சிறப்புக் கட்டுரைகள்

காற்றோட்டம் மிகுந்த ‘கொரோனா கவச உடை’ + "||" + Ventilated ‘Corona Armor Style’

காற்றோட்டம் மிகுந்த ‘கொரோனா கவச உடை’

காற்றோட்டம் மிகுந்த ‘கொரோனா கவச உடை’
கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதார பணியாளர்கள் ‘பி.பி.இ. கிட்’ எனப்படும் பிளாஸ்டிக் கவச உடையை அணிந்து பணிபுரிகிறார்கள். கொரோனா தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக உதவும் பி.பி.இ. கிட் உடையை பல மணி நேரம் அணிவது சவாலான விஷய மாகவே இருக்கிறது.
அந்த உடை பாதுகாப்பு கருதி இறுக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் இறுக்கமாக அணியவேண்டி இருப்பதாலும் போதுமான காற்றோட்டம் உள் செல்வதற்கு வழியில்லாத சூழல் நிலவுகிறது. அதனால் அந்த உடையை அணிந்த சில நிமிடங்களிலேயே அசவுகரியங்களை அனுபவிக்கிறார்கள். உடைக்குள் போதிய காற்றோட்டம் இல்லாததால் ஒரு மணி நேரம் கூட அணிய முடியாமல் அவதிப்படவும் செய்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக ‘கூல் பி.பி.இ கிட்’ என்ற கவச உடையை வடிவமைத்திருக்கிறார், நிஹால் சிங் ஆதர்ஷ்.

19 வயதாகும் இவர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர். இவரது தாயார் பூனம் கவுர் ஆதர்ஷ். மருத்துவரான இவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பி.பி.இ. கிட் அணிந்து வருகிறார். அதனை தினமும் நீண்ட நேரம் அணியும்போது மருத்துவர்கள், நர்சுகள் எதிர்கொள்ளும் சிரமங்களை பூனம், தன் மகனிடம் விவரித் திருக்கிறார். அதை கேட்டதும், ‘பி.பி.இ. கிட்’ உடையை சவுகரியமாக அணிவதற்கு எந்த மாதிரியான வடிவமைப்பை கையாளலாம் என்று நிஹால் சிந்திக்க தொடங்கி இருக் கிறார். உடைக்குள் போதிய காற்றோட்ட வசதி இல்லாததுதான் பிரச்சினைக்கு காரணம் என்பதை அறிந்ததும், அதற்குள் மாற்று வழிமுறையை புகுத்தி இருக்கிறார். அதாவது பெல்ட் போன்று அணியக்கூடிய காற்றோட்ட சாதனத்தை உருவாக்கி இருக்கிறார். லித்தியம் அயன் பேட்டரியின் துணையுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சாதனத்திற்கு ‘கோவ்-டெக் வென்டிலேஷன் சிஸ்டம்’ என்று பெயரிட்டிருக்கிறார். இது 6 முதல் 9 மணி நேரம் வரை காற்றோட்ட வசதியை அளிக்கக்கூடியது.

‘‘நீங்கள் அணிந்திருக்கும் பி.பி.இ. கிட் உடையுடன் கோவ்-டெக் வென்டிலேஷன் சிஸ்டத்தை அணிந்து கொண்டால் மின் விசிறியின் கீழ் அமர்ந்திருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்த சாதனம் சுற்றியுள்ள காற்றை ஈர்த்து, அதை வடிகட்டி பி.பி.இ. உடைக்குள் பரவச்செய்யும். பொதுவாக காற்றோட்டம் இல்லாததால் பி.பி.இ. உடை வெப்பமாக இருக்கும். அதற்கு தீர்வு காண்பதற்கு நிலையான காற்றோட்டம் தேவை. அதனை உருவாக்குவதற்கான வழிமுறையைத்தான் இந்த சாதனம் வழங்குகிறது’’ என்கிறார், நிஹால் சிங் ஆதர்ஷ்.

இந்த காற்றோட்ட வடிவமைப்பு சாதனம், பி.பி.இ கிட் உடைக்குள் முழுமையாக காற்றை வழங்குவதை உறுதி செய்கிறது. 100 வினாடிகள் இடைவெளியில் புதிய காற்றையும் வழங்குகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் வழிகாட்டுதலில் இயங்கும் சோமையா வித்யாவிஹார் பல்கலைக்கழகத்தின் ஆர்.ஐ.ஐ.டி.எல். நிறுவனம், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் போன்றவற்றின் வழிகாட்டுதலோடு இந்த சாதனத்தை உருவாக்கி இருக்கிறார். இதற்காக 6 மாதங்கள் அயராது உழைத்து முன் மாதிரி பரிசோதனை சாதனத்தை வடிவைத்திருக்கிறார். அதனை புனேவை சேர்ந்த டாக்டர் விநாயக் மானே என்பவரிடம் கொடுத்து பரிசோதித்திருக்கிறார். ஆனால் அந்த சாதனம் பயன்படுத்துவதற்கு சவுகரியமாக அமையவில்லை. அதைத்தொடர்ந்து வடிவமைப்பில் பல மாற்றங்களை செய்திருக்கிறார். இறுதியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சாதனம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக 20 முன் மாதிரி சாதனங்களை உருவாக்கி பரிசோதித்து பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் மாற்றங்களை செய்ய வேண்டியிருந்திருக்கிறது. எனினும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து மாற்றங்களை செய்து கொண்டே இருந் திருக்கிறார். பெல்டை போல் இடுப்பை சுற்றி அணியும்படி தயாரித்த பிறகுதான் முழு வடிவம் கிடைத்திருக்கிறது.

‘‘இந்த சாதனம் மருத்துவ பணியாளர்களை காற்றோட்டமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உடல் அசவுகரியத்தை தவிர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. மேலும் பல்வேறு பூஞ்சை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் வழிவகை செய்யும்’’ என்கிறார், நிஹால்.