பிரிட்ஜ்: மீன் கெட்டுப்போகாமல் பாதுகாப்பது எப்படி?


பிரிட்ஜ்: மீன் கெட்டுப்போகாமல் பாதுகாப்பது எப்படி?
x
தினத்தந்தி 15 April 2021 11:55 AM GMT (Updated: 15 April 2021 11:55 AM GMT)

நமக்கு தேவைப்படும் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட சீதோஷ்ணநிலையில் பராமரித்து, நாம் பயன் படுத்தும் விதத்தில் பாதுகாக்க பிரிட்ஜ் எனப்படும் ரெப்ரிஜிரேட்டரை பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும் ஒரு டிகிரி செல்சியஸ்க்கும் ஐந்து டிகிரி செல்சியஸ்க்கும் இடையில் அதன் சீதோஷ்ணநிலை இருக்கும். ஐந்து டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரித்தால் பிரிட்ஜ் உள்ளே பாக்டீரியாக்களும், இதர உயிரிகளும் பெருகி அங்கிருக்கும் பொருட்களை மோசமாக்கிவிடும். அதனால் எல்லா நேரமும் அதன் சீதோஷ்ணநிலை சீராக இருக்கும் விதத்தில் பராமரிக்க வேண்டும். அதுபோல் பிரிட்ஜின் உள்ளே எந்த பொருட்களை, எந்த இடத்தில், எப்படி பாதுகாக்கவேண்டும் என்பதையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும்.வீடுகளில் பிரிட்ஜை வைத்திருக்கும் அறை பெரும்பாலும் சூடாகத்தான் இருக்கும். அதனால் அடிக்கடி பிரிட்ஜை திறந்தால், வெளியே இருக்கும் சூடு உள்ளே சென்று அதன் இயல்பான சீதோஷ்ணநிலையில் மாற்றத்தை உருவாக்கிவிடும். அதாவது ஐந்து டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாகிவிடும். 

அதனால் பிரிட்ஜை அடிக்கடி திறக்காமல், ஒரே நேரத்தில் திறந்து தேவைப்படும் அனைத்து பொருட்களையும் எடுத்து வெளியேவைத்து விடுங்கள். பிரிட்ஜில் அனைத்து பொருட்களையும் அதற்குரிய இடத்தில் அடுக்கிவைத்தால், வேகமாக பொருட்களை வெளியே எடுத்துவிடமுடியும்.
பிரிட்ஜின் உள்ளே அதிகமாக குளிர்வது, பிரீசரின் கீழ் அறையாகும். பிரிட்ஜின் அடியில் இருக்கும் அறையிலும், கதவுப் பகுதியிலும் குளிர் குறைவாக இருக்கும். இதனை கருத்தில்கொண்டு அதன் உள்ளே பொருட்களை வைக்கவேண்டும். வெண்ணெய், தயிர், டெஸார்ட் வகைகளை கதவின் மேல்பகுதியில் வையுங்கள். சமைத்த பொருட்களில் மீதம் வந்ததை அதன் கீழே அதாவது நடுப்பகுதியில் வையுங்கள். இறைச்சி வகைகள், மீன் போன்றவற்றை கதவின் கீழ்ப் பகுதியில் வைக்கவேண்டும். இதனால் மேலே இருப்பவைகளில் இருந்து தண்ணீர் வழிந்தாலும், கீழே உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

இரண்டு நாட்கள் கழித்து பயன்படுத்தக்கூடிய மாமிசம் என்றால் பிரீசரில் வைப்பதே சிறந்தது. அதுதான் மாமிசத்தை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் வழி. முட்டை டிரேக்களை கதவில் வைக்கக்கூடாது. அவற்றை பிரிட்ஜின் நடுப்பகுதியில் வைப்பதே சிறந்தது. காய்கறிகளை அடியில் இருக்கும் வெஜிடபிள் டிரேயில் வையுங்கள். பிரிட்ஜின் கொள்ளளவை உணர்ந்து பொருட்களை அடுக்கவேண்டும். அளவுக்கு அதிகமாக உள்ளேவைத்தால் குளிரான காற்று எல்லா இடங்களிலும் பரவாமல் உணவுப் பொருட்கள் கெட்டுப்போய்விடக்கூடும்.சமைத்த உணவு அதிகம் இருந்தால் அதனை ஒரே பெரிய பாத்திரத்தில் உள்ளேவைக்காமல், சிறிய சிறிய பாத்திரங்களில் வைப்பது நல்லது. அப்போதுதான் அவை நன்றாக குளிரும். தேவைக்கு ஏற்ற அளவிலான பாத்திரத்தில் இருப்பதை மட்டும் எடுத்து பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால் அதிக உணவுப் பொருட்கள் வீணாகுவதை தவிர்க்கலாம். சமைத்த உணவுகளை சூடு ஆறிய பின்பே பிரிட்ஜின் உள்ளே வைக்கவேண்டும். சூடாக வைத்தால் அது பிரிட்ஜின் சீதோஷ்ணநிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சமைக்காத இறைச்சி மற்றும் மீன்களை பாலீத்தின் கவர்களில் நன்றாக பொதிந்து உள்ளேவைக்கவேண்டும். இல்லாவிட்டால் கெட்டியாகி உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிடும். சமைக்காத அசைவப் பொருட்களுடன் சமைத்த அசைவ உணவுகளை சேர்த்து வைத்துவிடக் கூடாது.சமைக்காத இறைச்சியையோ, மீனையோ மூன்று, நான்கு நாட்கள் பிரீசரில் வைத்துவிட்டு அதை டிபுரோஸ்ட் செய்ய, பிரிட்ஜின் உள்ளேயே வைப்பதே சிறந்தது. அதாவது பிரீசரில் இருப்பதை எடுத்து, பிரிட்ஜின் கீழ் அறையில் 24 மணி நேரம் வைத்திருந்தால் டிபுரோஸ்ட் ஆகிவிடும். இவ்வாறு செய்யாமல் பிரீசரில் இருக்கும் இறைச்சியை அப்படியே எடுத்து சுடுநீரில் போடுவதும், குளிர்ச்சியை மாற்ற வெகுநேரம் வெளியே எடுத்து வைத்திருப்பதும் அந்த உணவுப்பொருள் கெட்டுப்போக வழிவகுக்கும்.

ஒருமுறை டிபுரோஸ்ட் செய்த மாமிசத்தை, முடிந்த அளவு விரைவாக சமைத்து சாப்பிட்டுவிட வேண்டும். மாமிசம், மீன் போன்றவைகளை கூடுதல் நாட்கள் வைத்து பயன்படுத்த விரும்புகிறவர்கள் அதனை துண்டுகளாக்கி தனித்தனி கவரில் அடைத்துவைப்பதே சரியான வழி. அன்றன்றைய தேவைக்கு ஒவ்வொரு கவரில் இருப்பதை எடுத்து பயன்படுத்த வேண்டும்.பிரிட்ஜில் வைத்திருக்கும் சமைத்த உணவை எடுத்து சூடாக்கும்போது அதில் இருந்து ஆவி வரும் வரை சூடாக்குங்கள். அப்போதுதான் இதில் இருக்கும் தொற்றுக்கள் அழியும். பெயரளவுக்கு சூடாக்கி சாப்பிட்டால், அதில் இருக்கும் தொற்றுக்களால் அது விஷத்தன்மை கொண்ட உணவாகிவிடும். முடிந்த அளவு உணவினை அப்போதே சமைத்து, சூடாக சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

Next Story