‘மகிழ்ச்சியாக இருங்கள்’ -மனம் நெகிழவைக்கும் சிறுவனின் கையெழுத்து


‘மகிழ்ச்சியாக இருங்கள்’ -மனம் நெகிழவைக்கும் சிறுவனின் கையெழுத்து
x
தினத்தந்தி 30 May 2021 3:48 PM GMT (Updated: 30 May 2021 3:48 PM GMT)

கொரோனா நோயாளி களுக்கு பலர் மனிதாபிமானத்தோடு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உணவோடு அன்பையும், அக்கறையையும் ஊட்டுவது நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அப்படி கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட பார்சலின் மேல் பகுதியில் ‘மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று ஒரு சிறுவன் எழுதிக்கொண்டிருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் கூறும் விதமாக ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கும் அந்த வாசகத்தின் அடியில் மகிழ்ச்சிக்கான குறியீட்டையும் பதித் திருக்கிறான். சிறுவனின் செயலை பலரும் சமூகவலைத்தளங்களில் மனம் நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்கள்.

6 வயதாகும் அந்த சிறுவனின் பெயர் ஆத்விக். போபாலில் வசிக்கும் அவன் 2-ம் வகுப்பு படிக்கிறான். அவனது பெற்றோர் அசுதோஷ்-ரிச்சா இருவரும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ரிச்சா, ‘கோவிட்-19 நிவாரணப்படை’ என்ற தொண்டு நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால்தான் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் வழங்கும் உணவு பார்சலில் ஏதாவதொரு வாக்கியம் எழுத வேண்டும் என்று ரிச்சா முடிவு செய்திருக்கிறார். அதுபற்றி ஆலோசித்தபோது ஆத்விக், ‘மகிழ்ச்சியாக இருங்கள்’ என்ற வார்த்தையை எழுதலாம் என்று கூறி இருக்கிறான். பார்சலின் மீது எழுதும் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறான். ரிச்சா தயார் செய்து வைத்திருந்த உணவு பார்சலின் மீது ஆத்விக் எழுதிக்கொண்டிருந்ததை அவனது மாமா புகைப்படம் எடுத் திருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகிவிட்டது. அதுபற்றி சிறுவன் ஆத்விக் கூறுகையில், ‘‘அம்மாவும், அப்பாவும் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறார்கள் என்பதை நேரில் பார்த்ததும் நானும் அவர்களுக்கு உதவ நினைத்தேன். மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பு கிறேன்’’ என்கிறான்.

ஆத்விக்கின் தந்தை அசுதோஷ், ‘‘பார்சலில் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆத்விக்தான் ‘பி ஹேப்பி’ என்று எழுதலாம் என்று கூறினான். அந்த வாக்கியம் பொருத்தமாக இருந்தது. அன்று அவனுக்கு பிறந்தநாள். அவனது தாயார் 2 பார்சல்களில் எழுதினார். அதைத்தொடர்ந்து ஆத்விக் 60 பார்சல்களில் உற்சாகமாக எழுதினான். அவனது புகைப்படத்தை வைரலாக மாற்ற நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. எங்கள் குழுக்களில்தான் பகிர்ந்து கொண்டோம். அதன் மூலம் அது வைரலாகிவிட்டது’’ என்கிறார்.

Next Story