நுரையீரலை வலுப்படுத்தி ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் வழிகள்


நுரையீரலை வலுப்படுத்தி ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் வழிகள்
x
தினத்தந்தி 17 May 2021 2:27 PM GMT (Updated: 17 May 2021 2:27 PM GMT)

உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு நுரையீரல் நன்றாக செயல்பட வேண்டியது அவசியம். நுரையீரலில் இருந்து வடிகட்டப்பட்ட பின்னரே, ஆக்சிஜன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைகிறது.

நுரையீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றும் நுரையீரலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. ஏனெனில் கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்கும், இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கொரோனா நோய்த்தொற்றை தவிர்க்க நுரையீரலை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பால் 60 முதல் 65 சதவீத நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. போதிய கவனமும், சிகிச்சையும் மேற்கொள்ளாவிட்டால் நாட்கள் செல்ல, செல்ல அவர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனின் அளவு குறைய தொடங்கிவிடும். சுவாசிப்பதற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் உடல் நிலை மோசமாகிவிடக்கூடும். 

இத்தகைய சூழ்நிலையில், நுரையீரலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். நுரையீரலை வலிமையாக்கும் சில உணவுகள் குறித்து பார்ப்போம்.

பூண்டு: ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை பூண்டில் நிறைந்துள்ளன. இவை நுரையீரலை வலுவாக வைத்திருக்கவும் உதவுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2-3 பூண்டு பல்களை உட்கொள்ளலாம். பூண்டு பற்களை இரவில் நீரில் ஊறவைத்து காலையிலும் உட்கொள்ளலாம்.

தேன்: தினமும் தேன் பருகுவதும் நுரையீரலை வலுப்படுத்தும். குறிப்பாக காலையில் சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து பருகுவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். மேலும் தேன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் அது நுரையீரலை வலுப்படுத்த உதவும்.

துளசி: துளசி இலைகளில் பொட்டாசியம், இரும்பு, குளோரோபில், மெக்னீசியம், கரோட்டின் மற்றும் வைட்டமின்-சி ஆகியவை அதிக அளவில் உள்ளன. அவை நுரை யீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க துணைபுரியும். தினமும் 4-5 துளசி இலைகளை மென்று வரலாம். துளசி டீயும் பருகலாம்.

நீர்ச்சத்து: உடலில் தோராயமாக 60 சதவீதம் நீர் நிரம்பி இருக்கிறது. அதன் அளவை சீரான பராமரிப்பது அவசியமானது. கார்பனேட்டட் பானங்கள், ஆல்கஹால் மற்றும் சோடியம் அதிகம் கொண்ட உணவுகள் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதனை தவிர்த்து உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவை மேம்படுத்த உதவும்.

அத்தி: இதில் வைட்டமின் ஏ, சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை உட்கொள்வது நுரையீரலை வலிமையாக்கும். இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பு பாலுடன் அத்தியை சாப்பிடுங்கள். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்து வதிலும் அத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சள்: இது ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாலில் மஞ்சள் கலந்து பருகலாம். மஞ்சளுடன் லவங்கப்பட்டை, கிராம்பு, இஞ்சி, துளசி போன்றவற்றை கலந்து காபி தயாரித்து பருகலாம். இது நுரையீரலை வலுவாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்.

செடிகள்: வீட்டுக்குள் காற்றை சுத்திகரிக்கும் செடிகளை வளர்க்கலாம். அவை அறைக்குள் சூழ்ந்திருக்கும் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் வீரியத்தை அகற்றி, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் சுவாசத்திற்கு தேவையான ஆக்சிஜன் அதிக அளவில் கிடைக்கும்.

புகைப்பழக்கம்: புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இரண்டு வாரங்களுக்கு அந்த பழக்கத்தை நிறுத்தி பாருங்கள். ஒட்டுமொத்தமாக உடலில் ஆக்சிஜன் அளவு மேம்பட்டிருப்பதை காணலாம். இந்த குறுகிய காலத்தில் நுரையீரலின் செயல்பாடு 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Next Story