பட்டாம்பூச்சியும், நானும்..!


பட்டாம்பூச்சியும், நானும்..!
x
தினத்தந்தி 19 Jun 2021 3:03 PM GMT (Updated: 19 Jun 2021 3:03 PM GMT)

மோகன் பிரசாந்த் கடந்த 10 வருடங்களாகவே பட்டாம்பூச்சிகளை தேடி இந்தியா முழுக்க உலா வருகிறார்.

பட்டாம்பூச்சிகளை யாருக்குதான் பிடிக்காது...? எல்லோரும் பட்டாம்பூச்சிகளை பார்க்கிறோம், ரசிக்கிறோம், கடந்து செல்கிறோம். ஆனால் மோகன் பிரசாந்த், நம்மை போல பட்டாம்பூச்சிகளை எளிதாக கடந்துவிடுவதில்லை. கண்ணில் படும் பட்டாம்பூச்சி என்ன வகையை சேர்ந்தது?, அதன் சிறப்பு என்ன?, பெயர் என்ன? போன்ற விவரங்களை சேகரிக்கிறார், அதோடு அந்த பட்டாம்பூச்சியை முடிந்தவரை விரட்டி சென்று பல கோணங்களில் புகைப்படம் எடுக்கிறார். மோகன் பிரசாந்த் கடந்த 10 வருடங்களாகவே பட்டாம்பூச்சிகளை தேடி இந்தியா முழுக்க உலா வருகிறார். பட்டாம்பூச்சிகளுக்கும், அவருக்குமான தொடர்பை விவரிக்கிறார்.

‘‘ஆக்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் ஒரு முயற்சிதான், ‘ஆக்ட்ஸ் பார் பட்டர்பிளை'. பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளர்களை, ஆர்வலர்களை ஒரு நேர்கோட்டில் இணைக்கும் முயற்சியாக, தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட முயற்சி இது. அதில் நானும் ஒருவனாய், கடந்த 10 ஆண்டுகளாக பட்டாம்பூச்சிகளோடு, சிறகடித்து பறக்கிறேன்.

ஊர், மாவட்டம், மாநிலம், தேசியம், கண்டம்.... என ஒவ்வொரு நிலப்பரப்பில் உலாவிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளை வகைப்படுத்தியும், அதன் இனங்களை பட்டியலிட்டும், புதுப்புது பட்டாம்பூச்சி இனங்களுக்கு பெயர் சூட்டுவதும்... என எங்களுடைய பணி வண்ணமயமாக நடக்கிறது. தேனீக்களைவிட, பட்டாம்பூச்சிகள்தான் இயற்கையாக நடக்கும் மகரந்த சேர்க்கைக்கு அதிகளவில் வழிவகுக்கின்றன. இதை பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளிடம் அறிவியல் பூர்வமாய் கொண்டு சேர்க்கும் பணிகளையும், ‘ஆக்ட்ஸ் பார் பட்டர்பிளை’ அமைப்பின் மூலமாக செய்கிறோம்’’ என்றார், மோகன் பிரசாந்த்.

வண்டலூர், திருச்சி , நீலகிரி... இப்படி பல இடங்களில் உருவாகியிருக்கும், உருவாகி வரும் பட்டாம்பூச்சி பூங்காக்களில் இவரது பங்களிப்பும் உண்டு.

‘‘தமிழ்நாட்டில் 320-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. இதை ஆராய்ந்து, புகைப்படத்தோடு தொகுத்து, ‘பட்டர்பிளைஸ் ஆப் தமிழ்நாடு' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டோம். இதுபோக தமிழ்நாட்டிற்குள் பட்டாம்பூச்சி வலசை பாதை களையும், இடப்பெயர்ச்சிகளை கண்காணித்தல், அதன் வாழ்க்கை முறையை ஆராய்வது, ஆவணப்படுத்துவது போன்ற பல வேலைகளையும் செய்து வருகிறோம். தேசிய அளவில் நடக்கும் கருத் தரங்குகளில் திரட்டிய தகவல்களை பரிமாறிக் கொள்வோம்’’ என்றவர், தமிழ்நாடு-கேரள-கர்நாடக வனப்பகுதிகள், வடமாநில வனப்பகுதிகள் என நிறைய இடங்களுக்கு பட்டாம்பூச்சிகளை தேடி சென்றிருக்கிறார். இதுவரை இந்தியாவில் காணப்படும் 1,330 வகைகளில் 900-க்கும் மேல் ஆவணப்படுத்தியுள்ளார்.

போடிநாயக்கனூரை பூர்வீகமாக கொண்ட மோகன் இப்போது கோவையில் செட்டிலாகிவிட்டார். விலங்கியல்-சமூக சேவை படிப்புகளை முடித்து முன்னாளில் பேராசிரியராக பணியாற்றி, இந்நாளில் பட்டாம்பூச்சி சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார். அதுபோக, பள்ளி-கல்லூரிகளுக்கு சென்றும், இணைய வழியாகவும் பட்டாம்பூச்சி சம்பந்தமான விழிப்புணர்வுகளை, அறிவியல் பூர்வமாய் நிகழ்த்துகிறார்.

* தமிழ்நாட்டில் அதிக வகையான பட்டாம்பூச்சிகளை எங்கு பார்க்கலாம்?

சிறுவாணி அணை, வாழையாறு, கல்லாறு... போன்ற பகுதிகளை, பட்டர்பிளை ஹாட் ஸ்பாட் என்பார்கள். அதாவது இங்கெல்லாம் 100-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி வகைகளை பார்க்கலாம். அதேசமயம் களக்காடு, ஆனைமலை, மேட்டுப்பாளையம், நீலகிரி, கன்னியாகுமரி பகுதிகளில் பட்டாம்பூச்சிகளை கூட்டங்கூட்டமாக பார்க்கமுடியும்.

* பட்டாம்பூச்சி பயணத்தில் மறக்கமுடியாத அனுபவம்?

அரிய வகை பட்டாம்பூச்சியான ‘பூட்டான் குளோரி’, தண்ணீரில் விழுந்து தத்தளித்தது. அதை பத்திரமாக மீட்டு, மீண்டும் பறக்கவிட்டது, மறக்கமுடியாத அனுபவம்.

* பட்டாம்பூச்சி பயணத்தின் மைல் கல் எது?

அருணாச்சல பிரதேசத்தில் புதுவகையான பட்டாம்பூச்சியை கண்டுபிடித்திருக்கிறோம். அதுவே எங்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.

* தமிழ்நாட்டு பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி காலம் எது?

மழைக்கு முந்தைய காலத்திலும், மழைக்கு பிந்தைய காலத்திலும் பட்டாம்பூச்சிகள் லட்சக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இடம்பெயரும்.

* பட்டாம்பூச்சிகளிடம் இருந்து கற்றுக்கொண்டது?

பட்டாம்பூச்சிகளை ரசிக்க பொறுமை, நிதானம் தேவைப்படும். அவற்றிடம் இருந்து கற்றுக்கொண்டதும், அதுவே.

Next Story