வேலைவாய்ப்பு செய்திகள்; முதல் வணிக விமான பைலட்


வேலைவாய்ப்பு செய்திகள்; முதல் வணிக விமான பைலட்
x
தினத்தந்தி 19 Jun 2021 3:54 PM GMT (Updated: 19 Jun 2021 3:54 PM GMT)

கேரளாவின் முதல் வணிக விமான பைலட் என்ற பெருமையை 23 வயது ஜெனி ஜெரோம் பெற்றுள்ளார். ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கம் நிறைந்த விமான போக்குவரத்து துறையில், ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று கூறப்பட்ட பணிகளை பெண்களும் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.

பெண்களின் சாதனைப் பட்டியலில், மாநிலத்திலேயே முதல் வணிக விமான பைலட்டாகி தற்போது கேரளாவைச் சேர்ந்த ஜெனி ஜெரோமும் இணைந்துள்ளார். ஷார்ஜாவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஏர் அரேபியா ஜி9 449 விமானத்தில் இணை பைலட்டாக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். இது குறித்து ஜெனி ஜெரோம், ‘‘பறப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கேரளாவின் கொச்சுத்துரா தான் நான் பிறந்த கிராமம். கடலோர கிராமமான இங்கு என் கனவு சாத்தியப்படவில்லை. அதனால் அஜ்மானுக்கு வாழ்விடத்தை மாற்றினேன். இன்றைக்கு பைலட் ஆகும் கனவு நிறைவேறியிருக்கிறது’’ என்றார்.

ஜெனி ஜெரோமை திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். ‘‘சாதாரண மீனவர் கிராமத்தில் பிறந்து விமானம் ஓட்ட வேண்டும் என்ற கனவை இன்றைக்கு நிறைவேற்றியிருக்கும் ஜெனி பாராட்டுக்குரியவர்’’ என்று சசிதரூர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ஜெனி ஜெரோமின் உறவினர் ஷெரீன், ‘‘விமானியாக வேண்டும் என்று சிறு வயதில் கண்ட கனவை நிஜமாக்கிக் காட்டி இருக்கிறாள் ஜெனி. அவரது தந்தைக்கும் விமானத்தில் பயணம் செய்வது பிடிக்கும். கனவு பெரிதாக இருந்தாலும் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஜெனி’’ என்றார்.

12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடெமி மற்றும் கடற்படை அகாடெமி தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடெமியில் 370 பணி இடங்களும், கடற்படை அகாடெமியில் 30 பணி இடங்களும் என மொத்தம் 400 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-6-2021. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, தேர்வு செய்யப்படும் விதம், விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடலோர காவல்படையில் வேலை
இந்திய கடலோர காவல்படையில் நேவிக் மற்றும் யந்த்ரிக் பதவிகளுக்கு பல்வேறு பணி பிரிவுகளில் 350 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவிகளை பொறுத்து 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, டிப்ளமோ கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-7-2021. விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://joinindiancoastguard.cdac.in/index.html என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

Next Story