சிறுவனை தத்தெடுத்த போலீஸ் நிலையம்


சிறுவனை தத்தெடுத்த போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 28 Feb 2021 5:02 PM GMT (Updated: 28 Feb 2021 5:02 PM GMT)

குடும்பத்தை பிரிந்து தனிமையில் தவித்த 14 வயது சிறுவனை போலீஸ் நிலையமே தத்தெடுத்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.

அந்த சிறுவன் பெயர் அன்மோல். அவனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். தாயார் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் தன்னை கவனித்துக்கொள்ள யாருமின்றி அன்மோல் பரிதவிப்புக்குள்ளாகி இருக்கிறான். அதனை அறிந்த காங்கேர் கேரா காவல் நிலையத்தின் அதிகாரி சாகர், அன்மோலை தத்தெடுத்துள்ளார். அங்கு பணிபுரியும் மற்ற போலீசாரும் சிறுவனை அக்கறையோடு கவனித்து கொள்கிறார்கள். அதனால் சிறுவன் அன்மோல் தனது வீட்டிலும், காவல் நிலையத்திலும் நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறான்.

‘‘அன்மோலுக்கு நன்றாக படித்து வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நகரில் உள்ள சில பள்ளிக்கூடங்களில் விசாரித்து இருக்கிறோம். பள்ளிக்கூடம் செயல்பட ஆரம்பித்ததும் நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இப்போது பெரும்பாலான பொழுதை எங்களுடன் செலவிட்டு வருகிறான்’’ என்கிறார், சாகர்.

சில மாதங்களுக்கு முன்பு அன்மோலின் தாயார் போலீஸ் நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரது உடல்நிலை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது. போலீசார் விசாரித்தபோதுதான் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. உடனே போலீசார் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்குள்ள டாக்டரின் பரிந்துரையின் பேரில் ஆக்ராவில் உள்ள மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்போதுதான் சிறுவன் அன்மோல் நிர்கதியாகி நிற்பது தெரியவர தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். ‘‘அன்மோல் வயதுடைய சிறுவர்கள் இப்படி தனித்துவிடப்படும்போது சரியான வழிகாட்டுதலின்றி குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கிவிடுகிறார்கள். அதனை தவிர்ப்பதற்காகவே தத்தெடுத்திருக்கிறோம்’’ என்கிறார்கள், போலீசார். சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் அன்மோல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

Next Story