ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆப்ஸ்' வடிவமைப்பாளர் 13 வயது சிறுமி!


ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆப்ஸ் வடிவமைப்பாளர் 13 வயது சிறுமி!
x
தினத்தந்தி 12 Jun 2021 3:27 PM GMT (Updated: 12 Jun 2021 3:27 PM GMT)

புத்தகத்தை சுமந்து கொண்டு பள்ளி செல்லும் வயது சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்புவதற்கு சற்றுக் கடினம்தான் என்றாலும் உண்மை அதுதான். அன்விதா விஜய், 13 வயதே ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்தச் சிறுமி, ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளராக ஆகியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர் கருத்தரங்கான டபிள்யூ.டபிள்யூ.டி.சி 2020 (WWDC 2020), சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. அதில் மிக வித்தியாசமான நிகழ்வு என்னவென்றால் சிறு வயதான அன்விதா விஜய் கலந்து கொண்டு சபையையே வியப்பில் ஆழ்த்தியதுதான். இந்த வருட தொழில் கருத்தரங்கில் இது ஒரு மிகப்பெரிய கருத்தரங்கு. மொத்தம் 350 பேர் கலந்துகொண்ட இதில், 120 பேர் மாணவர்கள். அதிலும் 18 வயது நிரம்பியவர்கள். இவர்களில் மிகவும் சிறுவயதில் செயலி வடிவமைப்பாளராகி சாதனை படைத்துள்ளார் அன்விதா விஜய். ஐ-போன் மற்றும் ஐ-பேடிற்கான செயலி வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அன்விதா செயலி வடிவமைப்பாளராவதற்காக தனியாக எந்த ஒரு கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திற்கோ செல்லவில்லை. யூ-டியூப் மற்றும் இன்டெர்நெட்டிலேயே இதனை கற்றறிந்துள்ளார்.

இது பற்றி அன்விதா விஜயிடம் கேட்ட போது,‘‘ஒரு சிறிய பொறி மனதில் தட்டியதால் இது போன்று செயலி வடிவமைப்பில் எனக்கு ஆர்வம் வந்தது. இதற்காக நான் கடினமாக உழைத்தேன். முதலில் சற்று சிரமமாக இருந்தது. ஆனால் அது, சவாலை சந்திக்கிற ஒரு மகிழ்வை எனக்கு அளித்தது. செயலி கட்டமைப்பில் பல உள்கூறுகள் உள்ளன. அதில் ப்ரோட்டோடைப்பிங், வடிவம், வயர் ப்ரேமிங், பயனர் இன்டர்பேஸ் வடிவம், கோடிங் மற்றும் டெஸ்டிங் ஆகியவை அடங்கும்.

எவ்வாறு புரோகிராமிங் செய்வது என்பதை முற்றிலும் இன்டர்நெட்டிலேயே கற்றுக்கொண்டேன். என்னுடைய இளைய சகோதரியின் செய்கையால் ஈர்க்கப்பட்டு நிறைய சிந்தனைகள் கிடைத்தன. இதனால் குழந்தைகளுக்கான பிரத்யேக செயலிகள் வடிவமைக்கப்பட்டன. இதில் 100 வகையான ஒலிகள் மற்றும் ஒளிரும் அட்டைகள் உள்ளன. இவை பல வகையான விலங்குகளின் பெயர் மற்றும் அவற்றின் ஒலிகளை கொண்டு அறிய முடியும்’’ என்றார்.

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் நிறைய செயலிகளை இவர் வடிவமைத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் செயலி வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி, சின்னஞ்சிறு வயதில் இவருக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற கருத்தரங்கை காட்டிலும் இம்முறை கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் 22 சதவிகிதம் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story