உலக எண்ணெய் வர்த்தகத்தை நிர்ணயம் செய்யும் சூயஸ் கால்வாய்


உலக எண்ணெய் வர்த்தகத்தை நிர்ணயம் செய்யும் சூயஸ் கால்வாய்
x
தினத்தந்தி 3 May 2021 1:19 AM GMT (Updated: 3 May 2021 1:19 AM GMT)

சூயஸ் கால்வாய் மத்தியதரை கடலுக்கும், செங்கடலுக்குமிடையில் உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது.

சூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரை கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ. நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இந்த கால்வாய் 1869ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த கால்வாய் வெட்டப்பட்டதால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கப்பல்போக்குவரத்து மிக இலகுவானது. அதற்கு முன்பு கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

பிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி 10 ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து 1869-ம் ஆண்டு பணி முடிக்கப்பட்டது. இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் பெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ்.

சூயஸ் கால்வாய் மத்தியதரை கடலுக்கும், செங்கடலுக்குமிடையில் உவர்நீர் இணைப்பை ஏற்படுத்தியது. செங்கடலானது மத்தியதரை கடலை விட ஏறத்தாழ 1.2 மீட்டர் (4 அடி) உயர்ந்ததாக உள்ளது. இருந்த போதிலும், மத்தியதரைக் கடலுக்கும் கால்வாயின் நடுப்பகுதியிலுள்ள கிரேட் பிட்டர் ஏரியில், நீரோட்டம் குளிர்காலத்தில் வடக்கு நோக்கியதாகவும், கோடைகாலத்தில் தெற்கு நோக்கியதாகவும் காணப்படுகின்றது.மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் நடுப்பகுதியிலுள்ள இந்த கிரேட் பிட்டர் ஏரி அலைகள் கூடியதாகவும், அலைகள் சூயசில் வேறுபட்டதாகவும் இருக்கும். இந்த கிரேட் பிட்டர் ஏரி ஆனது, மிகவும் உவரான இயற்கை ஏரியாக இருப்பதனால், உயிரினங்கள் இடப்பெயர்வு தடுக்கப்பட்டிருந்தது.

இந்த கால்வாயில் ஆண்டுக்கு 15 ஆயிரம் கப்பல்கள் கடக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது. சைய்டின் துறைமுகத்தின் வடக்கு முனையிலிருந்து சூயஸ் நகரத்தில் உள்ள போர்ட் வெபிக்கின் தெற்கு முனைவரை இது நீட்டிக்கப்படுகிறது. இதன் வடக்கு மற்றும் தெற்கு அணுகல் கால்வாய்கள் உட்பட இதன் நீளம் 193.30 கி.மீ. ஆகும். இந்த கால்வாயில் நீரை அடைக்கும் அமைப்பு இல்லை. கடல் நீர் இந்த கால்வாய் வழியே ஓடும். பொதுவாக குளிர்காலத்தில் பிட்டர் ஏரிகளின் வடக்கிலிருந்து கால்வாயில் நீர்பாயும். ஆனால் கோடைக் காலத்தில் தெற்கிலிலுந்து வடக்கே பாய்கிறது.

இந்த கால்வாய் எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கான்ஸ்டன்டினோபாலின் மாநாட்டின் முடிவின்படி இந்த கால்வாயை சமாதான காலத்திலும் போர் காலத்திலும், ஒவ்வொரு கப்பலும் வர்த்தகத்துக்கோ அல்லது போர் பயன்பாட்டுக்கோ பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தலாம். 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கால்வாய் பயணத்தின் நேரத்தை குறைக்க 35 கி.மீ. புறவழி விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டது. சூயஸ் கால்வாயின் திறனை ஒரு நாளைக்கு 49 என்பதிலிருந்து 97 கப்பல்கள் என இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டது. 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி திறக்கப்பட்டது.

இந்த கால்வாயில் மணிக்கு 8 கடல்மைல் (மணிக்கு 15 கி.மீ) வேகத்தில் கப்பல்கள் பயணிக்கின்றன. கால்வாயைக் கடக்கும் பயண நேரம் சுமார் 11 முதல் 16 மணித்தியாலங்கள் ஆகும். கப்பல்கள் குறைந்த வேகத்தில் பயணிப்பது கால்வாயின் கரைகளில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகின்றது.

சுயஸ் கால்வாய்க்கு பிரதான மாற்று வழியாக ஆப்பிரிக்காவின் தென் முனையான கேப் அகுலாஸ் ஊடான கடல் மார்க்கம் விளங்குகின்றது. சுயஸ் கால்வாய் அமைப்பதற்கு முன்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரேயொரு கடல்மார்க்கமாக இதுவே விளங்கியது. கால்வாய் ஊடாக பயணிக்க முடியாதளவு பெரிய கப்பல்களுக்கான பாதையாக இப்பொழுதும் இதுவே விளங்குகின்றது. 21-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சம் காரணமாக சூயஸ் கால்வாய் ஊடான கப்பற் போக்குவரத்தில் ஏறத்தாழ 10 சதவீதம் இவ்வழியைப் பயன்படுத்தின. சவுதி அரேபியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் ஒரு எண்ணெய் கப்பல் சூயஸ் கால்வாயை பயன்படுத்தாமல் இந்த வழியை பயன்படுத்தினால் 2,700 மைல்கள் (4,345 கி.மீ) அதிகமாகப் பயணிக்க வேண்டும்.

அண்மைக் காலமாக ஆர்டிக் பெருங்கடலில் பனிமூடிய பகுதி சுருங்க ஆரம்பித்ததிலிருந்து, கோடைகாலத்தில் 6 முதல் 8 வார காலப்பகுதிக்கு வட கடலூடாக ஐரோப்பாவிலிருந்து கிழக்காசியாவுக்கான கப்பல் போக்குவரத்து நடைபெறுவது சாத்தியமாயிற்று. இது சூயஸ் கால்வாயூடான பயணத்தை விட பல்லாயிரம் மைல்கள் குறைவான தூரத்தைக் கொண்டது.

இந்த கால்வாய் வழியாக பிரதானமாக எண்ணெய் கப்பல்கள் செல்வதால், உலக எண்ணெய் வர்த்தகத்தை நிர்ணயம் செய்யும் கால்வாயாக விளங்குகிறது.

Next Story