அசாம்: 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


அசாம்: 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2021 11:54 AM GMT (Updated: 10 April 2021 11:54 AM GMT)

அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கவுகாத்தி,

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டசபைக்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்  அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், பல்வேறு காரணங்களுக்காக அசாமின் 3 தொகுதிகளில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக, அம்மாநிலத்தின் கரிம்கஞ்ச் மாவட்டம் ரட்டாபரி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடியில் 2-ம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான காரில் ஏப்ரல் 2-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், ஏப்ரல் 1-ம் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் கஃப்லாங் தொகுதிக்கு உள்பட்ட ஹேட்லீர் பகுதியில் மொத்தம் 90 வாக்காளர்களே உள்ள நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 181 வாக்குகள் பதிவானது. இதனால், அங்குள்ள 2 வாக்குச்சாவடியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மேலும், அம்மாநிலத்தின் சோனை தொகுதியில் உள்ள மத்தியதனிஹாரி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஏப்ரல் 1-ம் தேதி நடந்த 2-ம் கட்ட வாக்குபதிவின்போது தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 4 வாக்குச்சாவடிகளுக்கும் வரும் 20-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story