உன்னதமான உலர் பழங்கள்


உன்னதமான உலர் பழங்கள்
x
தினத்தந்தி 16 April 2021 12:00 PM GMT (Updated: 16 April 2021 12:00 PM GMT)

உலர்ந்த பழங்கள் என்பவை, பழங்களை வெப்பத்தில் உலர்த்தி, அவற்றில் இருக்கும் நீரை அகற்றும் முறையாகும். பொதுவாக உலர்ந்த வகை பழமாக அதிக அளவில் அறியப்படுவது திராட்சைதான்.

அதைத் தொடர்ந்து ப்ரோன்ஸ், பேரீச்சை, அத்திப்பழம் மற்றும் ஆப்ரிகாட் போன்றவையும் இந்த வரிசையில் அடங்கும். இதுபோன்ற உலர் பழங்களின் நன்மைகள் குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உலர்ந்த பழங்கள், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மேலும் இது தொற்று நோய்களுக்கு எதிராக, ஒரு தடையை உருவாக்கி நம்மை பாதுகாக்கிறது. பொட்டாசியம், இரும்பு, போலெட், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த இவ்வகை உலர் பழங்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியதாகவும் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது.

* எடை குறைப்பிற்கு

எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு, உலர்ந்த பழங்கள் உதவி புரிகின்றன. உலர்ந்த ஆப்ரிகாட், பேரீச்சை, ப்ரோன்ஸ் மற்றும் திராட்சை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் பசியைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் நீங்கள் எடை குறைய இவை உதவுகின்றன.

* இதய நலனை மேம்படுத்த

உலகெங்கிலும் இறப்பை ஏற்படுத்துவதில், இதய நோய்களுக்கு முக்கிய பங்குண்டு. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக முக்கியமாகும். திராட்சை போன்ற உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்து கலவைகள் உள்ளன. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது உடல் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. அதன்மூலம் இதுபோன்ற காரணிகளால் இதய நோய்கள் உருவாகும் அபாயத்தை சரிசெய்ய உதவுகிறது.

* நீரிழிவு அபாயத்தை தடுக்கிறது

நீரிழிவு என்பது, உலகில் அதிகமான அளவு மக்களிடம் காணப்படும் நோய்களில் ஒன்றாகும். இந்த நோயை பொறுத்தவரை, உணவு பழக்கமே இதற்கு முக்கிய பங்காற்றுகிறது. உலர்ந்த பழங்களை அளவோடு உட்கொள்ளும்போது, அவை உடலில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இந்த உலர்ந்த பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கணையத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் தடுக்கிறது.

* ரத்த சோகையை தடுக்க

திராட்சை, பேரீச்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்களில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே அவை ரத்தசோகையை சரிசெய்ய உதவுகின்றன. இவற்றில் வைட்டமின் - பி, பாஸ்பரஸ் மற்றும் செம்பு போன்ற தாதுக்கள் உள்ளன. அவை ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகின்றன.


Next Story