தன்னம்பிக்கையாளர் ஒரு கால் நடன கலைஞரின் துயரங்கள் நிறைந்த வாழ்க்கை


தன்னம்பிக்கையாளர் ஒரு கால் நடன கலைஞரின் துயரங்கள் நிறைந்த வாழ்க்கை
x
தினத்தந்தி 27 Jun 2021 12:49 PM GMT (Updated: 27 Jun 2021 12:49 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களிடம் புதைந்து கிடக்கும் தனித்திறமைகளை கண்டறிந்து, அவற்றை மெருகேற்றி சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களிடம் புதைந்து கிடக்கும் தனித்திறமைகளை கண்டறிந்து, அவற்றை மெருகேற்றி சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் மன காயங்களுக்கு மருந்திட்டுக்கொள்வதோடு வெளி உலக தொடர்பை வலுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனை பெண்மணிகளில் ஒருவர், சுப்ரீத் கவுர் கும்மான். விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தவர், ஒற்றை கால் நடனக்கலைஞராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறார். ‘இவர் ஒற்றைக்காலில் தான் நடனம் ஆடுகிறாரா?’ என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அனைத்து விதமான நடன அசைவு களையும் வெளிப்படுத்தி அசத்துகிறார்.

நடனக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சவால் விடும் வகையில் ஒற்றை காலிலேயே சுழன்று நடன போட்டிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார். 2012-ம் ஆண்டு `சிக்னி சாமேலி' என்ற நடன நிகழ்ச்சியில் அறிமுகமானவர், முதல் போட்டி யிலேயே நீதிபதிகள் உள்பட அனைவரையும் திகைக்க வைத்துவிட்டார். அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றும் ஆச்சரியப்பட வைத்தார். 2014-ம் ஆண்டில் நடந்த ‘இண்டியாஸ் காட் டேலண்ட் ’ எனும் போட்டி சுப்ரீத் கவுரை பிரபலப்படுத்தியது. இளஞ்சிவப்பு நிற மேலாடை, பச்சை நிற பாவாடை அணிந்து அவர் ஆடிய ஆட்டம் அரங்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர், கிரண் கெர், மலாக்கா அரோரா போன்றோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களுடன் இணைந்து நடனமாடும் வீடியோ சமூகவலைத் தளங்களில் பரவியது. ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்தையும் சுப்ரீத் கவுர் பெறுவதற்கும் அவரது நடனம் வித்திட்டது. தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுப்ரீத் கவுர் வைரலாகி இருக்கிறார். சமீபத்தில் போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக திறந்தவெளி மேடையில் அவர் நிகழ்த்திய ஒத்திகையை சமூக வலைத்தளமான முகநூலில் 4 மில்லியன் பேர் பார்வையிட்டிருக்கிறார்கள். ஒத்திகையின் தொடக்கத்தில் ஊன்றுகோல்களின் துணையுடன் நிற்பவர், அவை இரண்டையும் அங்கும் இங்கும் அசைத்தபடி நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார். பின்பு ஊன்றுகோல்களை தூக்கி எறிந்துவிட்டு நடனம் ஆட தொடங்குபவர், தனது பழைய நடன அசைவு களுக்கு சவால் விடும் வகையில் விதவிதமான நடன அசைவுகளால் அதிர வைக்கிறார். அவரது இயல்பான நடன ஸ்டைலை பார்க்கும்போது இரு கால்கள் துணையுடன்தான் ஆடுகிறாரா? என்ற ஆச்சரியம் மேலோங்குகிறது என்று பலரும் சுப்ரீத் கவுரை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள்.

சுப்ரீத் கவுர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர். ‘ஒரே இரவில்’ பெற்ற வெற்றிக்கு பின்னால் பல வருட போராட்டங்கள், அவமானங்கள் அவரது ஆழ் மனதுக்குள் அழியா சுவடு களாக பதிவாகி இருக்கின்றன. அனுபவித்த அத்தனை துயரங்களையும் மன உறுதியால் விரட்டி தலை நிமிர்ந்திருக்கிறார். 2009-ம் ஆண்டு வரை அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் நகர்ந்திருக்கிறது. கல்லூரியில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒரு கால் முழுவதும் சிதைந்து போனது. அதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கு ஒரு காலை அகற்றியாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் ஒரு காலை இழந்திருக்கிறார். அந்த துயர சம்பவத்தை நினைவுகூர்பவர், ‘‘நான் சிறுவயதில் இருந்தே நடனத்தை நேசித்தேன். விபத்து என்னை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு விரும்பிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். நடனமாட வேண்டும் என்ற சிறு வயது கனவை நனவாக்க முடிவு செய்தேன். நடனத்தின் மூலம் தான் எனக்கு வாழ்க்கையில் இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது’’ என்கிறார்.

விபத்துக்கு பிறகு ஒரு வருடம் கழித்து தசை வலிமையை மேம்படுத்துவதற்காக ஜிம்மில் சேர்ந்திருக் கிறார். ‘‘முதலில் ஒரு காலில் நின்று எப்படி உடலை சமநிலைப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை கற்றுக்கொண்டேன். நின்று பழகிய பிறகு நடனத்தின் மீது கவனம் செலுத்தினேன்’’ என்பவர் சண்டிகரில் உள்ள ஒரு அகாடெமியில் நடன பயிற்சியில் சேர்ந்திருக் கிறார். அங்கு நடனத்தில் தன்னை மெருகேற்றிக்கொண்டவர் போட்டிகளில் பங்கேற்று பார்வையாளர்களை புருவம் உயர வைத்துவிட்டார். எனினும் அவரது வாழ்க்கையில் சோதனைகள் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கணவருடன் விவாகரத்து, உடல் பருமன் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். 2019-ம் ஆண்டு உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டினார். தனது உடல் எடை குறைப்பு அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார். சத்தான உணவு, உடற்பயிற்சியின் துணையுடன் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்தும் விட்டார்.

‘‘மன ரீதியான நெருக்கடிகள் காரணமாக உடல் எடை அதிகரித்துவிட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற முடிவு செய்தபோது உடல் எடை 74 கிலோவாக அதிகரித்து இருந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் என் எடை இழப்பு பயணம் கடுமையாக இருந்தது என்று சொல்வதை விட பரபரப்பாக அமைந்தது.

எனது நண்பர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஜாஸ்மின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு உதவினார். ஜிம், நடனம் மற்றும் சரியான உணவை உட்கொண்டதன் மூலம் கிட்டத்தட்ட 20 கிலோ எடை குறைந்தேன். நேர்மறையான எண்ணங்களை பரப்பவும், இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கவும் துணை நின்ற சமூக ஊடகங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ஊனமுற்றோருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் இனி யாரும் ஈடுபடமாட்டார்கள் என்று நம்புகிறேன்’’ என்றும் கூறுகிறார். ‘லெக்லெஸ் பிரேக் டான்சர்’ என்று அறியப்படும் சுப்ரீத் கவுர், தன்னையும், தன் தகுதியையும் நிரூபிக்க விபத்தும், நடனமும்தான் காரணமாக அமைந்தது என்றும் கூறுகிறார்.

Next Story