நதிபோல் தனிமையில் பயணிக்கும் நிதி


நதிபோல் தனிமையில் பயணிக்கும் நிதி
x
தினத்தந்தி 9 May 2021 2:11 PM GMT (Updated: 9 May 2021 2:11 PM GMT)

‘‘புத்தகயாவில் வைத்து என் தலையை மொட்டையடித்துக்கொண்டேன். அடுத்த இரண்டு நாட்களில் வர இருந்த எனது பிறந்த நாளுக்கு, எனக்கு நானே அளித்துக்கொண்ட சிறந்த பரிசு அது.

வாழ்க்கையில் அதுவரை நடந்த கூட்டல்- கழித்தல் அனைத்தையும் கடந்து முன்னோக்கி செல்வதாக உணர்ந்தேன். தனியாக பயணம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன். தனிமையை கைப்பிடித்துக்கொண்டு இனிமையாக இந்த உலக வாழ்க்கையை அனுபவிக்க முன்வந்தேன்.

அதற்காகவே இப்படி ஒரு தொலைதூர பயணத்தை தொடங்கினேன். காவி உடுத்திக்கொண்டு நிறைய புத்த சன்னியாசிகள் காணப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் மொட்டையடித்துக்கொள்வதில்லை. அதனால் நான் மொட்டையடிக்க சொன்னதும், முடிதிருத்துபவர் திகைத்துபோய் அமைதியாக நின்றிருந்தார். பின்பு `நீங்கள் மொட்டையடித்துதான் ஆகவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டீர்களா?' என்று கேட்டார். உடனே நான் எனது செல்போனில் இருந்த மொட்டையடித்த ஒரு பெண்ணின் படத்தைக்காட்டி, ‘அது போல் செய்யவேண்டும்' என்றேன். அதன் பிறகுதான் அவர் தெளிவடைந்து, `ஷேவ் கரோ' என்றார்.

கூந்தலை இழந்த அந்த நாளை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினேன். எனது மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் இறங்கியதுபோல் இருந்தது. காற்று தலையை வருடிக்கொண்டு சென்றது. மறுநாள் விடியல்தான் எனக்கு அதிர்ச்சியை தந்தது. ஒரு பெண் படுக்கையில் இருந்து விழித்து எழுந்ததும் அவள் தனது கூந்தலை கட்டிக்கொண்டுதான் தனது புதிய நாளை தொடங்குவாள். இனி சில மாதங்கள் அப்படி என் நாளை தொடங்க முடியாதே என்று நினைத்துக்கொண்டேன்’’ என்கிறார், நிதி சோசா குரியன். கேரளாவை சேர்ந்த இவர் தனியாக இந்தியாவை காரில் சுற்றிவருகிறார்.

‘‘தனியாக இந்தியாவை சுற்றிவரவேண்டும் என்ற ஆசை மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்குள் உருவாகிவிட்டது. ஆனால் ஒவ்வொருமுறை அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போதும், ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருந்தது. பயணமாக இருந்தாலும், காதலாக இருந்தாலும் அதன் அழகு கெட்டுப்போகாமல் இருக்கவேண்டுமானால் அதை பற்றி யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்று கலீல் ஜிப்ரான் சொன்னது உண்மைதான். சொல்லிவிட்டால் பல்வேறு காரணங்களை கூறி நம்மை பின்னோக்கி இழுத்துவிடுவார்கள். அதனால் நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்த பின்பே அம்மா, சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்களிடமெல்லாம் சொன்னேன்.

வாழ்க்கையில் நமக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செயல் ஒன்றை கண்டுபிடித்துவிட்டால், அதனை செய்தால்தான் நமது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியை அடிப்படையாக வைத்துதான் நான் வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கிறேன். அந்த மகிழ்ச்சியை எனக்கு பயணம் தருகிறது.

எனது ஊர் கோட்டயம் என்றாலும் எர்ணாகுளத்தில் வேலைபார்த்தேன். கிரியேட்டிவ் கண்டென்ட் எடிட்டர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பயணத்தை தொடங்கினேன். ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு நான் பாய்ந்து சென்றுவிடுவதில்லை. கிராமங்கள் தோறும் பயணித்து அங்குள்ள மனிதர்களை, கலாசாரத்தை, பெண்களை புரிந்துகொண்டேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி காலை 7 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். டீ விற்பனை செய்து உலகம் முழுவதையும் சுற்றிய பாலாஜியும், மோகனாவும் சேர்ந்து கொடி அசைத்து வழியனுப்பினார்கள். வாளையார் செக்போஸ்ட் வரை நண்பர்களும் உடன் வந்தனர். இனியாவது என்னை தனியாக விடுங்கள் என்றதும் அவர்கள் திரும்பிச் சென்றனர். 100 நாட்கள் பயணத்தில் பாதி முடிந்துவிட்டது. இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.

முதல் நாள் சேலத்தில் தங்கினேன். அடுத்து புதுச்சேரி. ஊரில் நான் கார் ஓட்டிச்செல்லும்போது எதிரே ஒரு லாரி வந்தாலே பயந்துவிடுவேன். ஆனால் இப்போது நான்கு புறமும் லாரிகள் துரத்தி வருகின்றன. அப்போதெல்லாம் இதயத்துடிப்பு அதிகரித்து பின்பு இயல்புக்கு திரும்பும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பயத்தை இந்த பயணம் போக்கியிருக்கிறது’’ என்று கூறும் நிதி, பயணத்தில் ஆங்காங்கே தனக்கு கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறைய மீன்களை கொண்டுவந்து இறக்குவார்கள். அதனை பார்க்க நான் சென்றபோது, அங்கு என்னைப் போன்று பயணத்தில் ஆர்வமாக இருக்கும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் விற்பனையாகாத மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி, வெட்டி சுத்தப்படுத்தி உப்பு கலந்து உலரவைத்து கருவாடு ஆக்கி அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர். தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. அவர்கள் படித்து வேலைக்கு சென்றதும், தானும் இதுபோல் பயணம் செல்லவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். கடும் உழைப்பாளியான அவரது ஆசை நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பயணத்தில் எனக்கு தேவையான உணவுகளை நானே தயாரித்துக்கொண்டேன். பெரும்பாலும் பயறு சேர்த்த கஞ்சி தயாரித்து உண்கிறேன். முட்டையை அவித்துவைத்துக்கொள்வேன். டீ தயாரிக்க தேவையான சுடுநீரும் பிளாஸ்க்கில் இருக்கும். தேவைப்படும்போது கிரீன் டீ தயாரித்து பருகுவேன். தென்னிந்தியாவில் நண்பர்களின் வீடுகளில் தங்கினேன். முன்பின் தெரியாதவர்கள்கூட பயணத்திற்கு பயன்படும் என்று கூறி உணவுப் பொட்டலங்களை தந்து வழியனுப்புகிறார்கள்.

ஒடிசாவில் உள்ள கடுகுத் தோட்டங்கள் என்னை கவர்ந்தன. அதனை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தபோது பெண்கள் ஒரு கூட்டமாக என்னை கடந்து சென்றார்கள். அவர்களுக்கு ஒடிசா மொழியை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அந்த கூட்டத்தில் ஒரு பெண் என்னிடம், உணவு சாப்பிட்டீர்களா? என்று சைகையிலே கேட்டார். இல்லை என்றேன். உடனே அவர்களோடு கிராமத்துக்கு வரும்படி அழைத்தார். நானும் சென்றேன். தாகம் தீர்க்க மோர் தந்தார். பச்சரிசி சாதமும், தேங்காய் சேர்க்காத கூட்டு, குழம்புகளும் என் பசியை தீர்த்தது. நான் அவர்களிடம் விடைபெற்றபோது பழ வகைகளையும் ஒரு பொட்டலமாக கட்டித்தந்தார்கள். அதில் அளவுக்கு அதிகமான அன்பு நிறைந்திருந்தது.

காஷ்மீரில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பெண்கள் என்னை வெகுவாக கவர்ந்தார்கள். அங்கு நான் தங்கிய வீட்டின் பெண்மணி நிறைய படித்தவர். அவர் சுற்றுலாப்பயணிகளுக்கு உணவு தயாரித்து வழங்கிக்கொண்டிருந்தார். சுற்றுலா வழிகாட்டியாக, பயணிகளுடன் தனியாக பயணமும் செய்துகொண்டிருந்தார்.

வாரணாசியில் கங்கா ஆரத்தி காண சென்றபோது, நண்பர்கள் `மணிகர்ணிகா கட்' டை தவறாமல் பார்த்துவிடும்படி சொன்னார்கள். இறந்தவர்களின் உடல்கள் அங்கே எரியூட்டப்பட்டுக்கொண்டே இருந்தது. ஆத்மா விடைபெற்ற உடலை ஆரத்தியாக சமர்ப்பிப்பது அங்குள்ள ஐதீகம். அதற்குரிய கர்மாக்களை செய்தால்தான் உடலில் இருந்து ஆத்மா விடைபெறும் என்றும் அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். அதனால் தாமதிக்காமல் உடலை சிதையில்வைத்து தீமூட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அங்கேயுள்ள ஐதீகப்படி சிதை மூட்டவேண்டும் என்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து உடலை விமானங்களில் கொண்டு வரவும் செய்கிறார்கள்.

மரணத்தை வரவேற்க அங்கே ஏராளமானவர்கள் மோட்ஷ பவன் என்ற இடத்தில் தங்கியிருக்கிறார்கள். தங்கள் உயிரை எடுத்துக்கொண்டு மோட்சத்தை அளிக்கவேண்டும் என்று தினமும் அவர்கள் கடவுளை பிரார்த்திக்கிறார்கள். அரசாங்கம் மோட்ஷ பவனில் 14 நாட்கள் தங்க இலவசமாக அனுமதிக்கிறது. அந்த நாட்களில் மரணமடையாவிட்டால் அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்து தங்கும் இடமளிக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்படுகின்றன. சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு அத்தகைய முதியோர்களை பராமரிக்கிறார்கள்.

இந்த பயணத்தில் நான் சந்தித்த ஒவ்வொரு பெண்ணும் எனக்கு ஒரு வாழ்க்கைப் பாடத்தை கற்றுத்தந்தார்கள். பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டுப்புழு வளர்க்கும் பெண்களை சந்தித்தேன். அவர்களிடம் வெகுநேரம் பேசிய பின்புதான், அவர்கள் வாழ்க்கையில் இதுவரை ஒருமுறைகூட பட்டுப்புடவை உடுத்தியதில்லை என்பது தெரியவந்தது. என்னுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே மல்பரி செடியின் குச்சிகளைகொண்டு கூடை முடைந்துகொண்டே இருந்தார்கள். அந்த கூடைகள் மிக அழகாக இருந்தன.

பீகாருக்குள் சென்றுகொண்டிருந்தபோது ராஜஸ்தானில் இருந்து வந்த நாடோடி பெண்களை சந்தித்தேன். விவசாய கூலிகளாக வேலைசெய்வதுதான் அவர்களது தொழில். விவசாயப் பணிகள் இல்லாத நேரத்தில் பீகாரில் உள்ள பேரீச்சம்பழ இலைகளை கொய்து, கலைப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்கிறார்கள்’’ என்று கூறும் நிதி, கொல்கத்தாவில் உள்ள பிரபல சிவப்புவிளக்கு பகுதியான சோனாகச்சிக்கு சென்றபோது கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘இந்தியாவில் பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாக நான் கொல்கத்தாவை கருதுகிறேன். அங்குள்ள இடங்கள், மக்கள், கலாசாரம், உணவுகள் எல்லாமே கவர்ந்தவைகளாக இருக்கின்றன. அங்குள்ள சோனாகச்சி நம்மை பயப்படுத்தக்கூடிய இடம் என்று நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். இரண்டு மிகப்பெரிய தெருக்களை கொண்ட பகுதி சோனாகச்சி என்று அழைக்கப்படுகிறது. அங்கு பலவகையான மார்க்கெட்டுகளும், மதுக்கூடங்களும் இருக்கின்றன. பரபரப்பான அந்த பகுதியில் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பெண்களை கண்டேன்.

அது எனக்கு வித்தியாசமாக தெரிந்ததால் அந்த காட்சியை படமெடுக்க முயற்சித்தேன். அப்போது தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் என்னை அணுகினார். `நீங்கள் இவர்களை படமெடுக்கவேண்டாம். சூழ்நிலைதான் அவர்களை இந்த தொழில் செய்ய வைத்திருக்கிறது. சூழ்நிலைகள்தான் நம்மை அதுபோன்ற தொழிலுக்கு செல்லாமலும் தடுத்துவைத்திருக்கிறது. அவர்களது வீட்டில் அவர்கள் வேறு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இங்கு வந்திருப்பார்கள். நீங்கள் போட்டோ எடுத்து அது வெளியே தெரியவந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுவிடும்' என்றார். அவர் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்து நான் போட்டோ எடுக்கும் முயற்சியை கைவிட்டேன்..’’ என்று நெகிழ்ச்சியாக கூறிவிட்டு நிதி, நதி போல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

Next Story