தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர்


தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர்
x
தினத்தந்தி 3 May 2021 1:11 AM GMT (Updated: 3 May 2021 1:11 AM GMT)

ரவீந்திரநாத் தாகூர் ஓவியம், இலக்கியம், வரலாறு போன்றவற்றை கற்பதில் ஆர்வம் காட்டினார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வில் தேவேந்திரநாத் தாகூர்-சாரதா தேவி தம்பதிக்கு கடந்த 1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்த போதே தாயார் சாரதா தேவி உயிரிழந்து விட்டார். மேலும் தந்தையார் தேவேந்திரநாத் தாகூரும் வியாபாரம் காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால், பெரும்பாலான நேரங்களில் பணியாளர் களால்தான் ரவீந்திரநாத் தாகூர் வளர்க்கப் பட்டு வந்தார். தாகூரின் குடும்பம் வங்காள மறுமலர்ச்சியில் பெரும் பங்காற்றியது என்றே கூறலாம். அவர்கள் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் தியேட்டர் உள்ளிட்டவற்றை நடத்தி வந்தனர்.

ரவீந்திரநாத் தாகூர் ஓவியம், இலக்கியம், வரலாறு போன்றவற்றை கற்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால் அவருக்கு முறையான கல்வியில் விருப்பம் இல்லை. இதனால் பிரசிடென்சி கல்லூரியில் ஒருநாள் மட்டுமே கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான கல்வி என்பது சரியான விளக்கம் அளிப்பது ஆகாது, அது அறிவார்வத்தை தூண்டுவது என்று நினைத்தார். வங்காள மொழி தவிர சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்று தேர்ந்தார். இது தவிர ஜூடோ, குத்துச்சண்டை, மலையேற்ற பயிற்சி பெற்றார்.

இதற்கிடையில் தேவேந்திரநாத் தாகூர் தனது மகனை அறிஞராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்தார். அங்குள்ள அவர்களது வீட்டில் தங்கியிருந்த ரவீந்திரநாத் தாகூர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சட்டம் பயின்றார். அதன்பின்னர் மேற்கு வங்கத்துக்கு அவர் திரும்பினார்.

பல்துறை அறிஞரான ரவீந்திரநாத் தாகூர் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வங்காள மொழி இலக்கியம், இசை வடிவில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியரான அவர், 1913-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்காக முதல் நோபல் பரிசு பெறுவதும், ஐரோப்பியர் அல்லாதவர் நோபல் பரிசு பெறுவதும் இதுவே முதன்முறை ஆகும். அவரது படைப்புகள் ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தது. 1915-ம் ஆண்டு அவருக்கு பிரித்தானிய அரசு செவ்வீரர் பட்டம் வழங்கி கவுரவித்தது. வங்காள கவி என்று அழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் ஜன கன மன என தொடங்கும் பாடல், இந்தியாவின் தேசிய கீதமாக உள்ளது. மேலும் அமர் சோனார் பங்களா என்ற மற்றொரு பாடல், வங்கதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

சிறு வயதிலேயே கவிதை எழுத தொடங்கினார், ரவீந்திரநாத் தாகூர். 16-வது வயதில் முதல் கவிதை தொகுப்பை பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சிறுகதை, நாடக நூல்கள் அவரது பெயரிலேயே வெளிவந்தன. விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், அதனை ஓவியங்கள், கேலி சித்திரங்கள், பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தினார். மேலும் விசுவபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலை தழுவி இருந்தன. இவரது படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாய தன்மையும் அனைத்து தரப்பின ருக்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது சில நூல்களை த.நா.குமாரசாமி தமிழில் மொழி பெயர்த்து உள்ளார்.

1878-ம் ஆண்டு முதல் 1932-ம் ஆண்டு வரை 5 கண்டங்களில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரவீந்திரநாத் தாகூர் பயணம் செய்தார். 1883-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி மிருனாலி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 குழந்தைகள் வாலிப பருவம் அடையும் முன்பே இறந்து விட்டன. ரவீந்திரநாத் தாகூர் தான் இயற்றி மெட் டமைத்த பாடலை பாடும் முறையை சுவாமி விவேகானந் தருக்கு கற்பித்தார். அவரது பாடல்களில் பலவற்றை சுவாமி விவேகானந்தர் பாடி உள்ளார். 1930-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார், ரவீந்திரநாத் தாகூர். 1940-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அவருக்கு ‘டாக்டர் ஆப் லிட்ரேச்சர்’ என்ற விருது வழங்கியது. பின்னர் 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரவீந்திரநாத் தாகூர், கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவீந்திரநாத் தாகூர் பெயரில் இந்தியாவில் கொல்கத்தா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வங்கதேசத்திலும் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

Next Story