சரியாக உட்காராவிட்டால் `தாம்பத்யம்' பாதிக்கும்


சரியாக உட்காராவிட்டால் `தாம்பத்யம் பாதிக்கும்
x
தினத்தந்தி 15 April 2021 12:38 PM GMT (Updated: 15 April 2021 12:38 PM GMT)

முதுகு, கழுத்து மற்றும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அடிக்கடி வலியை உணர்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் சரியாக அமராததே அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அன்றாட பணிகளை செய்யும்போதும் சரியான நிலையில் உடல் இயக்கத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

உட்கார்ந்து வேலை பார்க்கும்போதும், தூங்கும்போதும், ஓய்வெடுக்கும்போதும் கூட சரியான நிலையில் உடலை இயக்கவேண்டும். ‘நேராக உட்கார்ந்து, நேராகவே எழ வேண்டும். நேராகவே நிற்க வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு பின்னால் சில அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. தவறான தோரணையில் உட்கார்வது அல்லது நிற்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினை களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.சரியான நிலையில் உடலை பயன் படுத்தி இயக்காவிட்டால், ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்ப்போம்.

உடலுக்கு சரியான வடிவத்தையும், தோற்றத்தையும் முதுகெலும்பு தருகிறது. உடலானது ‘எஸ்’ வடிவ அமைப்பு கொண்டது. தவறான உடல் தோரணையில் நிற்பதற்கோ, உட்காருவதற்கோ பழகிவிட்டீர்களென்றால் காலப்போக்கில் உடல் வடிவத்தில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அப்படி தவறான தோரணையில் இருக்கும்போது முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். உடலில் ஏற்படும் அதிர்வலைகளை தாங்கும் வகையில் முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமான தோரணை அதன் இயல்பான செயல்திறனை பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.கணினி முன்பு 
அமர்ந்து வேலை செய்யும்போது தலை முன்னோக்கி செல்வது இயல்பானது. வேறு ஏதேனும் வேலையில் ஆழ்ந்திருந்தாலோ, நீண்ட நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலோ தலையின் தோரணையை கவனத்தில் கொள்ளமாட்டார்கள். தலையும், கழுத்தும் சம நிலையில் இருக்க வேண்டும். முன்னோக்கி தலையை வைத்திருக்கும்போது தசைகள் இறுக்கமடைந்து கடுமையான கழுத்து வலிக்கு வித்திடும். தசைகளும் பாதிப்புக்குள்ளாகும்.

மோசமான உடல் இருப்பு செரிமானத்தையும் பாதிக்கும். உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்கள் உடல் தோரணையில் கவனம் செலுத்தாவிட்டால் குடல் உறுப்புகள் சுருங்கிவிடும். அதனால் செரிமான செயல்முறை மெதுவாக நடைபெறும். வயிறு சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகும்.மோசமான உடல் தோரணை உடலின் ஆற்றல் மட்டங்களையும் பாதிக்கும். உடல் சோர்வையும் 
ஏற்படுத்திவிடும். நல்ல தோரணையுடன் செயல்பட்டால்தான் உடல் இயக்கம், நடை போன்ற உடல் ஆற்றல் திறனை மேம்படுத்த முடியும்.நாள் முழுவதும் தவறான முறையில் அமர்ந்திருந்தால், ரத்த ஓட்ட சுழற்சியில் அதன் தாக்கம் வெளிப்படும். நரம்பு களுக்கு அழுத்தம்கொடுத்து உடல் வலியை ஏற்படுத்தும். ஆரோக்கியத்திற்கும் கெடுதலாக அமையும். அதனால் எப்போதும் சரியான நிலையிலே உட்காரவேண்டும்.

பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சினை முதுகுவலி. உடல் தோரணைக்கும், முதுகு வலிக்கும் உள்ள தொடர்பை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. கீழ் முதுகில் வலி இருந்தால் சரியான நிலையில் உட்கார முடியாது.கழுத்து, தோள்பட்டை, கீழ்த்தாடை எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தாடையை சரியான தோரணையில் வைக்காதது காரணமாக இருக்கலாம். அது உணவு உண்ணும்போது நெருக்கடியை ஏற்படுத்தும்.ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் மூச்சை உள் இழுத்து- வெளியே விட போதுமான இடைவெளி தேவை. உடல் இருப்புநிலை சரியாக அமையாவிட்டால், சுவாச தசையாக செயல்படும் உதரவிதானத்தின் செயல்பாட்டில் பாதிப்பு உண்டாகும்.

உடல் இருப்பு நிலை சரியாக அமையாவிட்டால் முதுகெலும்பு, முழங்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். முழங்கால் மற்றும் முதுகுத் தண்டுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் கீல்வாதம் ஏற்படும். உடல் இருப்பு நிலையை சரியாக அமைத்துக்கொள்கிறவர்கள் தாம்பத்ய செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். அவர் களது பாலியல் செயல்பாடுகளும் மேம்பட்ட நிலையில் இருக்கும். உடல் இருப்பு நிலை முறையாக அமையாவிட்டால் இடுப்பு தசைகள் இறுக்கமடைந்து அவர் களது பாலியல் வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகும்.

Next Story