ஆரோக்கியம் தரும் பப்பாளி பழம்


ஆரோக்கியம் தரும் பப்பாளி பழம்
x
தினத்தந்தி 2 May 2021 7:12 PM GMT (Updated: 2 May 2021 7:12 PM GMT)

பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும்.

பப்பாளி பறங்கிப்பழம் என்று அழைக்கப்படுகிறது. இதன் பூர்வீகம் மெக்சிகோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

இதன் சீசன் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மற்றும் மே முதல் அக்டோபர் வரையாகும். பப்பாளி எளிதில் கிடைப்பது. அதே நேரத்தில் விலை மலிவானது. ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.

பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும். பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது.

பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கும் பணியையும் செய்கிறது. இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்துக்கு உண்டு.

சர்க்கரை நோய் பிரச்சினையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.

பப்பாளி பழம் சாப்பிடுவது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற பிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை சேதமடையாமல் தடுக்கின்றன.

பப்பாளி நம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் வைட்டமின் சி யுடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. அன்னல்ஸ் ஆப் ருமேடிக் நோய்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வைட்டமின் சி குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ளும் நபர்களுக்கு மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது. எனவே பப்பாளி நன்மையைத் தரும். நம் அனைவருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு தினமும் பப்பாளி சாப்பிட்டால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. பப்பாளி சாற்றை உச்சந்தலையில் பயன்படுத்துவது பொடுகுத் தொல்லையை போக்கும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்தலை கட்டுக்குள் வைக்கும். முடியின் பலத்தையும் இந்த பப்பாளி அதிகரிக்கும்.

எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஏழைகளின் பங்காளியான இந்த பப்பாளி பல ஆரோக்கிய நலன்களை நமக்கு அள்ளி வழங்குகிறது. எனவே பப்பாளியை எப்போதும் விரும்பி உண்போம்.


Next Story