இயற்கை அதிசயம்: வறண்ட தேசமும், வளமான நைல் நதியும்...!


இயற்கை அதிசயம்: வறண்ட தேசமும், வளமான நைல் நதியும்...!
x
தினத்தந்தி 7 May 2021 10:01 AM GMT (Updated: 7 May 2021 10:01 AM GMT)

உலகின் மிக நீண்ட நதியான நைல் நதி பற்றிய பல சுவாரசிய தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோமா..?

நைல் நதி, பூமத்திய ரேகைக்குத் தெற்கே தோன்றி, வடக்கு நோக்கி ஓடி, வட ஆப்பிரிக்காவில் பாய்ந்து, எகிப்தில் நுழைந்து, கடைசியாக மத்திய தரைக் கடலில் கலக்கிறது. இதன் நீளம் 6,853 கி.மீ. இதன் சராசரி நீரோட்டம் நொடிக்கு சுமார் 31 லட்சம் லிட்டர்கள்.

தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து என்று பதினோரு நாடுகள், நைல் நதியின் நீர் வளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, இதை ‘சர்வதேச ஆறு’ என்று அழைக்கிறார்கள். நைல் நதி-நீல நைல், வெள்ளை நைல் என இரு கிளை நதிகளாகப் பிரிகிறது. நீல நைல், எத்தியோப்பியாவில் உள்ள ‘கிஷ் அபே’ என்ற இடத்தில் உள்ள டனா ஏரியில் உற்பத்தியாகிறது. வெள்ளை நைல், மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரிப் பகுதியில் உற்பத்தியாகிறது. இரண்டு கிளை நதிகளும் சூடான் நாட்டுத் தலைநகரமான கார்ட்டூமில் சங்கமிக்கின்றன. வெள்ளை நைல் நதி உற்பத்தி இடத்திலிருந்து கடல் வரை செல்ல நான்கரை மாதங்கள் ஆகுமாம். நீல நைல் பயணம் 114 நாட்கள் பிடிக்கிறது.

நைல் நதியிலும் அதன் கரைகளிலும் பலவகை உயிரினங்கள் வாழ்கின்றன. நைல் பல்லி, தவளை, கீரி, ஆமை, நீர் யானை, பபூன் குரங்கு ஆகிய விலங்குகளும், முன்னூறுக்கும் மேற்பட்ட பறவை இனங்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் எத்தியோப்பியாவில் கோடை மழை பெய்து, நைல் நதியின் கரைகளில் வெள்ளம் வழிந்தோடும். அப்போது படியும் கருப்பு வண்டல் மண், பயிர்களை செழிப்பாக வளர்க்கும். எனவே பண்டைய எகிப்தியர்கள் நதியை ‘ஔர்’ (கருப்பு) என்று அழைத்தனர்.

நைல் நதியை அடிப்படையாக வைத்தே பண்டைய எகிப்து நாட்காட்டி வடிவமைக்கப்பட்டது. அதன்படியே வெள்ளக் காலம், பயிர் வளரும் காலம், அறுவடைக் காலம் என நைல் நதியை அடிப்படையாக கொண்டே, எகிப்தியர்கள் பயிர் செய்தனர். நைல் வெள்ளப் பெருக்காய் இருக்கும்போது, விவசாய வேலைகள் இல்லாததால், பிரமிடுகள், கோவில்கள், மற்ற கட்டிட வேலைகளில் ஈடுபட்டனர். பிரமிடுக்குத் தேவையான கற்கள், நைல் நதியின் வெள்ளத்தின் மூலம் தான், கட்டுமான இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப்பட்டதாம்.

நைல் க்ரூஸ் என்ற சொகுசுக் கப்பல் சவாரி மூலம் நைல் நதியில் பயணித்து, கப்பலில் தங்கி, எகிப்தின் தொல்லியல் பொக்கிஷங்களையும், பண்டைய நினைவுச் சின்னங்களையும் கண்டு ரசிக்கலாம்.

Next Story