அலையோடு விளையாடு


அலையோடு விளையாடு
x
தினத்தந்தி 15 May 2021 12:40 PM GMT (Updated: 15 May 2021 12:40 PM GMT)

கடல் அலைகளின் மீது சறுக்கி விளையாடுவது ‘சர்ப்பிங்' என்றால், பெடல் சர்ப்பிங் விளையாட்டில் கூடுதலாக துடுப்பு இருக்கும். இந்த விளையாட்டில்தான், தன்வி ஜெகதீஷ் கெட்டிக்காரி. பெடல் சர்ப்பிங்கில் இன்று இந்திய அளவில் நம்பர் 1 வீராங்கனையும் இவர்தான்.

சர்வதேச அளவிலான போட்டிகளில், பிரபலமான இந்திய முகமாக திகழும் தன்வி, பெடல் சர்ப்பிங் பற்றியும், அதற்காக எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் மனம் திறக்கிறார்.

‘‘இது அலைச்சறுக்கு விளையாட்டு போன்றுதான் இருக்கும், ஆனால் சின்ன வித்தியாசம்தான். அலைகள் இல்லாத கடல் பரப்பிலும், ஏரிகளிலும் துடுப்பு படகை செலுத்துவது போல, அலைச்சறுக்கு பலகையை, துடுப்பினால் நகர்த்தும் விளையாட்டுதான், பெடல் சர்ப்பிங். இந்தியாவில் இருக்கும் பிரபலமில்லாத விளையாட்டுகளில் இதுவும் ஒன்று’’ என்றவர், இந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘எனக்கு ஆஸ்துமா நோய் இருந்தது. அதனால் கடல், நீச்சல் குளம், ஏரி போன்றவற்றில் இருந்து தள்ளியே இருக்கவேண்டியதாகிற்று. மூச்சு திணறல் ஏற்படும் என்பதால், கடலில் குளிக்கவும், நீச்சல் குளத்தில் நீந்தவும் எனக்கு அனுமதி கிடையாது. பிறகு தாத்தாவின் ஆதரவோடு, நீச்சல் பயிற்சி பெற தொடங்கினேன். மூச்சு பயிற்சி பெற்றதோடு, ஆஸ்துமா நோயில் இருந்தும் மெதுவாக குணமடைந்தேன். அதனால் நீர் விளையாட்டுகளின் மீது அளவில்லாத ஆர்வம் பிறந்தது. மறுக்கப்பட்ட விளையாடுகளை வெறித்தனமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 8 வயதில் தொடங்கி, இன்று 
வரை நீர் விளையாட்டுகளே என் உலகம்’’ என்றார். மேலும் தொடர்ந்த தன்வி, கடல் விளையாட்டுகளில் எதிர்கொண்ட சவால்களை கூறினார்.

‘‘உடல் நிலையும், உடை நிலையும் என்னை ரொம்பவே சோதித்துவிட்டன. ஆரம்பத்தில் உடல் நிலையை காரணம்காட்டி, நீர் விளையாட்டுகளில் இருந்து விலகி இருக்க சொன்னார்கள். உடல்நிலை தேறியதும், நீர் விளையாட்டுகளுக்காக அணியக்கூடிய உடைகளை காரணம் காட்டினார்கள். ஆனால் நான் என் முடிவில் இருந்து மாறவே இல்லை. அதனால்தான் சாதிக்க முடிந்தது. என்னுடைய பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும், நான் மங்களூருவில்தான் வளர்ந்தேன். அந்த பகுதியில் இருக்கும் மந்த்ரா சர்ப்பிங் பள்ளியில்தான், நீர் விளையாட்டுகளை கற்றுக்கொண்டேன். அங்கிருக்கும் பயிற்சியாளர், ‘ஏப்ரல்' எனக்கு நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். இன்றும் கற்றுக்கொடுக்கிறார்.

சென்னையில் நடந்த முதல் போட்டியில் 18 கி.மீ. தூரத்தைக் கடந்தேன். அந்த வெற்றி தருணத்தை எப்போது நினைத்தாலும் மனம் அலை அலையாக துள்ளும். அதுபோலவே அமெரிக்காவின் பிஜித் தீவில் ‘மெரைன் கரோலினா கிளப்’ நடத்திய போட்டியில் 18 கி.மீ. பந்தய தூரத்தை சுட்டெரிக்கும் வெயிலில் கடந்து, மூன்றாம் இடத்தை பிடித்ததையும் மறக்கவே முடியாது. சக போட்டியாளர்களின் மன உறுதியும், ரோபோட்டுகள் போன்ற உடல் வலிமையும் பெரும் ஆச்சரியம் தந்தன. அதேசமயம் இந்தியாவில் நடந்த பெடல் சர்ப்பிங் போட்டியின் பெண்கள் பிரிவில் நான்தான் சாம்பியன்’’ என்றவர், தன்னுடைய வெற்றியின் மூலம் மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறார்.

‘‘நான் எதிலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எளிய ஆதரவு கூட கிடைக்காமல் தவிக்கும் நிலையில், என் வெற்றிகள் அனைத்தையும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஏதோ ஒருவகையில் இந்திய சிறுமிகள் ஊக்கம் பெற்று சர்ப்பிங்கில் ஈடுபட்டால் போதும் என்பதே என் ஆசை, கனவு, லட்சியம்’’ என்ற நம்பிக்கை வரிகளோடு விடைக்கொடுக்கிறார்.

Next Story