என் இனிய சினேகிதனே...! -சைக்கிள் பயண காதல் கதை


என் இனிய சினேகிதனே...! -சைக்கிள் பயண காதல் கதை
x
தினத்தந்தி 30 May 2021 3:02 PM GMT (Updated: 30 May 2021 3:02 PM GMT)

நிகோலஸ் கார்மென்- லேயல் வில்காக்ஸ் இருவரும் சைக்கிள் பயண காதலர்கள். கண்டம் விட்டு கண்டம் கடக்கும் அளவுக்கு நெடுந்தூர பயணத்தை விரும்புபவர்கள். சைக்கிள்தான் இவர்களுடைய ‘காதல் சின்னம்’. இருவரையும் காதலில் கசிந்துருக வைத்ததும், பிரிவை சந்திக்க வைத்ததும் சைக்கிள்தான்.

வில்காக்ஸ்-நிகோலஸ் இருவரும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் கதை அழகானது. கல்லூரி காலத்தில்தான் காதல் பூத்திருக்கிறது. அப்போது நிகோலஸ், வில்காக்ஸிற்கு ஒரு சைக்கிளைப் பரிசளிக்கிறார். அந்த சைக்கிள் அவருக்கு ரொம்பவும் பிடித்து போகிறது. அந்த சைக்கிளில் பயணிப்பது அலாதியான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சைக்கிள்தான் அவரது பிரதான பொழுதுபோக்காகவும் மாறிவிடுகிறது. இருவரும் கல்லூரி படிப்பை நிறைவு செய்கிறார்கள். அதன் பிறகு சைக்கிளில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் கையில் பணமில்லை. அது கோடை காலம். இருவரும் வெவ்வேறு வேலைகளில் சேர்ந்து பணம் சேர்க்கிறார்கள். இலையுதிர் காலம் தொடங்கும் சமயத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

‘‘அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. பல வண்ணங்களில் இலைகளும், பூக்களும் விழுந்திருந்த சாலையில் எங்கள் பயணத்தை தொடங்கினோம்’’ என்று சைக்கிள் பயணத்தின் தொடக்க நாளை நினைவு கூர்கிறார் நிகோலஸ்.

இருவரும் ஒன்றாக நெடுந்தூரம் பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்கள். கையில் இருக்கும் பணம் தீரும்போது வேலைக்கு சென்று சம்பாதிப்பார்கள். பின்பு அந்த பணத்தைக் கொண்டு பயணத்தைத் தொடர்வார்கள். இப்படியாகக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு பயணித்திருக்கிறார்கள். சைக்கிள் பயணம் பல சுவாரசிய அனுபவங்களையும் கொடுத்திருக்கிறது. வில்காக்ஸ் சைக்கிள் ஓட்டும்போது மட்டுமல்ல, பயணத்தின்போது மற்ற நபர்களிடம் பேசும்போதும் ஹெல்மெட்டை கழற்றுவதில்லை. அதற்கான காரணத்தை புன் சிரிப்போடு சொல்கிறார்.

‘‘ஒருமுறை நான் தொடர்ந்து 17 நாட்களாக குளிக்கவே இல்லை. மனம் போன போக்கில் சைக்கிளை ஓட்டிக் கொண்டே இருந்தேன். ரொம்பப் பசித்தது. ஒரு கடை முன்பு நிறுத்திவிட்டு, சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கலாம் என்று உள்ளே சென்றேன். ஹெல்மெட்டைக் கழற்றியதும் அங்கிருந்த அத்தனை பேரும் என்னை ஏதோ மாதிரி பார்த்தார்கள். பில்லிங் கவுண்டரை நெருங்கினேன். அங்கிருந்த பெண் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு `எந்தப் புயலில் இருந்து தப்பித்து வந்தீர்கள்?' என்று கேட்டார். நான் உடனே ஓடிப் போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். என் மொத்தக் கூந்தலும் சிக்கு விழுந்து, வானத்தை நோக்கி நின்று கொண்டிருந்தது. அன்று முதல் மக்கள் மத்தியில் நான் ஹெல்மெட்டைக் கழற்றுவதே இல்லை’’ என்று சொல்லிவிட்டு இடைவிடாமல் சிரிக்கிறார், வில்காக்ஸ்.

இருவரும் இணைந்து நெடுந்தூரம் சைக்கிள் ஓட்டியபோது காதலும் கூடவே பயணித்திருக்கிறது. சைக்கிள் பந்தயம்தான் காதலுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் பயணித்தபோது, ஒரு சைக்கிள் பந்தயம் குறித்து கேள்விப்படுகிறார்கள். நிகோலஸிற்கு போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமில்லை. ஆனால், வில்காக்ஸ் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற முடிவு செய்கிறார். வலிமையான ஆண்களுக்கு மத்தியில் அந்தப் போட்டியில் கலந்துகொண்டார். அது கடினமாக இருந்திருக்கிறது. ஆனாலும் அது வில்காக்ஸிற்கு பிடித்திருந்தது. அன்று முதல் உலகின் மிகக் கடினமான சைக்கிள் போட்டிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். முதலில் தோல்விகளைச் சந்தித்தாலும், விரைவிலேயே பல வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்துவிட்டார். குறிப்பாக, நெடுந்தூர சைக்கிள் போட்டியான 'ட்ரான்ஸ் ஆம்' போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தார்.

அதன் பிறகு வில்காக்ஸ், நிகோலசுடன் சேர்ந்து நெடுந்தூர பயணங்கள் செல்வதை குறைத்துக்கொண்டார். போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு ஆண்டுக்கு தோராயமாக 20 ஆயிரம் மைல்கள் சைக்கிள் ஓட்டுகிறார். தூங்குவதற்கு மூன்று மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார். மற்ற நேரங்களை சைக்கிள் ஓட்டுவதிலேயே கழிக்க விரும்புகிறார். இது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், வில்காக்ஸ் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

‘‘இங்கு எவருடைய உடலும் கெட்டுபோகத்தான் போகிறது. எல்லோரும் சாகத்தான் போகிறோம். யார் வாழ்க்கையும் கஷ்டமில்லாமல் இருக்கப் போவதில்லை. எனக்கும் அப்படித்தான். ஆனால், சைக்கிளை ஓட்டும் போது நான் பார்க்கும் காட்சிகள் என்னைப் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும். நான் இதில் வெற்றிகளைக் கணக்கில் கொள்வதில்லை. என் மகிழ்ச்சி யைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறேன்’’ என்று சொல்கிறார் வில்காக்ஸ். 11 ஆண்டுகளாக காதலோடு இணைந்து பயணப்பட்ட வில்காக்ஸும், நிகோலஸும் தற்போது ஒன்றாக இல்லை. பிரிந்துவிட்டார்கள். வில்காக்ஸ் தனிமை பயணத்திற்கு தன்னை முழுமையாக தயார்படுத்திவிட்டார்.

‘‘சில மாறுபட்ட அதிசயங்கள் ஏற்படுத்திய நிகழ்வுகளால் வில்காக்ஸ் என்னை விட்டு தனியாக நீண்ட தூரம் போய்விட்டார். அதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடுமையான சாலைகள், மேடு, பள்ளங்கள், வெயில், குளிர், மழைக்கு தாக்குப்பிடித்து சந்தோஷங்களை சுமந்து கொண்டிருந்த 11 ஆண்டு கால வாழ்க்கை மொத்தமாக ஆவியாகி மறைந்துவிட்டது. அதை நினைக்கும்போது நெஞ்சம் வலிக்கிறது...’’ என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் நிகோலஸ்.

Next Story