‘2 பவுன்' தங்கத்தைவிட... மனித உயிர்களுக்கு மதிப்பு அதிகம்..!


‘2 பவுன் தங்கத்தைவிட... மனித உயிர்களுக்கு மதிப்பு அதிகம்..!
x
தினத்தந்தி 19 Jun 2021 2:30 PM GMT (Updated: 19 Jun 2021 2:30 PM GMT)

2 பவுன் தங்க செயினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்பக்கம் ஈர்த்தவர்.

‘‘கடந்த ஆண்டு மார்ச் மாதம், நிமோனியா காய்ச்சலால் என் அம்மா இறந்துபோனார். அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும், எங்களால் காப்பாற்ற முடியவில்லை. ஒரு வருடமாகியும், அவரது இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொரோனா 2-ம் அலையில், என்னை போன்று வேறு யாரும், நெருக்கமான உறவுகளை இழந்து வேதனை படக்கூடாது என்ற எண்ணத்தில்தான், என்னிடமிருந்த 2 பவுன் தங்க செயினை கொரோனா நிவாரண நிதிக்காக, முதல்வரிடம் வழங்கினேன். ஆனால் அந்த சம்பவம் இவ்வளவு வைரலாகும் என நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை’’ என்ற முதல் வரியிலேயே, தனி கவனம் ஈர்க்கிறார், சவுமியா. சேலம் மாவட்டம், பொட்டனேரி ஊரை சேர்ந்தவரான இவர், கடந்த வாரத்தின் வைரல் பிரபலம். தன்னுடைய 2 பவுன் தங்க செயினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தன்பக்கம் ஈர்த்தவர். அவரிடம் சிறு பேட்டி.

* உங்களை பற்றி சுருக்கமாக கூறுங்கள்?

வீட்டில் கடைசி பெண் பிள்ளை. எனக்கு 2 சகோதரிகள் உண்டு. அப்பா ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் முடித்துவிட்டு, அரசு தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்.

* உங்களுடைய பின்புலம் என்ன?

நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். சொந்த வீடு இன்றி, வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நகை சேமிப்போ, பண சேமிப்போ கிடையாது. அப்பாவின் சம்பளம் படிப்பிற்கும், கல்யாண செலவிற்கும், வீட்டு செலவிற்குமே சரியாக இருந்தது. சகோதரிகளுக்கு திருமணம் முடித்து வைத்த பிறகு, நான் தந்தையோடு இருக்கிறேன். இது நாள் வரை எனக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்த தந்தைக்கு சொந்த வீடு கட்டிக்கொடுப்பதே என் ஆசையாக இருக்கிறது. அதற்காகவே, அரசு வேலையில் சேர, தீவிரமாக படித்து தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

* ஏழ்மை பின்னணியை கொண்டிருந்தும், 2 பவுன் தங்க சங்கிலியை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியது எப்படி?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களின் கோரிக்கைகளை அன்போடு பெற்றுக்கொண்டு, உதவி செய்கிறார். இந்நிலையில், மேட்டூர் அணை நீர் திறப்பிற்காக, எங்கள் ஊர் வழியே பயணிக்க இருந்த முதல்வரிடம், நல்ல வேலை கேட்டு கோரிக்கை மனு கொடுக்க ஆசைப்பட்டேன். நல்ல வேலை கிடைத்துவிட்டால், குடும்ப சூழலை சமாளித்துவிடலாம் என நினைத்திருந்தேன். அதோடு கொரோனா நிவாரண நிதிக்கு, எங்களால் முடிந்த உதவியை செய்ய திட்டமிட்டேன். இந்த விஷயத்தை என் தந்தையிடம் கூறியபோது, 3 வருடங்களுக்கு முன்பு என் திருமணத்திற்காக வாங்கி சேமிக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க சங்கிலியை எடுத்து நீட்டினார். அதை நிவாரண நிதியாக வழங்க சொல்லி, என்னை ஆச்சரியப்படுத்தினார்.

* முதல்வரை நேரடியாக சந்திப்போம், மனு கொடுப்போம், வைரல் ஆவோம் என நினைத்து பார்த்தீர்களா?

இல்லை. முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு மற்றும் 2 பவுன் தங்க சங்கிலியை கொடுக்க ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் அது நடக்குமா..? என்பது சந்தேகமாகவே இருந்தது. சம்பவத்தன்று, ஊர் பேருந்து நிலையம் அருகே நின்றுக்கொண்டு, முதல் வரின் வருகையை எதிர்நோக்கியிருந்தேன். சாலையோரத்தில் மனுவோடு நின்றுக்கொண்டிருந்த என்னிடம் அன்போடு மனுவை பெற்றுக்கொண்டார். முதல்வரை காண மக்கள் முண்டியடித்ததால், என்னிடம் அதிகம் பேசாமல் கிளம்பிவிட்டார். இருப்பினும் இரவு டுவிட்டரில் என்னை பற்றியும், தங்க சங் கிலியை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியது பற்றியும் பகிர்ந்து, என்னை மனம் நெகிழ வைத்துவிட்டார். அது வைரலாகி விட்டது.

* எதிர்பார்த்தது என்ன? கிடைத்திருப்பது என்ன?

நல்ல வேலை மட்டுமே எதிர்பார்த்தேன். அதுவும் முதல்வரின் ஏற்பாட்டில், நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவன வேலை கிடைத்திருக்கிறது. மற்றபடி தங்க சங்கிலியை வழங்கி, விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆசை எனக்கு இல்லை. ஏனெனில் கொரோனா நோயினால், தமிழக மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துவிடக்கூடாது என்ற ஆசையில்தான், தங்க சங்கிலியை நிவாரண நிதிக்கு வழங்கினோம். மற்றபடி, அதில் எந்தவிதமான எதிர்பார்ப்பும், விளம்பர நோக்கமும் இல்லை. நான் எதிர்பார்க்கவும் இல்லை.

* உங்களுக்கென வேறு எதுவும் நகை சேமிப்பு இருக்கிறதா?

இல்லை. இனிதான் வாங்கி அணிய வேண்டும். திருமணத்திற்காக சேமிக்க வேண்டும்.

* இப்போது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இருப்பினும் அரசு தேர்வுக்கு தயாராவீர்களா?

நிச்சயமாக தயாராகுவேன். அதற்காகவே படித்துக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில், நான் அரசு தேர்வில் வெற்றிப்பெற்று, அரசு ஊழியராவது நிச்சயம்.

* உங்களுடைய ஆசை என்ன?

சொந்த நிலம் வாங்கி, சொந்த வீடு கட்டி வாழ்வது என் அம்மாவின் ஆசை. அதை நிறைவேற்ற ஆவலாக இருக்கிறேன்.

Next Story