4 மாநில தேர்தல்; கேரளா, மேற்கு வங்காளத்தை குறிவைக்கும் இடதுசாரிகள்- மீண்டும் ஆட்சி கைகூடுமா?


4 மாநில தேர்தல்; கேரளா, மேற்கு வங்காளத்தை குறிவைக்கும் இடதுசாரிகள்- மீண்டும் ஆட்சி கைகூடுமா?
x
தினத்தந்தி 28 Feb 2021 11:47 PM GMT (Updated: 28 Feb 2021 11:47 PM GMT)

4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இதில் கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரிகள் கவனத்தை செலுத்தி வருகின்றன.

புதுடெல்லி, 

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடைபெறும் 4 மாநிலங்களில் கேரளாவும், மேற்கு வங்காளமும் இடதுசாரிகளுக்கு முக்கியமான மாநிலங்கள் ஆகும். ஏனெனில் கேரளாவில் தற்போது ஆளும் கட்சியாகவும், மேற்கு வங்காளத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த கட்சியாகவும் இடதுசாரிகள் விளங்கி வருகின்றன. எனவே கேரளாவில் ஆட்சியை தக்க வைக்கவும், மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் அவர்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை ஏறக்குறைய 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகளுக்கு இன்று தேர்தல் பந்தயத்தில் முன்னணிக்கு வர கூட்டணி தயவு தேவைப்படுகிறது. எனவே காங்கிரசுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துள்னர்.

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியடைந்திருந்தாலும், இந்த முறை வெற்றிக்கனியை தட்டிப்பறிக்கும் வேட்கையில் களமிறங்கியுள்ளது. இந்த கூட்டணியில் 3-வது கட்சியாக இந்திய மதசார்பற்ற முன்னணியும் இணைந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் இந்த தேர்தலில் பா.ஜனதா முக்கிய சக்தியாக உருவெடுத்து உள்ளது. எனவே இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரிகளின் மகா கூட்டணி என மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்த மகா கூட்டணி சார்பில் நேற்று கூட்டு பிரசார கூட்டம் ஒன்று கொல்கத்தாவில் நடந்தது. இதில் உரையாற்றிய தலைவர்கள் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். குறிப்பாக பா.ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்கள் பிரதான நோக்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார்.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் பங்கேற்றிருந்தாலும், காங்கிரசின் ராகுல் காந்தியோ அல்லது பிரியங்காவோ இதில் கலந்து கொள்ளவில்லை.

கேரளாவில் காங்கிரசும், இடதுசாரிகளும் எதிரெதிர் திசையில் நின்று களமாடுவதால் இந்த தயக்கம் அவர்களுக்கு இடையே நிலவுவதாக மாநில வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு எதிராகத்தான் இடதுசாரி ஜனநாயக முன்னணி மல்லுக்கட்டுகிறது. அங்கு பா.ஜனதாவுக்கு போதிய பலம் இல்லாததால், காங்கிரஸ், இடதுசாரி அணிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.

கேரளாவில் சமீப ஆண்டுகளாக இரு கூட்டணிகளும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வரும் நிலையில், இந்த முறை இடதுசாரிகளே மீண்டும் அரசை அமைக்கும் எனவும், அது வரலாறு காணாத வகையில் இருக்கும் எனவும் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

மாநிலத்தில் இடதுசாரி அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டங்களே மீண்டும் தங்களுக்கு ஆட்சியை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், இடதுசாரிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு பா.ஜனதாவுடன் இணைந்து காங்கிரசும் சதித்திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார்.

இப்படி மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் ஆட்சியை பிடிக்க நடத்தி வரும் இடதுசாரிகளின் போராட்டத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் கட்சியாக (கூட்டணி கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும்) காங்கிரஸ் இருக்கிறது. இந்த சூழலில் இரு மாநிலங்களிலும் தங்கள் ஆட்சியை நிறுவ பாடுபடும் இடதுசாரிகளின் கனவு பலிக்குமா? என்பது தேர்தல் முடிவுகளின்போது தெரிந்து விடும்.


Next Story