சிறப்புக் கட்டுரைகள்

‘சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவை விரட்டுவோம்’ + "||" + Adhering to social gaps Lets drive out the corona '

‘சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவை விரட்டுவோம்’

‘சமூக இடைவெளியை கடைப்பிடித்து கொரோனாவை விரட்டுவோம்’
தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமில்லாமல், சுற்றுப்புறச் சூழலிலும் அமைதல் வேண்டும்.
‘சுத்தம் சுகம் தரும்’ என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மை என்பது உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இருக்கும் இடம் ஆகியவற்றில் மட்டுமில்லாமல், சுற்றுப்புறச் சூழலிலும் அமைதல் வேண்டும். சுற்றுப்புறச் சூழல் தூய்மையாக இருந்தால்தான், மாசு மறு அற்ற தூய காற்றும், தூய்மையான குடிநீரும் கிடைக்கும். இல்லாவிட்டால் பல்வேறு நோய்கள் தாக்கி இன்னல்களை சந்திக்க நேரிடும். கொரோனா வைரஸ் உருமாறி 2-வது அலையாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. மத்திய அரசும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தமிழக அரசு இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை நாம் அறிவோம். மறுபுறம் கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எனவே வைரஸ் பரவாமல் இருப்பதற்கு வீட்டை தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். திருவிழா, பண்டிகை காலங்களில் வீட்டை தூய்மையாக வைத்து கொள்கிறோம். அதுபோல் இந்த காலகட்டத்திலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை கிருமிநாசினி வைத்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வீடுகளின் வாசல்களில் மாட்டு சாணம் தெளித்து சுத்தம் செய்து கோலமிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் வீடுகளில் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்போடு வாழலாம்.

கொரோனாவின் தாக்கத்தை பலர் அறியாமல் சாலையில் கண்ட இடங்களில் எச்சில் உமிழ்கின்றனர். சாலையில் குப்பைகளை கொட்டுகின்றனர். கண்ட கண்ட இடங்களில் சிறுநீர் கழித்து வருகின்றனர். ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் துணிகளை துவைப்பதன் மூலம் நீரை மாசு படுத்துகின்றனர். இதனால் பல வகையான தொற்று நோய்கள் ஏற்பட நாமே வழிவகுக்கிறோம். இதை தடுக்க பொது இடங்களில் எச்சில் உமிழ்வதை தவிர்க்க வேண்டும். வீடுகள் தோறும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும். கைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தால் கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

இத்தகைய செயல் களை தொடர்ந்து பின்பற்றினால் கொரோனா போன்ற ஆட்கொல்லி வைரஸ் நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணியவேண்டும். பெரும்பாலும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

நாம் சுத்தமாக இருப்பதுடன், மற்றவர்களை சுத்தமாக இருக்க அறிவுறுத்த வேண்டும். அவர்களிடம் நோயின் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கி கூற வேண்டும். இதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்கலாம். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே வந்து வாங்கி செல்ல வேண்டும்.

கடைகள், வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்றால் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும்.

அப்போது தான் நாமும், நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கலாம். கொரோனா என்னும் கொடிய நோய் தாக்கி நம் அன்புக்குரியவர்களை இழப்பதை தவிர்ப்போம். இதற்காக நாம் அனைவரும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடப்பதே சிறந்த பாதுகாப்பாகும். தடுப்பூசி பணி முழுமை அடைவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். அதுவரை நாமும், நம் வீடுகளையும் சுத்தமாக வைத்து கொரோனா வைரசை விரட்டுவோம் என்று உறுதிமொழி ஏற்போம். இது நமக்கும், நம் நாட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய கடமையாகும் என்று அனைவரும் உணர்ந்து செயல்படுவோம். கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரையும் காத்திடுவோம்.