அலைபேசி ஆபத்து


அலைபேசி ஆபத்து
x
தினத்தந்தி 4 Jun 2021 12:37 PM GMT (Updated: 4 Jun 2021 12:37 PM GMT)

அலைபேசிதான் நிறைய பேருக்கு நெருங்கிய நண்பனாக இருக்கிறது. செல்போன் இல்லாமல் 10 நிமிடங்களை கழிப்பதற்கு சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். செல்போன் இல்லாவிட்டால் எதையோ இழந்ததுபோன்ற உணர்வு அவர்களை ஆட்டிப்படைத்துவிடும்.

எதையுமே அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்தாகிவிடும் என்பது செல்போனுக்கும் பொருந்தும். எப்போதும் செல்போனிலேயே மூழ்கியிருந்தால் ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம்.

செல்போனை தினமும் மணிக்கணக்கில் உபயோகித்தால் தசை நாண் அழற்சி பிரச்சினைக்கு ஆளாகக்கூடும். அதாவது எலும்புடன் தசையை இணைக்கும் திசு வீக்கமடையும். நீண்ட நேரம் செல்போனை கையில் வைத்திருப்பது மணிக்கட்டு மற்றும் முழங்கை பகுதியில் வலியை உண்டாக்கும். செல்போனை பாக்கெட்டில் வைத்திருந்தாலும் சில நிமிடங்கள் கழித்து வேறு எங்கோ வைத்துவிட்டோமோ என்று பதற்றத்துடன் தேடுபவர்களும் இருக்கிறார்கள். அது போன்ற உணர்வுக்கு ‘நோமோபோபியா’ என்று பெயர். செல்போன் தொலைந்து போய்விட்டதோ என்ற பயம் ஏற்படுவதுதான் அதற்கு காரணம். செல்போன் இல்லாமல் 10 நிமிடங்கள் கூட ஓரிடத்தில் உட்கார முடியாத நிலையை எதிர்கொண்டால் அது சிக்கலை அதிகப்படுத்திவிடும்.

தூங்குவதற்கு முன்பு செல்போனை உபயோகித்தால் தூக்கம் தாமதமாகும். செல்போன் திரையில் இருந்து வெளிப்படும் ஒளி தூக்கத்தை தூண்டும் ஹார்மோனின் செயல்பாட்டை தடுத்துவிடும். அதனால் தூங்குவது கடினமாகிவிடும். ஆதலால் தூங்குவதற்கு முன்பு குறைந்தது அரை மணி நேரமாவது செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சாப்பிடும்போது கூட நிறைய பேர் செல்போனை பார்த்து கொண்டிருப்பார்கள். அப்படி பார்ப்பது சாப்பிடும் நேரத்தை அதிகப்படுத்தும். சாப்பிடும் அளவும் அதிகமாகும். செல்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது மூளையின் சமிக்ஞைகளில் தொய்வு உண்டாகும். சாப்பிடும் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமன் பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

செல்போனை மணிக் கணக்கில் பயன்படுத்தும்போது கவனச் சிதறல் உண்டாகும். சராசரியாக மனிதனின் கவனம் 8 வினாடிகள் மட்டுமே நீடிக்கும். செல்போனின் பயன்பாடு அதிகரிக்கும்போது கவனத்தை ஈர்க்கும் நேரம் குறையும். கவன சிதறலால் அவதிப்பட நேரிடும்.

Next Story