புதுமைகண்ட பெண்ணினாய் வா.. வா..


புதுமைகண்ட பெண்ணினாய் வா.. வா..
x
தினத்தந்தி 11 April 2021 2:22 PM GMT (Updated: 11 April 2021 2:22 PM GMT)

கொரோனா பீதி மற்றும் முழு ஊரடங்கால் உலகம் தளர்ந்துபோய் கிடந்த காலகட்டத்தில் லட்சுமி என்.மேனன் உற்சாகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி புதுமையாக எதையாவது உருவாக்கி மக்களின் துயரைத் துடைத்துக்கொண்டிருந்தார். மக்களை ஒருங்கிணைத்து, மக் களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்கள் மகத்துவமானவை. மக் களுக்கு அவை மிகுந்த பலன் அளித்து வருவதால், லட்சுமியை விருதுகள் தேடிவந்துகொண்டிருக்கின்றன.

இவர் சமூக சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ள, இவர் பார்த்த ஒரு காட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது.

‘‘நான் எவ்வளவோ முயற்சித்தும் என்னால் மறக்க முடியாத காட்சி அது. ஒரு பிஞ்சுக்குழந்தை துளிஅளவு துணிகூட இல்லாமல் கட்டாந்தரையில் விரலை சப்பியபடி படுத்துக்கிடந்தது. அருகில் இருந்த அதன் தந்தை, காற்றை ஊதி பலூனை நிரப்பிக்கொண்டிருந்தார். அதன் தாய், சற்று தூரத்தில் அதை கொண்டுபோய் விற்பனை செய்துகொண்டிருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் நான் இந்த காட்சியை கண்டேன்.

`இது போன்ற குழந்தைகளுக்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்' என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், கோட்டயத்தில் தையல் யூனிட் நடத்திக்கொண்டிருந்த என் தோழி போனில் அழைத்தாள். `தைப்பதற்காக அளவெடுத்து வெட்டிப்போட்ட துணிகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அதை எதற்காவது பயன்படுத்த முடியுமா? என்று சொல்' என்றாள். உடனே நான், அந்த துணிகளை கொண்டு பிஞ்சுக்குழந்தைகளுக்கு சிறிய படுக்கை உருவாக்க முடியுமா என்று யோசித்தேன். என்னால் அதை உருவாக்க முடிந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்..’’ என்கிறார், லட்சுமி.

புதுமையாக எதையாவது உருவாக்கி, மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்வது லட்சுமியின் வழக்கம். அவரது கண்டுபிடிப்புகள் எளிமையானதாகவும், பயன்மிக்கதாகவும் இருக்கும்.

‘‘பெங்களூருவில் பாலத்தின் அடியில் அந்த காட்சியை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதும், தோழியின் தையல் யூனிட்டிற்கு சென்று வெட்டிப்போட்ட துணிகளை எல்லாம் சேகரித்தேன். அந்த பகுதியில் உள்ள பெண்களை அழைத்து, துணிகளை கோர்த்து, கூந்தல் பின்னுவதை போன்று பின்னி சிறிய படுக்கைகளாக உருவாக்க சொன்னேன். சிறப்பாக அதனை உருவாக்கி ஏழை பிஞ்சுக் குழந்தைகளுக்கு வழங்கினேன்.

கொரோனோவால் திடீரென்று ஊரடங்கு போடப்பட்டதும் அந்த யூனிட்டில் துணிகள் தைப்பது முடங்கியது. அவர்கள் பி.பி.ஈ. கிட், மாஸ்க் தயாரிக்கத் தொடங்கினார்கள். கொரோனாவின் தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் நோயாளிகள் படுத்த படுக்கைகளை எரித்தார்கள். அதனால் படுக்கைகளின் தேவை அதிகமாக இருந்தது. நான் பி.பி.ஈ. கிட் மற்றும் மாஸ்க்குகளின் வெட்டப்பட்ட பிசுறுகளை எல்லாம் சேகரித்தேன். இரண்டரை கிலோ பிசிறுகளில் ஒரு படுக்கையை உருவாக்கிவிட்டேன். கொரோனா நோயாளிகளுக்கு இது மிக செலவு குறைந்த படுக்கையாகிவிட்டது.

அத்தகைய படுக்கைகளை தயார் செய்து, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள கொரோனோ நோயாளிகளுக்கு வழங்கினோம். `வேல்ட் எக்கனாமிக் போரம்' 2021 தாவோஸ் அஜண்டாவில் தென்னிந்தியாவில் உள்ள திட்டமாக அதை சேர்த்து அங்கீகரித்தனர். கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலில் ஐ.நா.சபை, கேரளாவில் இருந்து எங்களது இந்த திட்டத்தை இணைத்துக்கொண்டது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோது பத்துக்கும் அதிகமான புதிய திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி மக்களுக்கு உதவினோம். அத்தகைய சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன’’ என்கிறார், லட்சுமி.

தினமும் வீடுகள்தோறும் சென்று அரிசி மற்றும் தானியங்களை சேகரித்து, மாதத்திற்கு ஒருமுறை ஏழைகளுக்கு கொடுக்கும் `கோ'வீடு என்ற திட்டத்தையும் லட்சுமி நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்தை இப்போது சென்னையில் உள்ள கலை மையமான தட்ஷின்சித்ரா ஏற்றெடுத்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

‘‘பலரும் என்னிடம் இதுபோன்ற திட்டங்கள் உங்களிடம் எப்படி உதிக்கிறது என்று கேட்கிறார்கள். நான் என்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். அதுதான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக காரணம். எங்கள் வீட்டை சுற்றியுள்ள வழிப்பாதைகளில் ஏராளமான மரங்கள் உள்ளன. அவைகளில் ஒவ்வொரு மரத்தையும் நான் நேசித்து, அவைகளை `லேன்ட் மார்க்' ஆக வைத்திருக்கிறேன்.

கொரோனா ஊரடங்கு முடிந்து தோழியின் தையல் கடைக்கு சென்றபோது நூலை சுற்ற பயன்படுத்தும் பெரிய ஹார்ட்போர்டுகளை பார்த்தேன். அவைகளை பயன்படுத்தி செடிகளை நடுவதற்கு திட்டமிட்டேன். செடிகளை அதில்வைத்து அப்படியே மண்ணுக்குள் இறக்கி விடலாம். அது கனமான அட்டை என்பதால் காலப்போக்கில் அப்படியே மண்ணோடு மக்கிப்போய்விடும். அந்த திட்டத்திற்கு `கைத்தரி டூ தைத்தரி' என்று பெயரிட்டேன். இவை அனைத்தும் ஏதோ ஒன்றை பார்த்தவுடன் என் மனதில் தோன்றும் திட்டங்கள். இவற்றுக்கு நான் காப்புரிமை எதுவும் பெறுவதில்லை’’ என்கிறார்.

இவர் தனது வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் அனைத்தையும் தந்தை வி.கே.நாராயணனிடம் இருந்தும், தாயார் ஸ்ரீதேவியிடம் இருந்தும் கற்றுக்கொண்டதாக கூறுகிறார்.

"நான் கல்லூரி படிப்பை முடித்ததும் தொடுபுழாவில் உள்ள எங்கள் விவசாய பகுதிக்கு என்னை அனுப்பி, விவசாயத்தை கற்றுக்கொள்ளும்படி அப்பா சொன்னார். பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை நான் உணர்வதற்காகவே அவ்வாறு செய்தார். முதலில் எனக்கு அவரது செய்கை கோபத்தை உருவாக்கினாலும், பின்பு அதுவே எனக்கு வாழ்க்கை பாடமானதை உணர்ந்தேன். எங்கே நமக்கு பிரச்சினை உருவாகிறதோ அங்கே நமக்கான தீர்வுகளும் இருக்கும். அதனால் நான் பிரச்சினைகளை பிரச்சினையாக பார்க்கமாட்டேன்" என்று கூறும் லட்சுமி, முதன்முதலில் தனக்கு சேவை உணர்வு தோன்றிய அனுபவத்தையும் சொல்கிறார்!

‘‘புற்றுநோய் பாதித்த எனது உறவினருக்கு உதவுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள சிகிச்சை மையத்திற்கு சென்றிருந்தேன். கீமோதெரபிக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்காக அங்குள்ள மருந்துகடைக்கு சென்றேன். நிறைய மருந்துகளும், சிரிஞ்சுகளும் இருந்தன. அவைகளை எல்லாம் ஒரு பையில் போட்டு தாருங்கள் என்றேன். அவர்கள் `எங்களிடம் பை இல்லை. நீங்கள் எப்படியாவது கொண்டு செல்லுங்கள்' என்றார்கள். உடனே எனது துப்பட்டாவை ஒரு பை போன்று மடித்து அதில் மருந்துகளை வாங்கிச்சென்றேன். அதன் பிறகுதான் என்னிடமிருந்து சூழ்நிலைக்கு ஏற்ப சின்னச்சின்ன திட்டங்கள் உதயமாகின.

எனது உறவினர்களும், தோழிகளும் விளக்கு ஏற்ற திரி வேண்டும் என்று கேட்டார்கள். மறதி நோயால் பாதிக்கப்பட்ட என் பாட்டியையும், வருமானத்திற்கு வழியில்லாத முதிய பெண்களையும் ஒருங்கிணைத்து அவர்களை திரி தயார் செய்ய பழக்கினேன். பின்பு அதை நான் தொழிலாக்கியதால் அவர்களுக்கு வருமானம் கிடைத்தது. அதோடு தாங்கள் தயாரிக்கும் திரிகள் கோவில்களில் விளக்கு ஏற்ற பயன்படுவதால் மூதாட்டிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். அது பற்றி நடிகர் அமிதாப்பச்சனும் பேசினார். அதனால் இந்தியா முழுவதும் அதற்கு முக்கியத்துவம் கிடைத்தது.

அப்படித்தான் விதை பேனா திட்டமும் உருவானது. பேனாவின் மேல்பகுதியில் உள்ள இடத்தில் விதைகளை சேகரித்துவைத்தோம். அந்த பேனாவை பயன்படுத்திவிட்டு வெளியே வீசினால், காலப்போக்கில் அதில் இருக்கும் விதைகள் மூலம் மரங்கள் தோன்றும். அந்த விதை பேனாக்களுக்கு உலகளாவிய காப்புரிமையை பெற்றிருக்கிறேன். எனது சுயலாபத்திற்காக அதை செய்யவில்லை. தற்போது என்னோடு சேர்ந்து விதை பேனாக்களை உருவாக்குபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த காப்புரிமையை பெற்றிருக்கிறேன்’’ என்கிறார்.

கோட்டயத்தில் உள்ள கல்லூரியில் ஹோம் சயின்ஸ் பட்டம் பெற்ற லட்சுமி, பின்பு அமெரிக்கா சென்று பேஷன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங், ஜூவல்லரி மேக்கிங் போன்ற கலைகளை கற்றிருக்கிறார். அது தொடர்புடைய வேலையும் அங்கே லட்சுமிக்கு கிடைத்தது. ஆனாலும் பெற்றோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களை கவனித்துக்கொள்வதற்காக அவர் கேரளாவுக்கு திரும்பவேண்டியதாயிற்று.

லட்சுமி செயல்படுத்தும் திட்டங்களில் குறிப்பிடத்தக்கது, சம்மான். போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போதுமான உடைகள் இல்லை என்பதை கேள்விப்பட்ட இவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடைகளை கைத்தரியில் தயார்செய்து அனுப்புகிறார். ஐ.நா.சபையின் உதவியுடன் செயல்படுத்தப்படும் அந்த திட்டத்திற்குதான் சம்மான் என்று பெயர்.

இவர் தனது புதுமைத் திட்டங்களை செயல்படுத்த நிரந்தர குழுக்கள் எதையும் வைத்திருக்கவில்லை. தேவைப்படும்போது மட்டும் அதற்கான குழுக்களை உருவாக்கிக்கொள்கிறார். "இத்தகைய திட்டங்கள் மூலம் பணம் கிடைப்பதில்லை. அதற்கு கிடைக்கும் வரவேற்பையே லாபமாக கருதுகிறேன்" என்று புன்னகையோடு லட்சுமி சொல்கிறார். ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடுகட்டிக்கொடுக்கும் திட்டம் ஒன்றையும் இவர் நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். புதுமைப் படைக்கும் இந்த பெண்ணுக்கு புகழ் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

Next Story