சிறப்புக் கட்டுரைகள்

நாய்க்கு உதவும் ரோபோ + "||" + Robot to help the dog

நாய்க்கு உதவும் ரோபோ

நாய்க்கு உதவும் ரோபோ
ஊனமுற்ற நாய்க்கு உதவும் வகையில் ரோபோ ஒன்றை உருவாக்கி அதனை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார், மிலிந்த்ராஜ்.
ரோபோ தொழில்நுட்ப நிபுணரான இவரது கைவண்ணத்தில் 
வடிவமைக்கப்பட்ட ரோபோ நாய்க்கு உணவு பரிமாறுவது, அதன் தேவைகளை பூர்த்தி செய்வது, அதன் ஆரோக்கியத்தை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அந்த நாய் தெருவில் கவலைக்கிடமான நிலையில் இருந்திருக்கிறது. அதனை பார்த்த மிலிந்த்ராஜ், நாயை மீட்டிருக்கிறார். அதுவோ அவரை பார்த்து மிரண்டுபோயிருக்கிறது. அதன் கண்கள், காதுகள் கடுமையாக காயம் அடைந்திருக்கிறது. அதனை யாரோ கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். அந்த மிரட்சியில் மனிதர்களை கண்டாலே பயந்து நடுங்கி இருக்கிறது.

மிலிந்த்ராஜ் அன்போடு பராமரித்ததால் அவரிடம் மட்டும் சற்று நெருக்கம் காட்டி இருக்கிறது. ஆனாலும் பயம் நீங்கவில்லை. அதனால் நாய்க்கு உணவு வழங்குவதற்கு சிரமப்பட்டிருக்கிறார். தான் இல்லாத சமயங்களில் நாயை எப்படி பராமரிப்பது என்றும் யோசித்திருக்கிறார். மற்றவர்கள் யாரையும் நெருங்கவிடாமல் பீதியில் இருந்ததால் தனக்கு பிடித்தமான ரோபோவை நாய்க்கு உதவி செய்யும் விதத்தில் வடிவமைத்துவிட்டார்.

‘‘கொரோனா வைரஸ் பரவல் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்த நாயை மீட்டேன். கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தேன். அவரை பார்த்தும் மிரட்சி அடைந்தது. நாய் எந்த அளவுக்கு அதிர்ச்சிகரமான மனநிலையில் இருக்கிறது என்பதை அவர்தான் எனக்கு விளக்கி புரியவைத்தார். மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள அச்சப்படுவதால் ரோபோ ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்’’ என்கிறார்.

ஏழு மாதங்களாக மிலிந்த் ராஜின் பராமரிப்பில் வளரும் நாய், தற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. வழக்கமான மருந்துகள் மூலம் நாயின் கண் பார்வையை சரி செய்துவிடலாம் என்று கால்நடை மருத்துவர் நம்பிக்கையூட்டி இருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை இடையே சிறந்த பிணைப்பை உருவாக்கும் சாதனமாக ரோபோவை கருதுவதாகவும் மிலிந்த்ராஜ் கூறுகிறார். 

டிரோன் மேன் என்று அழைக்கப்படும் இவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் விருது பெற்றவர்.