‘அப்பாவி கலைஞர்' கபி லாமே


‘அப்பாவி கலைஞர் கபி லாமே
x
தினத்தந்தி 12 Jun 2021 3:37 PM GMT (Updated: 12 Jun 2021 3:37 PM GMT)

அந்த ஒரே ஒரு செய்கை, ஒட்டுமொத்த சமூக ஊடகங்களையும், ‘கபி லாமே' பக்கம் திருப்பி இருக்கிறது. கருப்பு நிறம், முக பாவனையிலே கிண்டல் செய்யும் சுபாவம், எதையும் எளிதாக யோசிக்கும் ஆற்றல் ஆகியவற்றால் நெட்டிசன்களின் புது நண்பராகி இருக்கிறார், கபி லாமே.

ஒரு திரைப்படத்தில் ‘‘இந்த தாயத்தை கட்டிக்கிட்ட நடுராத்திரி கூட சுடுகாட்டுக்கு போகலாம்’’ என்ற வசனத்திற்கு ‘‘நாங்க ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகப்போறோம்’’ என்று வடிவேலு ‘கவுண்டர்' கொடுப்பார். அந்த வேலையைதான், ‘டிக்-டாக்', ‘பேஸ்புக்', ‘யூ-டியூப்' தளங்களில், நம்ம கபி லாமே செய்து வருகிறார்.

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில், நமக்கு தெரிந்த-தெரியாத விஷயத்தை சுலபமாக செய்ய சொல்லி தருவதாக கூறி நிறைய வீடியோக்களை பதிவிட்டிருப்பார்கள். அதில் சில வீடியோக்கள் உண்மையிலேயே உபயோகமானதாக இருக்கும். ஆனால் ஒருசில வீடியோக்கள் நம்முடைய பொறுமையை சோதிப்பது போல எரிச்சலை உண்டாக்கும்.

உதாரணத்திற்கு, தோலை உரித்து எளிமையாக சாப்பிட வேண்டிய வாழைப்பழத்தை, தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொன்றாக தோலை நீக்கி சாப்பிடுங்கள் என யாராவது நமக்கு உபதேசம் செய்தால், எரிச்சலாக இருக்கும் தானே...? அத்தகைய வீடியோக்களுக்கு பதிலடி கொடுப்பதுதான், கபி லாமேயின் வேலை.

அப்பாவித்தனமான முக பாவனையோடு, வாழைப்பழ தோலை உரித்து காட்டி அந்த வீடியோ பதிவிட்டவருக்கு பதில் வீடியோ போடும் சின்ன வேலையைதான் கபி லாமே செய்கிறார். அந்த சின்ன வேலைக்குதான், நெட்டிசன்களின் அன்பை பெற்று, இன்று மில்லியன் கணக்கில் ரசிகர்களையும், கோடிக்கணக்கில் சம்பளத்தையும் பெற்றிருக்கிறார்.

ஆம்...! குறுகிய காலத்தில் பல அனாவசிய வீடியோக்களுக்கு பதில் வீடியோ போட்டு, உலகளவில் வைரலாகி இருப்பதுடன், பிரபல அடையாளமும் பெற்றிருக்கிறார். வசனம் இல்லை, நக்கல் நையாண்டி இல்லை இருப்பினும் தன்னுடைய அப்பாவித்தனமான முகபாவனையை வைத்தே உலக பிரபலமாக மாறியிருக்கும் கபி லாமே ஏழ்மையான பின்னணியை கொண்டவர். ஆப்பிரிக்கா இவரது பூர்வீகம்.

பார்ப்பதற்கு பெரிய ஆள் போன்ற தோற்றம் கொண்டிருந்தாலும், 21 வயதாகும் இளைஞர். ஆப்பிரிக்காவில் இருந்து படிப்பிற்காக இத்தாலியில் குடியேறி, இன்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். இத்தாலி நாட்டில்தான், இவருக்குடிக்-டாக், பேஸ்புக் வீடியோக்களை உருவாக்கி, பதிவிடும் எண்ணமும் தோன்றியிருக்கிறது.

எதார்த்தமாக நண்பர்களோடு பேசி சிரித்த விஷயங்களை ஒருவர் வீடியோவாக பதிவு செய்ய, அதை விளையாட்டாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக கொரோனா தாக்குதல் ஆரம்பமான 2020-ம் ஆண்டுதான் கபி லாமே டிக்-டாக், பேஸ்புக் தளங்களில் தோன்ற ஆரம்பித்தார்.

பல வீடியோ தளங்களில் தோன்றினாலும், இவரை உலக பிரபலமாக்கியது ‘டிக்-டாக்' ஆப். ஒருசில வினாடிகளிலேயே தன்னுடைய ஆதங்கத்தை டிக்-டாக் வீடியோவாக பதிவு செய்ய, அது உலகளவில் உலா வரத்தொடங்கியது. அன்று முதல் கபி லாமேயின் செல்வாக்கு மின்னல் வேகத்தில் உயர தொடங்கியது.

ஒரே வருடத்தில், இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 5 மில்லியன் மக்கள் பின் தொடர்கிறார்கள். டிக்-டாக் கணக்கில் 25 மில்லியன் மக்கள் பாலோ செய்கிறார்கள். இன்று பிரபலங்களின் வலைத்தள கணக்குகளை நிர்வகிக்கும், ரிஜியோ அலஸ்சாண்ட்ரா என்பவர், கபி லாமேயின் வலைத்தள கணக்கை நிர்வகிக்கிறார். அதோடு அவரது மதிப்பை உயர்த்தும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார்.

சும்மா இல்லைங்க, ஆப்பிரிக்காவில் இருந்து நிதி உதவி பெற்று இத்தாலியில் படிக்க வந்தவரின் தோராய சொத்து மதிப்பு, 20 லட்சம் டாலர்கள் என்கிறது, ஒரு சர்வே ரிப்போர்ட்.

அவ்வளவும் உழைப்பு. கொஞ்சம் நஞ்சமல்ல... யூ-டியூப், பேஸ்புக் ரீல், டிக்-டாக்... இப்படி இன்னும் பல தளங்களை அலசி ஆராய்ந்து, கிண்டல் செய்யக்கூடிய வீடியோக்களை தேர்ந்தெடுத்து, அசால்டாக கலாய்த்துவிடுகிறார். ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான கேலி-கிண்டல் வீடியோக்களை, அனைவரும் ரசிக்கும்படி செய்வது, சுலபமான விஷயம் இல்லை. இருப்பினும் சுலபமாக செய்து அசத்தியிருக்கிறார். அதுவே அவரது ஸ்டைல்.

‘‘மூட்டை பூச்சிகளை கொல்லும் நவீன இயந்திரம்’’ என விற்க முற்படும் போதெல்லாம், ‘‘காலங்காலமா, மூட்டை பூச்சியை ‘டப்'னு அடிச்சி, டொப்பு போடுறது தானே வழக்கம்’’ என ஏழரையை கூட்டுவது போல, பல வீடியோக்களுக்கு, தன்னுடைய முகபாவனையால் குடைச்சல் கொடுத்து வருகிறார், நம்ம கபி லாமே.

இதுவரை இவர் செய்த சேட்டைகளை எல்லாம் பார்க்காதவர்கள், ‘khaby lame’ என கூகுளில் தேடிப் பார்த்து, சேட்டையை ரசிக்கலாம். கொரோனா காலத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கலாம்.

ஆப்பிரிக்க பிரபலமான கபி லாமேவுக்கு, இப்போது பணம், புகழ், மதிப்பு, ஏன்..? காதலியும் கிடைத்தாகிவிட்டது. தொழில்நுட்பங்களை எப்படி கையாள்வது, எப்படி நம்மை அப்டேட் செய்து கொள்வது என்பதற்கு, கபி லாமே சிறந்த உதாரணம்.

Next Story