அழிவை சந்தித்து வரும் ‘தமிழ் மாநிலப் பறவை’


அழிவை சந்தித்து வரும் ‘தமிழ் மாநிலப் பறவை’
x
தினத்தந்தி 30 May 2021 8:55 PM GMT (Updated: 30 May 2021 8:55 PM GMT)

இந்த அரிய பறவை இனம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 30 சதவீதம் அழிவைச் சந்தித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டின் மாநிலப் பறவையாக இருப்பது ‘மரகதப் புறா.’ இந்த அரிய பறவை இனம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 30 சதவீதம் அழிவைச் சந்தித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 4,500 வகையான பறவை இனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30 வகையான பறவைகள், புறா இனத்தைச் சேர்ந்தவை. அவற்றுள் மாடப்புறா, காட்டுப்புறா, நீலகிரி காட்டுப்புறா, தவிட்டுப்புறா, சின்ன தவிட்டுப்புறா, சாம்பல் நெற்றி புறா, பச்சைப்புறா, பெரிய பச்சைப்புறா, மந்திப்புறா மற்றும் மரகதப்புறா என 12 வகையான புறாக்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் மரகதப்புறா மிகவும் அரிய வகையைச் சேர்ந்தது. தமிழகத்தில் எத்தனையோ அழகிய, அரிய வகை பறவைகள் இருந்தாலும், வெப்ப மண்டலம், மித வெப்ப மண் டலப் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்ற மரகதப் புறாவை, தமிழக அரசு மாநிலப் பறவையாக அங்கீகரித்துள்ளது. இந்தப் பறவை அடர் பச்சை நிறத்திலான இறக்கைகளையும், செந்நிற கழுத்தையும், அடர் சாம்பல் நிறம் கொண்ட உடலையும் பெற்றிருக்கும். இந்தப் புறா, 25 செ.மீ. முதல் 28 செ.மீ. உயரம் வரை வளரும். இந்தியாவை தாயகமாகக் கொண்ட இந்தப் புறாக்கள், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான், கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்த மரகதப் புறாக்கள், மலைக் காடுகள், பசுமைமாறா காடுகள், அடர்வனங்கள், தோட்டப்பகுதிகள் மற்றும் பூங்காக்களில் கூடுகட்டி வாழும் தன்மை உடையவை. மழைக்காடுகளில் வாழும் ஒரே பறவை இவைதான். ஆனால் இவை பெரும்பாலும் இனப்பெருக்க காலத்தில் மட்டும்தான் மரத்தில் உள்ள தன்னுடைய கூடுகளைத் தேடிச் செல்லும். மற்ற நேரங்களில் நிலத்தில்தான் காணப்படும். ‘கால்கோ பாப்ஸ் இண்டியா’ என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த பறவை இனத்தில் 3 வகைகள் உள்ளன. இவை தனித்தோ, சிறு குழுக்களாகவோ, ஜோடிகளாகவோ காணப்படும். இவை காடுகளில் தரைப்பகுதியில் காணப்படும் விதைகள், பழங்கள் மற்றும் கரையான்களைத் தேடி உண்ணும். குறைந்த நேரமே மரங்களில் காணப்படும் இந்த புறாக்களுக்கு, மற்ற புறாக்களைக் காட்டிலும் பறக்கும் திறன் குறைவுதான். அதனால் இந்த புறாக்கள் நடப்பதையே விரும்பும். மழைக் காடுகளில் 3 மீ. முதல் 5 மீ. உயரமுள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி வாழும் இயல்புடையவை. மற்ற புறாக்களைப்போல் இல்லாமல் குறைந்த காலம் மட்டுமே இவை இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை வெளிர் சிவப்பு நிறமுள்ள 2 முட்டைகளை இட்டு அடைகாக்கும். ஆனால் ஒரு குஞ்சு மட்டுமே பிழைத்து உயிர் வாழும். பறவைகளுக்கான இடம் பெயர்வு குணாதிசயம் இந்த புறாக் களுக்கு கிடையாது.

ஆந்தை, வல்லூறு, கழுகு, காட்டுப்பூனை மற்றும் சிறிய வகை வேட்டை விலங்கு களால், மரகதப்புறாக்களுக்கு பாதிப்புகள் உண்டாகின்றன. தவிர மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், வேட்டையாடுதல் போன்ற காரணங்களாலும் இவை அழிவு நிலைக்குச் சென்ற வண்ணம் இருக்கின்றன. நம் மாநிலப் பறவையான மரகதப்புறாக்கள், வெளிநாடுகளில் கூண்டுகளில் அடைக்கப்பட்டு அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒரு தேசத்தின் மாநிலப் பறவையைக் காப்பது, அந்த தேசத்தின் அரசின் கடமை என்று நினைக்கக்கூடாது. அது அந்த பெருமைக்குரிய தேசத்தில் வாழும் மக்களுக்கும் உரிய கடமையாகும். வி.மங்களேஸ்வரன், 12-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

Next Story