பசுமை போர்த்திய ‘தனி ஒருவன்'


பசுமை போர்த்திய ‘தனி ஒருவன்
x
தினத்தந்தி 10 April 2021 12:39 PM GMT (Updated: 10 April 2021 12:39 PM GMT)

மணிப்பூரின் மலை உச்சிகளில் நின்று பச்சை பசேலென்ற காடுகளையும் மரங்களையும் பார்ப்பதில் பூரித்துப்போவாராம்.

மேற்கு இம்பாலில் உள்ள உரிப்போக் கைதெம் லேகை என்னும் இடத்தைச் சேர்ந்தவர் மொய்ரங்தம் லோயா. வயது 45. சிறு வயதிலிருந்தே மணிப்பூரின் மலை உச்சிகளில் நின்று பச்சை பசேலென்ற காடுகளையும் மரங்களையும் பார்ப்பதில் பூரித்துப்போவாராம். 2000-ம் ஆண்டில் வெளியூரில் தங்கி கல்லூரிப் படிப்பை முடித்து, சொந்த ஊருக்கு திரும்பிய லோயாவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஒரு மரத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. பசும்போர்வை மூடிய இடங்களெல்லாம் அழிக்கப்பட்டு வெற்றிடமாகியிருந்தது. காடுகள் மீது பெரும் பற்றுக்கொண்டிருந்த லோயாவால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

2002-ல் தன் சொந்த முயற்சியால் காடுகளை உருவாக்க முடிவெடுத்தார். இதற்காக முதலில் அவர் தேர்ந்தெடுத்த இடம் புன்ஷிலாக் என்னும் மலைப்பகுதி. நெற்பயிர் சாகுபடிக்காக அந்த நிலத்தில் ஒரு மரத்தைக்கூட விட்டுவைக்காமல் முற்றிலும் தீயினால் அழித்திருந்தார்கள். அங்கே மீண்டும் பசுமை பூத்துக்குலுங்க வேண்டுமென லோயா முடிவெடுத்தார்.

மருந்து விற்பனை பிரதிநிதியாக, நல்ல சம்பளத்துடன் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளினார். கொஞ்சம் துணிகளையும் உணவுப்பொருள்களையும் எடுத்துக்கொண்டு புன்ஷிலாக்கில் தனக்கென ஒரு வீட்டை அமைத்துக்கொண்டு அங்கேயே வசிக்க ஆரம்பித்தார். ஆறு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, தன் முழு உழைப்பையும் அந்த நிலத்துக்காகவே செலுத்தத் தொடங்கினார். தொடக்கத்தில் மூன்று விதமான மரங்களுக்கு மட்டும் விதைகளை வாங்கிய லோயா, தன் நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியோடு ஓர் அமைப்பாகச் செயல்பட்டு அதை நட்டுமுடித்து செயல்படுத்தினார். அவரின் நம்பிக்கை துளிர் விடத்தொடங்கியது. இயற்கையும் கைகொடுக்க மிக வேகமாக வளர்ந்த அம்மரங்களைப் பார்த்து உற்சாகம் கொண்டார். தொடர்ந்து மூங்கில், ஓக், பலா, தேக்கு போன்ற மரங்களை நட்டார்.

2003-ம் ஆண்டு தன் தோழர்களோடும் தன்னார்வலர்களோடும் இணைந்த லோயா ஒரு குழுவை உருவாக்கி, அதன் வழியாக புன்ஷிலாக்கை மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கிறார்.

புன்ஷிலாக் தற்போது 300 ஏக்கர் நிலப்பரப்பில் செடிகொடிகளுடனும் மூலிகைகளுடனும் காட்டுவிலங்குகளுடனும் அடர்வனமாகக் காட்சியளிக்கிறது. 250-க்கும் மேற்பட்ட தாவர வகைகளும் 25-க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளும் இங்கு காணப்படுகின்றன. பல வகையான பறவைகள், பாம்புகள், மான்கள், எறும்புத் திண்ணிகள், முள்ளம்பன்றிகள், கீரிப்பிள்ளைகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகளுக்கும் புன்ஷிலாக் இன்று புகலிடமாக மாறியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த சுற்றுச்சூழலுக்கும் தற்போதைய சுற்றுச்சூழலுக்குமான வித்தியாசத்தை அப்பகுதி மக்களால் நன்கு உணரமுடிகிறது.

‘‘வெப்பநிலை வெகுவாக இங்கே குறைந்திருக்கிறது. ஆண்டு முழுமைக்கும் நாங்கள் இப்போது பறவைகளின் கீச்சொலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்’’ என்கின்றனர் அப்பகுதி மக்கள். இப்பகுதி மக்களின் கவனத்தை இந்த வனம் ஈர்த்திருக்கிறது.

உள்ளூர்வாசிகளும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இங்கே வந்து இவ்விடத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். லோயாவைப் பொறுத்தவரை புன்ஷிலாக் அவரின் வாழ்நாள் கனவு.

Next Story