குறைந்த செலவில் நான்கு சக்கர வாகனம்


குறைந்த செலவில் நான்கு சக்கர வாகனம்
x
தினத்தந்தி 15 May 2021 1:01 PM GMT (Updated: 15 May 2021 1:01 PM GMT)

கேரளாவில் 18 வயது இளைஞர் பயன்படாத தொழில்நுட்ப பாகங்களைப் பயன்படுத்தி நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

அங்கடிபுரத்தைச் சேர்ந்த முகமது ஷிபின் என்ற மாணவர் அண்மையில் 12-ம் வகுப்பை முடித்தார். நல்ல மதிப்பெண் பெற்ற அவர் அடுத்து இயந்திர பொறியியல் படிக்கத் திட்டமிட்டுள்ளார். இவர் தனது பள்ளிப் பருவத்தின்போதே மின்சார சைக்கிள், சிறிய அளவிலான தானியங்கி பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார்.தற்போது வெறும் 7,500 ரூபாய் செலவில் அசத்தலான நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். அவருக்கு பொது முடக்கக் காலம் பெரும் உதவியாக அமைந்தது. பத்து நாட்கள் திட்டமிடல் மற்றும் 20 நாட்கள் கடின முயற்சியை மூலதனமாக்கினார். பழைய இருசக்கர வாகனத்தின் இயந்திரம், பழைய வாகன உதிரிபாகங்கள் மூலமே செயல் வடிவம் பெற்றுவிட்டது. வாகன வடிவமைப்பு பணியின்போது இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வெல்டிங் செய்தல், துளையிடுதல், வெட்டுதல் போன்ற வேலைகளை அவரே செய்துவிட்டார்.

இந்த வாகனத்தை பெட்ரோல் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயக்கலாம். பெட்ரோல் மூலம் இயக்கினால் நாற்பது கிலோ மீட்டர் வரையிலும், பேட்டரி சக்தியில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் 2 மணி நேரம் வரையிலும் பயணிக்கலாம் என்கிறார், அதனைக் கண்டுபிடித்தவரான ஷிபின்.

பெட்ரோல் டேங்க் நான்கு லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதைத் தவிர வாகனத்தில் உள்ள அதிர்வைத் தாங்கும் வசதி போன்ற அத்தியாவசிய தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Next Story