சிறப்புக் கட்டுரைகள்

ஆரோக்கியத்திற்கு தேவை ‘மகிழ்ச்சி’ + "||" + Health requires 'happiness'

ஆரோக்கியத்திற்கு தேவை ‘மகிழ்ச்சி’

ஆரோக்கியத்திற்கு தேவை ‘மகிழ்ச்சி’
குளிர்காலத்தில் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். அதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். குளிர்காலத்தில் உடல் நலனை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
சமையலுக்கு பயன்படுத்தும் பாரம்பரிய மசாலா பொருட்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. கருப்பு மிளகு, இஞ்சி, சோம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள் போன்றவை சளி, இருமல், காய்ச்சலுக்கு நிவாரணம் தரும். துளசி டீ தயாரித்தும் பருகலாம்.

குளிர்காலத்தில் உடல் இயக்கம் தொய்வின்றி தொடர்ந்தால் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். அது சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறுப்புகளுக்கு சீராக கடத்திக்கொண்டிருக்கும். நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் மட்டும் பயனில்லை. அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடல் உறுப்புகளுக்கு சீராக சென்றடைய உடல் இயக்கமும் அவசியம். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணைபுரியும்.

யோகாசனம் செய்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கைகொடுக்கும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும். உடல் முழுவதும் ரத்த வெள்ளை அணுக்களை வலுப்படுத்தவும் 
கைகொடுக்கும்.

நன்றாக தூங்குவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். அதிலும் குளிர்காலத்தில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாவார்கள். ஆகவே போதுமான நேரம் தூங்குவது அவசியமானதாகும்.

சோகம், கோபம், மனக்கசப்பு, பொறாமை, துக்கம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். மன அழுத்தமும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களுக்கு கார்டிசால் ஹார்மோனின் சுரப்பு அதிகமாகி உடல் ஆரோக்கியத்தை பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். அதே சமயம் மகிழ்ச்சி, அன்பு போன்ற நேர்மறையான உணர்ச்சிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

வைட்டமின்கள் பி, சி, ஈ, டி, செலினியம், இரும்பு, துத்தநாகம், தாதுக்கள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். பூசணி, கேரட், எலுமிச்சை, வெங்காயம், நெல்லிக்காய், ப்ராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பூண்டு, தேன், தேங்காய் எண்ணெய், நெய், ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி பழம், மாதுளை, பெர்ரி பழங்கள், கிரீன் டீ போன்றவையும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றன.