போராளி கடல் பாதுகாப்பில் அசத்தும் பெண்கள்


போராளி கடல் பாதுகாப்பில் அசத்தும் பெண்கள்
x
தினத்தந்தி 27 Jun 2021 11:04 AM GMT (Updated: 27 Jun 2021 11:04 AM GMT)

நமது பூமியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்திற்கு மேல் கடல் பகுதி சூழப்பட்டுள்ளது. இதனால் கடற்பகுதியை மாசு அடையாமல் பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமைகளில் ஒன்று.

நமது பூமியில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்திற்கு மேல் கடல் பகுதி சூழப்பட்டுள்ளது. இதனால் கடற்பகுதியை மாசு அடையாமல் பார்த்துக் கொள்வது நமது தலையாய கடமைகளில் ஒன்று. அவ்வாறு நாம் செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு நமக்கு பெரியளவில் ஆபத்து நேர்வது மட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் இது பெரிய ஆபத்தாக அமையும். இந்தக் கடற்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காக கனடாவில் ஒரு தனியார் அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் மூன்று பெண்கள் இடம்பெற்று சிறப்பாக கடல் பாதுகாப்பு மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து வருகின்றனர். அவர்கள் யார்? என்ன செய்து வருகின்றனர்? எனபதை விளக்கமாக பார்ப்போம்.

எவா ஹிடால்கோ:

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஹிடால்கோ கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் சேர்ந்து கடல் சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக அண்டார்டிகா பகுதியில் நீல திமிங்கலம் பாதுகாப்புத் திட்டத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் 2020-ம் ஆண்டு அப்பகுதியில் ஒரு புதிய உயிரினம் ஒன்று கண்டறியப்பட்டதிலும் பங்கு வகித்தார்.

இவர் மக்களிடம் கடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு எவ்வாறு நாம் தீங்கு விளைவிக்கிறோம் என்பது தொடர்பாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிளாஸ்டிக் உபயோகித்தல், கட்டுப்பாடு இல்லாமல் மீன் பிடித்தல் மற்றும் தவறான முறையில் மீன் பிடித்தல் ஆகியவற்றால் கடற்பகுதி மாசுபடுகிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

மார் கசாரிகோ:

ஸ்பெயின் மொழியில் இவருடைய பெயருக்கு ‘கடல்’ என்று அர்த்தம் உள்ளது. அதனால் என்னவோ தெரியவில்லை இவரும் கடல் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் குறிப்பாக ஐரோப்பா பகுதியில் கடல் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களில் பங்கேற்று வந்தார். அத்துடன் மேற்கு ஆப்பிரிக்கா பகுதியில் அடிக்கடி நடக்கும் சட்டவிரோத (ஐ.யூ.யூ.) மீன் பிடிப்பிற்கும் இவர் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாக ஆய்வு செய்து அந்த முறையால் ஏற்படும் ஆபத்து தொடர்பாகவும் இவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது செயல்பாடுகள், ஒருசில சட்டவிரோத மீன் பிடிப்புகளை நிறுத்திவிட்டது. ஒருசிலரை கையும் களவுமாக பிடித்து, எச்சரித்து அனுப்புகிறார்.

லாமியா:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லாமியா. 42 வயதாகும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கடல் பாதுகாப்பு சார்ந்த பணிகளை செய்து வருகிறார். இவர் காலபாகோஸ் என்ற பகுதியில் முதலில் கடல் பாதிப்புக்கு எதிராகப் போராடினார். இவர் தன்னுடைய நோக்கத்திற்காக மீன் உண்ணும் பழக்கத்தை அறவே கைவிட்டுள்ளார். இதுகுறித்து, ‘‘நான் மீன் இல்லாமல் உயிர் வாழ்ந்து விடுவேன். ஆனால் கடல், மீன் இல்லாமல் உயிருடன் இருக்காது” எனக் கூறியுள்ளார். மேலும், 50 சதவிகிதம் மீன்கள் மக்களின் உணவு தேவைக்காகதான் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் காரணங்களுக்காக அப்பழக்கத்தை கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த மூன்று பெண்களை போல நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் கடல் பகுதிகள் மாசுபடாமல் இருக்கும் வகையில் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பூமியில் நாமும், நமது சந்ததி களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story