வரலாறு; புத்தகம் உருவானது எப்படி?


வரலாறு; புத்தகம் உருவானது எப்படி?
x
தினத்தந்தி 17 Jun 2021 5:36 PM GMT (Updated: 17 Jun 2021 5:36 PM GMT)

இப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் அழகழகான வடிவமைப்புகளைச் செய்து புத்தகங்களைச் சீக்கிரமாக அச்சிட்டுவிடுகிறார்கள். இந்த வசதிகள் எல்லாம் வராத காலத்தில் புத்தகங்களை எப்படி அச்சடித்தார்கள்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புத்தகங்களைக் கையால்தான் எழுதி வந்தார்கள். அப்போது காகிதம் கிடையாது. ஓலைச் சுவடி போன்ற சில பொருட்களின் மீது எழுதினார்கள். கையால் எழுதப்படும் புத்தகத்தை இன்னொரு பிரதி எடுக்க வேண்டுமானால், அந்தப் புத்தகத்தைப் பார்த்துத் திரும்பவும் எழுதுவார்கள். அதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகிவிடும். ஆனால், அச்சடிக்கும் முறை வந்த பிறகு இந்தச் சிக்கல் இல்லாமல் போனது.

அச்சடிக்கும் முறை சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 868-ம் ஆண்டில் இந்த முறையைக் கண்டுபிடித்தார்கள். மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாகச் செதுக்கி, எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மையைத் தடவி அவற்றைத் தாளைக் கொண்டு அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும். இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகளை அச்சிட முடிந்தது. ஆனால், ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு பலகை தேவைப்பட்டது. மேலும் அதிக நேரமும் ஆனது. 1041-ம் ஆண்டில் பீஷெங் என்பவர் அதை இன்னும் எளிதாக்கினார்.

இந்த முறையை அடிப்படையாக வைத்து ஜெர்மனியைச் சேர்ந்த யோகான்னஸ் கூட்டன்பர்க் 1436-ம் ஆண்டில் அச்சு இயந்திரம் ஒன்றை உருவாக்கினார். இது நகரும்படியான அச்சாக இருந்தது. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சை உருவாக்கி அவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார் இவர். இது நவீன அச்சடிக்கும் இயந்திரமாக இருந்தது. தொடக்கத்தில் மரப்பலகையை இதற்குப் பயன்படுத்தினார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கூட்டன்பர்க் கண்டுபிடித்தார்.

இப்போது உலகெங்கும் பல கோடிப் புத்தகங்களைப் புதுமையான தொழில்நுட்பங்களோடு அச்சடிப்பதற்கு இந்தக் கண்டுபிடிப்புகள்தான் மூலகாரணம்.

Next Story