வீணாக செலவாகும் தண்ணீர்.. சிக்கனத்துக்கு வழிகாட்டும் ‘கேப்டவுன்’


வீணாக செலவாகும் தண்ணீர்.. சிக்கனத்துக்கு வழிகாட்டும் ‘கேப்டவுன்’
x
தினத்தந்தி 30 May 2021 3:17 PM GMT (Updated: 30 May 2021 3:17 PM GMT)

தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது. அது இயற்கையின் வரம். ஆனால் அதனை சிக்கனமாக பயன்படுத்தி சேமிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஏற்கனவே உலக வெப்பமயமாதல் பிரச்சினை தீவிரமடைந்திருக்கிறது. மறுபுறம், நீர் நிலைகளில் சேமிக்கப்படும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அதன் வீரியம் அதிகமாகவே இருக்கும். தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். பூமியின் பெரும் பகுதி நிலப்பரப்பு தண்ணீரால் நிரம்பி இருக்கிறது. ஆனாலும் நீரின் தன்மை குடிப்பதற்கு தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருப்பதில்லை. கண்ணுக்கு தெரியாமல் பல வழிகளில் தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. மனிதர்களின் தேவைக்கு மட்டுமல்ல, விலங்குகள், பறவை இனங்கள் என பல உயிரினங்கள் வாழ்வதற்கும் தண்ணீர் அவசியமானதாகிறது. இறைச்சிக்காக ஒரு பிராணியை வளர்ப்பது முதல், அதனை சமைத்து சாப்பிடுவது வரை கணக்கிட்டு பார்த்தால் ஏராளமாக தண்ணீர் செலவாகிறது. 

ஆடு, மாடுகள், பறவைகளை வளர்ப்பது, அவற்றை குளிப்பாட்டுவது, தினமும் அவற்றின் இருப்பிடத்தை சுத்தம் செய்வது, இறைச்சியை கழுவுவது என்று பல கட்டங்களில் தன்ணீர் அதிகமாக செலவாகிறது. அதிலும் முக்கியமாக பன்றி வளர்க்க அதிக நீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்தி செய்வதற்கு கிட்டத்தட்ட 5,900 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது பன்றி வளர்ப்பதில் இருந்து அதனை பராமரிப்பது, தினமும் சுத்தம் செய்வது என எல்லா காலகட்டங்களிலும் இவ் வளவு தண்ணீர் செலவாகிறது. கோதுமை மற்றும் பிற தானிய வகைகள் ஒரு கிலோ உற்பத்தி செய்வதற்கு சுமார் 1500 லிட்டர் தண்ணீர்தான் தேவைப்படுகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு உற்பத்தி செய்வதற்கு சுமார் 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஒரு கிலோ தக்காளி உற்பத்திக்கு 214 லிட்டர் தண்ணீர் போதுமானதாக இருக்கிறது. ஒரு கிலோ சாக்லெட் தயாரிப்புக்கு 17,196 லிட்டர், ஒரு கிலோ கோழி இறைச்சி தயாரிப்புக்கு 4,325 லிட்டர், ஒரு கிலோ அரிசிக்கு 2,497 லிட்டர், ஒரு கிலோ ஆப்பிளுக்கு 822 லிட்டர், வாழைப்பழத் துக்கு 790 லிட்டர், ஒரு முட்டைக்கு 196 லிட்டர்... இப்படி ஒவ்வொரு பொருளின் உற்பத்தியிலும் தண்ணீரின் முக்கிய பங்கு இருக்கிறது. எல்லா உலக நாடுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

தானியங்களை விட இறைச்சி உற்பத்திக்குத்தான் அபரிமிதமாக தண்ணீர் செலவாகிக்கொண்டே இருக்கிறது. இறைச்சி வகைகளின் தேவையில் பன்றி வளர்ப்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. பன்றி வளர்ப்பை குடிசை தொழிலாக மட்டுமின்றி தொழிற்சாலைகள் போல கொட்டகை அமைத்து பராமரிக்கிறார்கள். அதற்கு அதிக நீர் செலவாகிறது. நாட்டு பன்றிகளை விட இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பன்றிகளுக்குத்தான் அதிக தண்ணீர் செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டு பன்றிகள் அதிக இறைச்சி தரக்கூடியவை என்பதால் அதனை வளர்ப்பதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பன்றிக்கு அளிக்கப்படும் உணவில் அதிக நீர் கலக்க வேண்டியுள்ளது. ஒரு பன்றி குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தினமும் சுமார் 75 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது தவிர பன்றிகள் கர்ப்பமாக இருக்கும்போதும், உடல் நிலை சரியில்லாமல் இருக்கும்போதும், கோடை காலங்களிலும், அவற்றை பராமரிப்பதற்கும், கூண்டுகளை சுத்தப்படுத்துவதற்கும் அதிக நீர் செலவாகிறது. வளர்க்கப்படும் பன்றிகளை இறைச்சிக்கு தயார் செய்வதற்கு முன்பு அவைகளை குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டி யிருக்கும். பன்றி இறைச்சிகளையும் குளிர்ந்த இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டியிருக்கும். அவற்றை வெட்டி, கழுவி பேக்கிங் செய்யும்போது ஒவ்வொரு நிலையிலும் தண்ணீர் செலவாகிக்கொண்டே இருக்கும். இந்த தண்ணீரை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றும்போது சுற்றுச்சூழல் மாச டையக்கூடும்.

பன்றி மட்டுமல்ல மற்ற இறைச்சி வகைகள், உணவு பொருட்கள் தயாரிப்புக்கும் தண்ணீர் அவசிய தேவையாக இருக்கிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் தண்ணீரை செலவழித்தால் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் போல தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

இன்று தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் கேப்டவுன் நகரம் ஒரு காலத்தில் செழிப்பான நகரங்களுள் ஒன்றாக அமைந்திருந்தது. 6 பெரிய அணைக்கட்டுகளில் இருந்து அந்த நகரத்திற்கு தண்ணீர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் பூமி வெப்பமயமாதல் பிரச்சினையால் தண்ணீர் நிலத்தில் வழிந்தோடியபடி அணையை எட்டுவதற்குள் ஆவியாகும் அவலம் அரங்கேறியது. 2018-ம் ஆண்டு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. 2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் போதிய மழையின்மை காரணமாக மோசமான வறட்சியை எதிர்கொண்டது. கேப்டவுன் நகரத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் அணைகளின் நீர் இருப்பு 11 சதவீதத்திற்கும் கீழ் சரிந்து போனது. அங்கு இருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்பட்டது. ‘ஜீரோ டே’ கடைப்பிடிக்கப்பட்டு அங்கு வசிக்கும் ஒவ்வொரு வருக்கும் நாளொன்றுக்கு 50 லிட்டருக்கும் குறைவாக நீர் வினியோகிக்கப்பட்டது. அந்த தண்ணீரைத்தான் குளிப்பதற்கு, சமைப்பதற்கு, துணி துவைப்பதற்கு, குடிப்பதற்கு என எல்லாவற்றிற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டானது. நகரில் உள்ள குடிநீர் குழாய்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் நிலைக்கு ஆளானார்கள்.

கேப்டவுனில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை பார்த்து உலகமே பதறிப் போனது. பசுமையான இடங்கள், வயல்வெளிகள் எல்லாம் பரிதாபமாக காட்சியளித்தன. பசுமையோடு காட்சியளிக்கும் மரங்களெல்லாம் நீரின்றி நிர்கதியாய் நின்றன. பெரிய பணக்காரர்கள் கூட தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை உண்டானது. சொத்துக்களை விற்கவும் முடியாமல் தடுமாறினார்கள். அந்த நகரில் யாரும் சொத்துக்களை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. 2018-ம் ஆண்டு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக இப்போது தண்ணீர் நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கேப்டவுனுக்கு நீர் வழங்கும் அணைகள் 95 சதவீதம் நிரம்பின. ஆனாலும் இப்போதும் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். தண்ணீரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன. அங்கு வசிப்பவர்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் பழகிவிட்டார்கள். கேப்டவுன் நகர மக்களை போல் தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்காவிட்டால், நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் கேப்டவுன் நிலைமை ஏற்படலாம்.

Next Story