‘வில்லேஜ்’ விஞ்ஞானியின் புதுமையான கண்டுபிடிப்புகள்


‘வில்லேஜ்’ விஞ்ஞானியின் புதுமையான கண்டுபிடிப்புகள்
x
தினத்தந்தி 10 May 2021 1:11 PM GMT (Updated: 10 May 2021 1:11 PM GMT)

விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் தேவையான பல உபகரணங்களை உருவாக்கி வருகிறார், தாமஸ். ஜே.சி.பி. ஓட்டுநராக வாழ்க் கையை தொடங்கி, இன்று அதை கொண்டே பல புதுமைகளை படைத்து வருகிறார்.

 ‘வில்லேஜ் விஞ்ஞானி’ என ஊர் மக்களால் புகழப்படும் தாமஸிடம் சிறு நேர்காணல்.

உங்களை பற்றி கூறுங்கள்?

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் இருக்கும் குட்டத்துப்பட்டி, என் சொந்த ஊர். அங்குதான் பிறந்து வளர்ந்தேன். ஆரம்பத்தில் பிளஸ்-2 வரை படித்தேன். பிறகு குடும்ப சூழல் காரணமாக கோவையில் ஜே.சி.பி. இயந்திரம் வாங்கி, ஓட்டினேன். வேலைக்கு மத்தியிலும் படிக்க ஆசைப்பட்டதால், தொலைத்தூர கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தேன்.

எப்போது புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க தொடங்கினீர்கள்?

ஜே.சி.பி. இயந்திரத்திற்கு பழுது பார்ப்பது, பாகங்களை கழற்றி மாட்டுவது... போன்ற வேலைகளினால் கனரக எந்திர ஆராய்ச்சி பற்றிய சிந்தனை மேலோங்கியது. உலகளாவிய கனரக இயந்திரங்களை அடிக்கடி இணையதளங்களில் பார்த்து, தெரிந்து கொள்வேன். வெளிநாடுகளில், ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு இயந்திரங்களை உருவாக்கி உள்ளனர். ஆனால் இந்தியாவில் அதுபோன்ற இயந்திர புதுமைகள் படைக்கப்படுவது இல்லை. நாம் அதை ஏன் முயன்று பார்க்கக்கூடாது என்ற முயற்சியில்தான், புதுப்புது தொழில்நுட்பங்களையும், புதுப்புது இயந்திரங்களையும் உருவாக்க ஆரம்பித்தேன்.

இதுவரை எத்தகைய புதுமைகளை முயன்று பார்த்திருக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் கழிவு முறையில் உடைக்கப்படும் பெரிய இயந்திரங்களின் உதிரி பாகங்களை கொண்டு சின்ன இயந்திரங்களை உருவாக்கினேன். ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் மரச்செக்கு மெஷினை வடிவமைத்தேன். ஹைட்ரோபோனிக் விவசாய முறையில் சோலார் பேனல்களை பொருத்தி, தண்ணீரை தானாகவே சுழற்சி முறையில் மாற்றக்கூடிய கட்டமைப்பை வடிவமைத்தேன். சின்ன காற்றாலையை உருவாக்கி, மின்சாரம் உற்பத்தி செய்து மகிழ்ந்தேன்.ஜே.சி.பி. இயந்திரத்தின் முன்பக்க பக்கெட்டை கழற்றிவிட்டு, அதற்கு பதிலாக தானாக உயரக்கூடிய கிரேன் அமைப்பை மாற்றியமைத்தேன். அதேபோல ஜே.சி.பி.யில் பூமியை துளையிடும் டிரில்லர் அமைப்பை பொருத்தி பார்த்தேன்.

ஜே.சி.பி.இயந்திரத்தை கொண்டே அதிகமான புதுமைகளை படைத்திருக்கிறீர்கள். எதற்காக ?

ஜே.சி.பி. இயந்திரம், எனக்கு நன்கு பழக்கமானது. ஓட்டுவதில் தொடங்கி, பழுது பார்ப்பது வரை எல்லா வேலைகளும் எனக்கு தெரியும். அதனால்தான், அதை கொண்டே பல புதுமைகளை படைக்க ஆரம்பித்தேன். சமீபத்தில்கூட, மிகச்சிறிய அளவிலான ஜே.சி.பி. இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். இது பெரிய ஜே.சி.பி. இயந்திரத்தின், சின்ன மாடல். பெரிய ஜே.சி.பி. இயந்திரம் நுழைய முடியாத குறுகிய சாலைகளிலும், விவசாய நிலங்களில்கூட இதை பயன்படுத்தலாம். மேலும் மிகவும் எளிய தொழில்நுட்பத்தில் உருவாக்கியிருக்கிறேன். இதை விவசாய பணிகளிலும் ஈடுபடுத்தலாம். சிறுசிறு தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தலாம்.

இதுபோன்ற இயந்திரங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்படவில்லையா?

உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் இதன் பட்ஜெட், வெளிநாட்டு இயந்திரங்களைவிட மிக குறைவானது. ரூ. 2 லட்சத்திலேயே இதை உருவாக்கிவிட்டேன். அதுதான், இந்த மினி ஜே.சி.பி.யின் ஸ்பெஷல்.

வேறு எத்தகைய புதுமைகளை மேற்கொண்டிருக்கிறீர்கள்?

அமெரிக்க விஞ்ஞானி ஸ்ரீதரின் வழிகாட்டுதலின்படி, புளூம் எனர்ஜியை உருவாக்கி இருக்கிறேன். அதாவது, காய்கறி-பழ கழிவுகளை கொண்டு, ஆற்றலை உருவாக்கும் முயற்சி இது. அதையும் வெற்றிகரமாக முயன்று பார்த்திருக்கிறேன். மேலும் பிளாஸ்டிக் கழிவை சூடாக்குவதால், பெட்ரோல்-டீசல் மூலக்கூறுகளை குறிப்பிட்ட அளவில் பிரித்தெடுக்க முடியும். அதையும் முயன்று பார்த்திருக்கிறேன். இதுதவிர விவசாயிகளுக்கு பயன்படும் பல இயந்திரங்களை உருவாக்க முயன்று வருகிறேன்.

வருங்காலத்தில் உருவாக்கப்பட இருக்கும் இயந் திரங்களை பற்றி கூறுங்கள்?

விவசாயிகளுக்கு உதவும் வகையில்தான் என்னுடைய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கிறேன். மலர் தோட்டங்களில், நிறங்களை அடையாளம் கண்டு தானியங்கி முறையில் பூப்பறிக்கும் கருவியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறேன். அதற்கான சென்சார் உருவாக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாய நிலத்தில் தானியங்கி முறையில் களைகளை சுட்டெரித்து அழிக்கும் சோலார் நகரும் ரோபோவையும் உருவாக்கி வருகிறேன். அதோடு கற்களை வரிசையாக அடுக்கி வைக்கும், ரோபோ மாதிரியிலான ஒன்றையும் திட்டமிட்டு வருகிறேன்.

Next Story