பூஞ்செடிகளை உருவாக்கும்போது...
x
தினத்தந்தி 28 Feb 2021 1:42 PM GMT (Updated: 28 Feb 2021 1:42 PM GMT)

உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அழகான பூஞ்செடிகளை பார்க்கும் பலரும் அதில் ஒரு கிளையை வெட்டிக்கொண்டு வந்து தனது வீட்டில் ஆசையோடு நடுவார்கள்.

ஆனால் அது அவர்கள் எதிர்பார்த்தபடி துளிர்த்து வேர்விட்டு வளராமல் காய்ந்துபோய் விடுவதுண்டு. அப்படி ஆகாமல், நன்றாக வளர்ந்து பூத்துக்குலுங்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?

புதிய கிளைகளை வெட்டி நடும்போது முதலில் அது துளிர்க்கும். பின்பு வேரிடும். துளிர்க்கத் தொடங்கும்போது கிளையை சுற்றிலும் தண்ணீர்விட்டு ஈரப்பதமாக்கவேண்டும். அதிக அளவில் தண்ணீர்விட்டுவிடக்கூடாது. இலைகளைக் கொண்ட கிளையை நட்டால் இலைகள் வாடி, கிளையும் காய்ந்துபோகும். நடுவதற்கான கிளையை சாய்வுவாக்கில் முறித்துஎடுக்கவேண்டும். பூவிடாத இளம் செடியின் கிளைகளை முறித்து நட்டால் வேகமாக வளரும். வேர்விடும் வரை கிளைக்கு உரம் தேவையில்லை. தேங்காய் நார், ஆற்றுமணல், செம்மண் போன்றவைகளை சம அளவில் எடுத்து, ஒரு பெரிய கரண்டி அளவு ஸ்டூடோமோனஸ் பவுடரும் கலந்து உருவாக்கும் கலவையில் கிளையை நடவேண்டும்.

நிரந்தரமாக செடிகளை வளர்க்க விரும்புகிறவர்கள் தரையில் கிளைகளை நடாமல் சிறிய சட்டிகளிலோ, நர்சரி கவர்களிலோ கிடைக்கும் கலவையிலோ நடலாம். பாதி நிழல்விழும் இடத்தில்வைத்து அவைகளை வளர்க்கலாம். கலவை உலர்ந்துபோகும்போது மட்டும் நீர் ஊற்றினால் போதும். தேவையான அளவு துளிர்விட்ட பின்பு நிரந்தரமாக பராமரிக்கும் இடத்துக்கு மாற்றி நடவேண்டும். செடியை மாற்றி நடும்போது அதில் இருக்கும் கலவையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோடை காலம், மழைக்காலம் தவிர இதர பருவகாலங்கள் கிளைகளை முறித்து ஊன்றுவதற்கு பொருத்தமானது. கடைகளில் கிடைக்கும் ரூட்டெக்ஸ், செரடெக்ஸ் போன்ற ஹார்மோன் கலவைகளை பயன்படுத்தினால் விரைவாக வேரிடும். கிளையின் அடிப்பாகத்தை தண்ணீரிலும், அத்தகைய ஹார்மோன் தூளிலும் முக்கிய பின்பு நடவேண்டும். முல்லை, நாட்டுசெம்பருத்தி, நாட்டு ரோஜா போன்றவற்றின் கிளைகளை நட்டு வளர்க்க அதிக பராமரிப்பு தேவையில்லை. சில வகை பூஞ்செடிகளின் கிளைகளை முறித்து, நடுவதற்கு முன்பு அதில் சிறிதளவு தேன் தடவினால் முறித்து எடுத்த பாகம் காய்ந்துபோகாது. தேனில் இருக்கும் ஹார்மோன்கள் அது வேகமாக வேர்விட துணைபுரியும். சுத்தமான தேனில் தண்ணீர் கலந்து அதில் கிளையின் முறித்த பாகத்தை முக்கி நடவேண்டும்.

சமையலுக்கு உதவும் கருவாப்பட்டையும் கிளைகள் விரைவாக வேர்விட்டு வளர உதவும். நாட்டு கருவாப்பட்டையை நன்றாக இடித்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முறித்த கிளையை முதலில் நீரில் முக்கிவிட்டு பின்பு கருவாப்பட்டை தூளில் முக்கி, வழக்கமான கலவையில் நடவேண்டும்.
இயற்கையான கற்றாழை ஜெல்லில் சாலிஸிலிக் ஆசிட், பலவகையான ஹார்மோன்கள் மற்றும் என்சைம்கள் உள்ளன. அவை கிளையின் முறித்த பகுதியில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தவும், வேர் வேகமாக வளரவும் துணைபுரியும். கற்றாழை ஜெல்லில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கூழாக்கி அதில் கிளையின் அடிப்பாகத்தை அரை மணிநேரம் முக்கிவைத்துவிட்டு நடவேண்டும்.

ஆஸ்பிரின் மாத்திரையும் கிளைகளில் வேகமாக வேர் வளர உதவுகிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் சாலிஸிலிக் அமிலம் போன்று இந்த மாத்திரையில் அஸட்டயில் சாலிஸிலிக் என்ற அமிலம் இருக்கிறது. அதுதான் வேர் வேகமாக வளர காரணமாக அமைகிறது. ஐந்து லிட்டர் தண்ணீரில் ஒரு ஆஸ்பிரின் மாத்திரையை போட்டு கலக்கி அந்த நீரில், முறித்த கிளையை முக்கி ஒரு மணி நேரம் வைத்துவிட்டு பின்பு நடவேண்டும். சிரட்டை கரியில் நீர் சேர்த்து அரைத்து கூழாக்கி அதில் கிளையை முக்கி நடுவதும் நல்லது.

Next Story