சிறப்புக் கட்டுரைகள்

மரபணுக்களால் ஏற்படும் குடும்ப நோய்கள் + "||" + Family diseases caused by genes

மரபணுக்களால் ஏற்படும் குடும்ப நோய்கள்

மரபணுக்களால் ஏற்படும் குடும்ப நோய்கள்
மரபணுக்கள் மூலம் குடும்பத்தின் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நோய் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக தாயிடம் இருந்த நோய் மகளுக்கு எதிர்காலத்தில் ஒருவேளை வரலாம். சில மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் மரபணு நோய்களை கட்டுப்படுத்தலாம்.
புற்றுநோயும் ஒருவகையில் மரபணு நோயுடன் தொடர்புடையதாகும். ஏனெனில் இது உடலில் உள்ள செல்களை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது. ஒரே ரத்த உறவை சேர்ந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் புற்றுநோய் இருந்தால் அது அடுத்த தலைமுறையினருக்கும் வரலாம். ஆதலால் குடும்பத்தில் யாரேனும் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் மற்றவர்கள் 35 வயதுக்கு பிறகு இரண்டு வருடங் களுக்கு ஒருமுறை ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்ய வேண்டியது அவசியம்.

ஒற்றை தலைவலியும் அடுத்த தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தாய்க்கு ஒற்றை தலைவலி இருந்தால் அவரது குழந்தைகளுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை ஒற்றை தலைவலி பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிறைய பெண்கள் ஒற்றை தலைவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். கர்ப்ப காலங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒற்றை தலை வலிக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பொதுவாக பெண்களுக்கு மாத விடாய் 51 வயதுக்கு பிறகுதான் முடிவுக்கு வரும். தாயாருக்கு மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே நின்றிருந்தால் மகளுக்கும் அதே காலகட்டத்தில் மாதவிடாய் நிற்க வாய்ப்புள்ளது. 20 பெண்களில் ஒரு பெண்ணுக்கு 46 வயதிலோ அதற்கு முன்போ மாதவிடாய் சுழற்சி நின்றுவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரபணு தாக்கம் கொண்டவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தை நீட்டிக்க முடியாது என்றாலும், மாதவிடாய் நிற்கும் போது உருவாகும் பாதிப்பு நேராமல் தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

இதய செயலிழப்பு, மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த நோய்கள் அடுத்த தலைமுறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தாயார் இதய நோய் பாதிப்புக்கு ஆளானால் மகளுக்கும் அத்தகைய நோய் ஏற்பட 20 சதவீதம் வாய்ப்புள்ளது. அதுபோல் இதயநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தினருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். இதய நோய்களும், பக்கவாதமும் ஏற்படுவதற்கு தமனிகளில் அடைப்பு, தமனிகள் சுருங்குவது போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

ஞாபக மறதி, மன நல பாதிப்பு போன்றவையும் மரபணுக்கள் மூலம் அடுத்த தலைமுறையை சென்றடையக்கூடிய நோய் பாதிப்புகளாகும். தாயாருக்கு இத்தகைய நோய் பாதிப்பு உண்டானால் பிள்ளைகளுக்கும் 30 முதல் 50 சதவீதம் வரை அத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அவர்கள் சத்துணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.