கைவசம் அரை டஜன் படங்கள்: பாலிவுட்டை கலக்கும் ரகுல் பிரீத் சிங்


கைவசம் அரை டஜன் படங்கள்: பாலிவுட்டை கலக்கும் ரகுல் பிரீத் சிங்
x
தினத்தந்தி 17 May 2021 2:18 PM GMT (Updated: 17 May 2021 2:18 PM GMT)

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் நிலைத்து நின்று வருபவர் ரகுல் பிரீத் சிங். வசீகரமாக முகத்தோற்றம் கொண்ட இவர், கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல டைட்டில்களைப் பெற்றவர். அதன் மூலமாக சினிமாத் துறையில் நுழையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பஞ்சாப் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், டெல்லியில் பிறந்து வளர்ந்தவராகவும் இருந்தாலும், சினிமாத் துறையில் அவருக்கான நுழைவு வாசலை திறந்து விட்டது, கன்னட சினிமாத்துறை தான். 2009-ம் ஆண்டு தன்னுடைய 18-வது வயதில் ‘கில்லி’ என்ற திரைப் படம் மூலமாக சினிமாத் துறையில் கால் பதித்தார், ரகுல் பிரீத் சிங்.

ஆனால் அவரை வாரியணைத்துக் கொண்டது தெலுங்கு சினிமாதான். இதுவரை 30 படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், தெலுங்கில் மட்டும் 18 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கோலிவுட் என்று அழைக்கப்படும் தமிழ் சினிமாவிற்கு இவர் 2012-ம் ஆண்டே அறிமுகமாகிவிட்டார். ‘தடையற தாக்க’, ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’, கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, சூர்யாவோடு ‘என்.ஜி.கே’ என நடித்திருந்தாலும், இவருக்கு தமிழில் ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தப் படம் என்றால் அது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மட்டுமே. 

மற்ற படங்கள் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் சென்றுவிட்டதால், ரகுல் பிரீத் சிங்கால் தமிழில் நிலையாக காலூன்ற முடியவில்லை. சிவகார்த்திகேயனோடு நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘அயலான்’ திரைப்படம், கமலோடு நடிக்கவிருக்கும் ‘இந்தியன்-2’ அவருக்கு தமிழில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்.

இந்தியாவில் எத்தனை மாநிலப் படங்களில் நடித்தாலும், அனைத்து நடிகைகளும் விரும்புவது, பாலிவுட்டில் நாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான். அந்த வாய்ப்பு ரகுல் பிரீத் சிங்குக்கு 2014-ம் ஆண்டே ‘யாரியன்’ என்ற படம் மூலமாக கைவரப்பெற்றது. ஆனால் நட்பைப் பற்றி சொல்லும் அந்த திரைப்படத்தில் நண்பர்களாக பலர் நடித் திருந்ததால், அவரும் பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் போய்விட்டார். இருப்பினும் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் ரூ.10 கோடியில் எடுக்கப்பட்ட அந்தப் படம், 55 கோடி ரூபாயை வசூல் செய்தது. அதன்பிறகு தெலுங்கு சினிமாவில் 
தனக்கு இருந்த மார்க்கெட்டை பயன்படுத்தி தொடர்ச்சியாக அங்கு பல படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ‘அயாரி’ என்ற படத்தின் மூலமாக மீண்டும் பாலிவுட் வாய்ப்பு ரகுல் பிரீத் சிங்குக்கு கிடைத்தது. இந்த முறை அவர் தன்னுடைய இடத்தை பாலிவுட்டில் பதிவு செய்ய கடுமையாக போராடினார். அந்த வாய்ப்பை 2019-ம் ஆண்டு வெளியான ‘தே தே பியார் தே’ என்ற படம் ஏற்படுத்திக்கொடுத்தது. இந்தப் படத்தில் அஜய்தேவ்கன் மற்றும் தபு ஆகியோருடன் முக்கியமான வேடத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்தார். இந்தப் படம் அதிரி புதிரி வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ஓரளவு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அதன் காரணமாக பாலிவுட்டில் ரகுல் பிரீத் சிங்குக்கு பட 
வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதே ஆண்டில் ‘மார்ஜவான்’, 2020-ம் ஆண்டில் ‘சிம்லா மிர்ச்சி’ ஆகிய படங்கள் வெளியாகின. காதல் திரைப்படமாக உருவாகியிருந்த ‘சிம்லா மிர்ச்சி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதில் நடித்திருந்த ரகுல் பிரீத் சிங், பாலிவுட் ரசிகர்களின் மனதை மயக்கும் வகையில் மிக அழகாக காண்பிக்கப்பட்டிருந்தார். அவர் மீது பாலிவுட் ரசிகர்களுக்கு இருந்த ஈர்ப்பு, தற்போது அவருக்கு அரை டஜன் படங்களை வரிசை கட்டி அவர் கையில் வழங்கியிருக்கிறது.

‘மே டே’, ‘தேங்க் காட்’ ஆகிய இரு படங்களிலும், மீண்டும் அஜய்தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார். ‘அட்டாக்’ என்ற படத்தில் ஜான் ஆப்ரகாம் ஜோடியாகவும், ‘சார்தார் கா கிராண்ட் சன்’ என்ற படத்தில் அர்ஜூன் கபூர் ஜோடியாகவும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத் திருக்கிறது. மேலும் ‘டாக்டர்ஜி’ என்ற படத்திலும், பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் பெயரிடப்படாத அந்த படத்தை பிரபல மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்குகிறார். அந்தப் படத்தை தயாரிப்பவர், பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ரோனி ஸ்க்ரூவாலா. 

இந்தப் படம் காமெடி கலந்து சமூகப் படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரகுல் பிரீத் சிங், காண்டம் பரிசோதனையாளராக நடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வேடத்தில் நடிக்க முதலில் அனன்யா பாண்டே, சோயிப் அலிகான் மகள் சாரா அலிகான் ஆகியோரிடம்தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் காண்டம் பரிசோதகர் என்பதைக் கேட்டதுமே, அவர்கள் அதில் நடிக்க மறுப்பு சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே படக்குழுவினர் ரகுல் பிரீத் சிங்கை அணுகியிருக் கிறார்கள். இயக்குனரிடம் முழுக் கதையையும், காட்சி யமைப்புகளையும் கேட்டறிந்து கொண்ட ரகுல் 
பிரீத் சிங், அதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். இந்தப் படம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் என்று, படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நாயகர்களாக இருக்கும் ஜான் ஆப்ரகாம், அஜய்தேவ்கன், அர்ஜூன் கபூர் ஆகியோருடன் நடிக்கும் படங்களும், ரகுல் பிரீத் சிங் அங்கு கோலோச்ச ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதே பாலிவுட் ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது.


Next Story