நன்றி பாராட்டும் நடைமன்னன்


நன்றி பாராட்டும் நடைமன்னன்
x
தினத்தந்தி 15 April 2021 12:27 PM GMT (Updated: 15 April 2021 12:27 PM GMT)

உலகையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று தனது பரவலை தொடங்கி, ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது. அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இரண்டாவது அலையும் வீச தொடங்கி இருப்பதால் பலரும் பீதியில் இருக்கிறார்கள்.

கொரோனா பரவ தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் தங்கள் உயிரை பயணம் வைத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பணியில் முன்கள பணியாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டார்கள். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் என தொடங்கிய அவர்களின் சேவை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.தன்னலமற்ற அவர்களது சேவையை கவுரவிக்கும் விதமாக ‘மனித நேய நடைபயணம்’ மேற்கொண்டு இருக்கிறார், பி.என்.பரத். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த இவர், 
‘வால்க் ஆப் ஹூமனிட்டி’ என்ற வாசகத்துடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4 ஆயிரம் கி.மீ. தூரம் நடந்தே பயணித்திருக்கிறார். 33 வயதாகும் பரத் கடந்த டிசம்பர் மாதம் 11-ந் தேதி தனது பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி இருக்கிறார். தினமும் 40 முதல் 50 கி.மீ. தூரத்தை பயண இலக்காக நிர்ணயித்திருந்திருக்கிறார். 99 நாட்களில் காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரை 
சென்றடைந்திருக்கிறார். 11 மாநிலங்கள் வழியாக இவரது பயணம் தொடர்ந்திருக்கிறது. பரத், கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்திருக்கிறார். வேறு சில தொழில்களையும் செய்து வந்திருக் கிறார். ஊரடங்கு காலகட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்.

"நாடு தழுவிய ஊரடங்குக்கு மத்தியில் எல்லோரையும் போலவே நானும் வீட்டில் முடங்கி இருந்தேன். தினசரி தொலைக்காட்சியை பார்த்து கொரோனா கள நிலவரத்தை தெரிந்து கொண்டேன். தங்கள் உயிரை பயணம் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்கு பவர்களை பற்றி சிந்தித்தேன். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தாமாகவே முன்வந்து சேவையாற்றியவர்களை நினைத்து பெருமிதம் கொண்டேன். நாமும் சமூகத்திற்கு ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன். கொரோனா போர் வீரர்களாக மாறி 
சேவையாற்றியவர்களுக்கு மரியாதை செய்வதற்கு முடிவு செய்தேன். துயரத்தில் தவித்தவர்களுக்கும் மனிதாபிமான அடிப் படையில் நிறைய பேர் உதவினார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி சொல்லும் விதமான எனது பயணத்தை தொடங்கினேன்’’ என்கிறார்.

பரத், நடைபயணத்தின்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறார். ‘‘நெடுஞ்சாலைகளின் வழியே பயணத்தை தொடர்ந்தபோது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்கு ‘மரம் எங்கு இருக்கிறது?’ என்று தேடவேண்டி இருந்தது. அதனால் பயணத்தின்போது மக்களை சந்திக்கும்போதெல்லாம் மரக்கன்று நடுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். மக்களும் ஒத்துழைப்பு தந்தார்கள். அதன்பலனாக பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன’’ என்கிறார்.இரவு நேரங்களில் உணவகங்களின் வாசல், பெட்ரோல் பங்குகளில் தங்கி இருக்கிறார். சில இடங்களில் உள்ளூர் மக்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு உணவு கொடுத்தும் வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள். சராசரியாக 42 கிலோ மீட்டர் 
தூரத்தை 9 மணி நேரத்துக்குள் கடந்திருக்கவும் செய்திருக்கிறார்.

‘‘கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களை அனைவரும் நாடினார்கள். மருந்துகள், பானங்களையும் உட்கொண்டார்கள். அத்தகைய பொருட்களை வாங்க முடியாத நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள். இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தன்மை நமது உடலுக்கு இருக்கிறது. அவற்றுள் நடைப்பயிற்சியும் ஒன்று. அதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் நடைபயணத்தை தொடங்கினேன். நான் எங்கு தங்கி இருந்தாலும் அடுத்த 50 கி.மீ. தூரத்தில் மக்களை சந்தித்து கலந்துரையாட முடியுமா? என்று கேட்பேன். நெடுஞ்சாலை வழியே நடந்து சென்றாலும் மக்கள் வசிக்கும் ஊர் பகுதிக்குள் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதுதான் எனக்கு உற்சாகத்தையும், மன நிறைவையும் கொடுத்தது’’ என்கிறார்.

தனியாக பயணம் மேற்கொண்டாலும், பல நண்பர்களும் நலம் விரும்பிகளும் பக்கபலமாக இருந்ததாகவும், அதுவே தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வித்திட்டது என்றும் சொல்கிறார்.

Next Story