இன்று உலக தந்தையர் தினம்: தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து வாழ்த்து கூறுவோம்...


இன்று உலக தந்தையர் தினம்: தந்தையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து வாழ்த்து கூறுவோம்...
x
தினத்தந்தி 20 Jun 2021 3:10 AM GMT (Updated: 20 Jun 2021 3:10 AM GMT)

உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்' என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் 1908-ம் ஆண்டு ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை முதல் தந்தையர் தின கொண்டாட்டம் ஆரம்பமானது என்று கூறப்படுகிறது.

இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை எவரும் மறுக்க முடியாது. குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. ஆம், ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது. தந்தையின் மனதில் கஷ்டங்கள் அனைத்தும் புதைந்துவிடுவதால் அவை வெளியில் தெரிவதில்லை. தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் பல கருத்துகள் கூறப்பட்டு உள்ளன. அகிலத்தை இடுப்பில் வைத்து அன்னை காட்டினால், தனக்கும் மேலே தூக்கி, உலகை காண்பிக்கும் ஒப்பற்ற உறவு தான் தந்தை. அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனை பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை பிள்ளைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முதுமைக்காலத்தில் தந்தையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு உடலும், உள்ளமும் உறவுகளுடன் உரையாட, பாசத்தில் நனைய நினைக்கும்போது அவற்றை அவர்களுக்கு வழங்கி இருக்கிறோமா? தள்ளாத வயதில் அவர்களுக்குரிய அனைத்து கடமைகளையும் செய்கிறோமா? என்ற கேள்வியை நம்முன்னே கேட்டு பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற் பணியாகும். அதுவே அவர்களுக்கு நாம் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். இந்த நன்னாளில் அவர்களுக்கு பரிசுகள் வழங்குவதை விடவும், விருந்து உபசரிப்புகளை செய்வதை விடவும், அனைத்து விஷயங்களுக்கும் அவர்களுடைய ஆலோசனைகளை கேட்பதுடன், அவர்களுடைய வார்த்தைகளுக்கு 
எப்போதும் மதிப்பளித்து அவர்கள் வழி நடப்போம் என்று இன்றைய தினத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். அதேபோல் மறைந்த தந்தையின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அவர்களின் நினைவை போற்றலாம். 

அவர்களுடைய மனப்பூர்வமான ஆசி கிடைத்து வாழ்க்கையில் மென்மேலும் வளர முடியும். குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த தந்தையர்களுக்கும் அன்பு நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்.

Next Story