எலும்பு அப்பளம்.. இதயம் இரும்பு..


எலும்பு அப்பளம்.. இதயம் இரும்பு..
x
தினத்தந்தி 9 May 2021 2:06 PM GMT (Updated: 9 May 2021 2:06 PM GMT)

அனுப் சகாதேவனின் எலும்புகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவை அப்பளம்போல் நொறுங்கியதை கேள்விப்படும்போது அவர் மீது அனுதாபம் காட்டத்தோன்றும். ஆனால், அவர் இதயம் இரும்புபோல் வலுவாக இருப்பதை அறியும்போது அளவுக்கு அதிகமாய் ஆச்சரியம் தோன்றும்.

விசித்திரமான எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர், தன்னை பற்றி மட்டும் கவலைப்படாமல் தன்னைப்போல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

"பிரதமருக்கு தெரிவித்துக்கொள்வது, என் பெயர் அனுப் சகாதேவன். வயது 36. உயரம் இரண்டு அடி. உடல் எடை பத்து கிலோவுக்கும் குறைவு. கேரளாவில் மாவேலிக்கரை, பொன்னாரம்தோட்டம் கோவில் அருகில் வசிக்கிறேன். உங்களை பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். அதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் நடக்கவில்லை.

நான் என்னை பற்றி மட்டும் கடிதத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவில் என்னை போன்று பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்காகவும் இதனை எழுதுகிறேன். எங்களின் கவலைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்..." என்று அந்த கடித வரிகள் நீளுகிறது.

கடிதத்தின் மூலம் பிரதமரின் கவனத்தை ஈர்க்க முயற்சித்திருக்கும் அனுப் சகாதேவனுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன? அவரே சொல்கிறார்...

`எனக்கு ஏற்பட்டிருப்பது பிரிட்டில் போன்' எனப்படும் `ஆஸ்டியோஜெனசிஸ் இம்பெர்பற்றா' எனப்படும் பிறவி நோய். உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும் கொலாஜன் பற்றாக்குறைதான் இந்த நோய்க்கு காரணம். இந்த நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை எலும்பு நொறுங்கிக்கொண்டே இருக்கும். வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வலிக்கும். தும்மினால்கூட எலும்புகள் நொறுங்கும். பிளாஸ்டர் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பிளாஸ்டர் இல்லாமல் எங்களால் வாழ முடியாது.

இந்த நோயுடன் ஒரு குழந்தை பிறந்தால், அந்த குடும்பம் நிரந்தர சோகத்திற்கு உள்ளாகும். ஒன்றும் அறியாத எங்களை பெற்றெடுத்த பெற்றோரா குற்றவாளிகள்? இல்லை, வலியோடு வாழும் எங்களுக்கு ஜென்மம் கொடுத்த கடவுளா குற்றவாளி? தெரியாது. ஆனால், இது போன்ற நரக வேதனையை அனுபவிக்கும் வேறு எந்த நோயும் இந்த உலகத்தில் இல்லை என்பது மட்டும் தெரியும்.." என்று வலியோடு வார்த்தைகளை உதிர்க்கிறார். இவரது தந்தை சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். தாயார் தனியார் மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்க்கிறார்.

"அம்மா நர்ஸ் ஆக இருப்பது எனக்கு பெரும் உதவியாக அமைந்துவிட்டது. சில நேரங்களில் எலும்புகள் நொறுங்கும்போது டாக்டர்களே கைவிட்டுவிடுவார்கள். அப்போது அம்மா பொறுமையோடு எனக்கு சிகிச்சை தருவார். அதுபோல் பல தடவை நிகழ்ந்துள்ளது. நான் பிறந்த 7-வது நாளில் முதல் முறையாக எலும்பு ஒடிந்தது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடவை எலும்பு முறிந்திருக்கிறது.

என்னை பாட்டியோ, அம்மாவோ பள்ளிக்கு எடுத்து செல்வார்கள். இருக்கையில் இருந்து நகரவேண்டுமானால் நண்பர்கள் தூக்கிவைப்பார்கள். லேசான கவனக்குறைவுகூட எனது கையையோ, காலையோ முறித்துவிடும். அதனால் 7-ம் வகுப்போடு படிப்பு முடிந்தது. என்னை போன்றவர்களுக்கு ஆயுளும் குறைவுதான். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பத்து வயதிற்குள் இறந்துவிடுவார்கள். ஒரு காய்ச்சலுக்குகூட தாக்குப்பிடிக்க முடியாமல் மடிந்துபோவார்கள். நான்தான் இத்தனை வயது வரை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது இதயம் இரும்புபோல் வலுவாக இருப்பதுதான் அதற்கு காரணம்.

வலியை நமக்கு தரும் கடவுள், சில சந்தோஷங்களையும் தருவார். எனக்கு ஒரு செல்போன் கிடைத்தது. அதன் வழியாக பேஸ்புக்கில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். என் நிலைமையை தெரிந்ததும் பலர் விடைபெற்றுவிட்டார்கள். சிலர் அனுதாபப்பட்டார்கள். அதில் ஸ்ரீஜா என்ற அக்காள் அறிமுகமானார். அவர்தான் திருவனந்தபுரத்தில் அமிர்தவர்ஷினி என்ற அமைப்பு எங்களைப் போன்றவர்களின் நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சொன்னார். லதா நாயர் என்பவர் அதை நடத்திக்கொண்டிருக்கிறார். அதில் உறுப்பினரானேன்.

அந்த அமைப்பில் சேர்ந்தது எனக்கு மறுஜென்மம்போல் அமைந்தது. எப்போது இறப்போம் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான் இப்போது மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். நாங்கள் ஒருவருக்கொருவர் எங்கள் கஷ்டங்களை எல்லாம் பேசி மறந்து, மகிழ்ச்சியோடு இருக்கிறோம். பென்ஷனும் கிடைத்தது.

லதா ஆன்டியிடம் நான் தொடர்ந்து படிக்க விரும்புவதை தெரிவித்தேன். அவரும் உதவினார். இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தேன். கம்ப்யூட்டர் அப்ளிகேஷனிலும், இன்பர்மேஷன் டெக்னாலஜியிலும் சான்றிதழ் படிப்பை பூர்த்திசெய்திருக்கிறேன். அதனால் தற்போது சில வெப் சீரியல்களுக்கு ஆன்லைன் புரமோட்டிங் பணி செய்கிறேன். எனக்கு ஆன்லைனில் நிறைய நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

ரெஜி என்பவர் மூலமாக ஜான் போஸ்வெல் என்பவர் அறிமுகமானார். அவர் மோட்டார் பொருந்திய வீல் சேர் ஒன்றை எனக்கு பரிசாக அளித்தார். அது கடவுள் அளித்த பரிசு போல் இருக்கிறது. வீட்டில் இருந்து கடை வரை நானே அதை சுயமாக இயக்கி செல்கிறேன். ஓய்வு நேரங்களில் அம்மாவுடன் சேர்ந்து கடையையும் கவனித்துக்கொள்கிறேன்.

இந்த நிலையில் எனது தந்தை மூளையில் கட்டி உருவானதால் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தார். லதா ஆன்டியும், நண்பர்களும் உதவியதால் ஆபரேஷன் முடிந்து அப்பா மீண்டுவிட்டார். ஆனாலும் நினைவாற்றல் திறன் குறைந்திருக்கிறது. இப்போது அவரது நினைவுத்திறனை மேம்படுத்த நானும், அம்மாவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்று கூறும், அனுப்புக்கு, அருண்தேவ் என்ற சகோதரன் உள்ளார். அவர் என்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கிறார்.

"பிரதமரின் கடிதத்திற்கு பதில் கிடைக்காவிட்டாலும், கூடுதல் முயற்சியோடு மீண்டும் அதை தொடர்வேன்" என்று கூறும் அனுப், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை சந்தித்து பேசியிருக்கிறார். சினிமா பிரபலங்களும் இவரை சந்தித்து ஊக்கம் அளித்துள்ளனர்.

Next Story