உழைப்பவர்களுக்கான தினம்


உழைப்பவர்களுக்கான தினம்
x
தினத்தந்தி 26 April 2021 10:24 AM GMT (Updated: 26 April 2021 4:22 PM GMT)

வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும், நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாய வேலைக்கு, தொழிலாளர்களை நிர்ப்பந்தப்படுத்தின.

தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் அடிப்படையானது, உழைக்கும் மனிதனின் ஒரு நாளை, எட்டு மணி நேரத்துடன் முடிச்சிடுகிறது. அதாவது 24 மணி நேரத்தில், எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு என்பதே இதன் அடிப்படை.

வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும், நாள் ஒன்றுக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாய வேலைக்கு, தொழிலாளர்களை நிர்ப்பந்தப்படுத்தின. இதற்கு எதிரான குரல், பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. 18-ம் நூற்றாண்டின் இறுதி காலத்திலும், 19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும், உழைக்கும் தொழிலாளர்களின் போராட்டம் வலுக்கத் தொடங்கியது.

உலகம் முழுவதும் போராட்டம், கண்டனக் குரல் எழுந்தாலும், அதில் குறிப்பிடும்படியாக இருந்தது, இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கத்தின் போராட்டம். இந்த இயக்கம், 10 மணி நேர வேலை என்பதோடு சேர்த்து, 6 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியது.

1889-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி, சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் பாரீசில் கூடியது. இதில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்னெடுப்பது என்றும், 1890-ம் ஆண்டு மே 1-ந் தேதி, உலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம்தான், பின்னாளில் மே 1-ந் தேதியை, சர்வதேச தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்க வழியமைத்துக் கொடுத்தது.

இந்தியாவில், சென்னை மாநகரில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. சீர்திருத்தவாதியும், பொதுவுடமைவாதியுமான சிங்காரவேலர், 1923-ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார். 1927-ம் ஆண்டு மே 1-ந் தேதியில் இருந்து, இந்தியா தொழிலாளர் வாரத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியது. மே தின நினைவாகவும், உழைப்பாளர்களைப் போற்றும் வகையிலும், சென்னை மெரினா கடற்கரையில் ‘உழைப்பாளர் சிலை’ வைக்கப்பட்டுள்ளது. காமராஜரின் ஆட்சி காலத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு, 1959-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி இந்த சிலை திறந்துவைக்கப்பட்டது.

பெரும்பாலான நாடுகள் மே 1-ந் தேதியைத்தான் தொழிலாளர் மற்றும் உழைப்பாளர் தினமாக கொண்டாடி வருகிறது. கனடா, அமெரிக்கா, பெர்முடா போன்ற நாடுகள், செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன.

Next Story