மிதக்கும் அணுமின் நிலையம்


மிதக்கும் அணுமின் நிலையம்
x
தினத்தந்தி 15 May 2021 2:10 PM GMT (Updated: 15 May 2021 2:10 PM GMT)

2007-ம் ஆண்டு, அகாடெமிக் லோமோனோசோவ் (Akademik Lomonosov) என்று ரஷிய மொழியில் பெயரிடப்பட்ட அந்தக் கப்பலின் அடிப்பாகம் உயிர் பெறுகிறது. நீர்முழ்கிக் கப்பல்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றில் அந்தக் கப்பலின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடக்கின்றன.

இது மற்ற கப்பல்களைப் போல இல்லை. இது நீர்மூழ்கிக் கப்பல் கிடையாது; போர்க்கப்பல் கிடையாது. பயணிகள் அல்லது சரக்குக் கப்பலா? என்றால் அதுவும் இல்லை. இந்தக் கப்பல் கடலில் மிதக்கும் ஓர் அணுமின் நிலையம். இந்தக் கப்பலை உருவாக்க மொத்தம் 6 பில்லியன் ரூபிள்கள் செலவாகி இருக்கிறது. அதாவது 232 மில்லியன் டாலர்கள். 144 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது செயல்பட போவது ஆர்டிக் பிரதேசங்களில்... அதுவும் மிதந்து கொண்டே!

தற்போது இதன் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், முன்னோட்ட நிகழ்விற்காக இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தை, ரஷியாவின் துறைமுக நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.தற்போது கிளம்பியுள்ள இந்தக் கப்பல் வடமேற்கு ரஷியாவிலுள்ள மற்றொரு துறைமுக நகரான முர்மன்ஸ்க் (Murmansk) என்ற இடத்தில் நின்று, பயணத்திற்குத் தேவையான எரிபொருளை நிரப்பிக்கொள்ளும். இதன் கடைசி நிறுத்தம் ஆர்டிக் வளைவில் உள்ள பெவெக் (Pevek) என்னும் இடம். இந்தக் கப்பல் அடுத்த வருட இறுதிக்குள் அங்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே சென்றவுடன் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வசிக்கும் ஓர் ஊருக்கு இந்த மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் கொடுக்க முடியும். தற்போது புவி வெப்பமயமாதல் மூலம் பனிப்பாறைகள் உருகி சுலபமான கடல் வழிகள் பல புலப் படுவதால், இந்தக் கப்பலை கொண்டு ஆர்டிக் பிரதேசங் களின் புதைபடிவ எரிபொருள்களையும் பயன்படுத்தி எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியும்.

இந்த மிதக்கும் அணுமின் நிலையம் மட்டும் உயிர் பெற்றுவிட்டால் ரஷியாவில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு பழைய மின் நிலையங்களை (ஓர் அணுமின் நிலையம் மற்றும் ஒரு நிலக்கரி மின் நிலையம், முறையே 1974 மற்றும் 1961-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை) நிரந்தரமாக மூடிவிடலாம். இதனால் அங்கே ஏற்படும் காற்று மாசைத் தடுக்கலாம் என்பது ரஷியாவின் கணக்கு. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பிவிட்டன. பலர் இதை விபரீத முயற்சி என்றும் இந்தக் கப்பலை `மிதக்கும் செர்னோபில்' மற்றும் `நியுக்ளியர் டைட்டானிக்' என்று விமர்சித்திருக்கிறார்கள்.

ஆனால், இதைத் தயார் செய்த ரஷிய அரசின் நிறுவனம் இந்தக் கப்பல் முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்றும், சர்வதேச அணுசக்தி மையத்தின் விதிமுறைகளின்படிதான் தயாரித்திருக்கிறோம் என்றும் உறுதியளித்துள்ளது. சுனாமி அல்லது மற்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் இந்தக் கப்பல் தாங்கும் என்றும், இதனால் சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது. 

இருந்தும் இந்தக் கப்பலுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஏற்கனவே புவி வெப்பமயமாதல் நிகழ்வால் பாதிப்படைந்து இருக்கும் ஆர்டிக் பிரதேசம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

இந்தக் கப்பலின் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதற்குத் தானாக பயணம் செய்யும் திறன் கிடையாது. உள்ளே அதற்கான பாகங்கள் எதுவும் இல்லை. எல்லா இடத்தையும் அணுமின் நிலையமே ஆக்கிரமித்து விட்டது. எனவே, வெளியில் இருந்து வேறு ஓர் இயந்திரத்தின் உதவியுடன் `வரை இழுவை' (Towing) செய்யப்பட்டு இந்தக் கப்பல் கடலில் செலுத்தப்படும்.

Next Story