ஏ.சியால் ஏற்படும் இன்னல்கள்


ஏ.சியால் ஏற்படும் இன்னல்கள்
x
தினத்தந்தி 15 April 2021 1:08 PM GMT (Updated: 15 April 2021 1:08 PM GMT)

கோடை காலம் என்பதால், குளிர்சாதன பெட்டியின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதனால் உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வந்தாலும், குளிர்சாதன பெட்டி வீட்டின் அங்கமாகவே ஆகிவிட்டது.

ஆனால், நீண்ட நேரம் ஏ.சி. உபயோகிப்பது உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்கும். உடலின் வெப்பநிலையும், சருமமும் இயற்கையாகவே வளிமண்டல தன்மைக்கு இசைந்து கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. குளிர்சாதன பெட்டி அறையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்ள முனையும். அதில் இருந்து வெளிப்படும் செயற்கை குளிர் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. வெளிப்புற சருமத்தை பாதிக்கக்கூடும்.

குளிரூட்டப்பட்ட சூழலில் அமர்ந்திருந்துவிட்டு பின்னர் சுட்டெரிக்கும் வெயிலில் நடமாடும் போது உடலின் வெப்பநிலையில் திடீர் மாற்றம் உண்டாகும். அது சருமத்தை மட்டும் பாதிக்காமல் மன அழுத்த பிரச்சினைக்கும் வித்திடும். நிறைய பேர் குளிர்சாதன பெட்டி வீசும் குளிர்ந்த காற்றின் வாசத்தில் இருக்கும்போது தண்ணீர் பருகும் வழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை. கோடையில் நிலவும் வெப்பதாக்கத்திற்கு ஈடு கொடுக்க உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியமானது. இல்லாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏ.சி.யில் இருந்தாலும் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஏ.சி.யை சரியாக பராமரிக்காவிட்டால் ஒவ்வாமை பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். சருமத்தில் தடிப்பு, கொப்புளம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். ஏ.சி.யில் இருக்கும் பில்டரையும் அவ்வப்போது சுத்தப் படுத்தவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும். ஒருசிலர் ஆண்டுக்கணக்கில் பில்டரை சுத்தப்படுத்தாமல் வைத்திருப்பார்கள். 

அதில் படிந்திருக்கும் தூசுகள், நுண் கிருமிகள், அழுக்குகள் குளிர் காற்றின் மூலம் பரவி சுவாசக்கோளாறு பிரச்சினைகளை உருவாக்கும். தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும்.

4-6 வாரங்களுக்கு ஒருமுறை குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பில்டரை மாற்ற வேண்டும். சரும மருத்துவர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர்களையும் பயன்படுத்தவேண்டும். அதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும். சுடுநீரில் குளிப்பதை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். வீரியமிக்க குளியல் சோப்பினையும் பயன்படுத்தக் கூடாது.

Next Story