67 வயதில் பி.எச்டி. பட்டம்


67 வயதில் பி.எச்டி. பட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2021 1:51 PM GMT (Updated: 27 Jun 2021 1:51 PM GMT)

இளமை பருவத்தில் கைவிட்ட கல்வியை முதுமை பருவத்தில் கற்றுத்தேர்ந்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு கல்வியின் மகத்துவத்தை உணர வைத்துக்கொண்டிருக்கிறார்கள், 60 வயதை கடந்த முதியோர்கள்.

இளமை பருவத்தில் கைவிட்ட கல்வியை முதுமை பருவத்தில் கற்றுத்தேர்ந்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு கல்வியின் மகத்துவத்தை உணர வைத்துக்கொண்டிருக்கிறார்கள், 60 வயதை கடந்த முதியோர்கள். அந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார், உஷா லோதயா. 67 வயதாகும் இவர் குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்தவர். உஷாவுக்கு மருத்துவம் படிக்க வேண்டும், அதில் முதுநிலை பட்டம் பெற வேண்டும் என்பது சிறு வயது லட்சியம்.

ஆனால் 20 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார். தனது வாழ்நாளை குடும்பத்திற்காக செலவிட்டவர், முதுமை பருவத்தில் கிடைத்த ஓய்வு காலத்தை படிப்புக்கு செலவிட முடிவெடுத்தார். டாக்டராக வேண்டும் என்ற லட்சிய கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டாலும், முனைவர் பட்டம் பெற்று பெயரோடு டாக்டர் என்ற அடைமொழியை பதிவு செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அதை செயல்படுத்தியும் காட்டிவிட்டார். ‘‘இப்போது என் பெயருக்கு முன்னால் டாக்டர் என்ற வார்த்தையும் இடம் பிடித்திருக்கிறது. நான் இளைஞியாக இருந்தபோது விரும்பிய ஒன்றை அடைவதற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகி விட்டது. அது மருத்துவமாக இல்லாவிட்டாலும் முனைவர் பட்டம் பெற்றுவிட்டேன்’’ என்று மன நிறைவோடு சொல்கிறார்.

உஷா, பி.எச்டி படிப்பை தொடங்கிய சமயத்தில் அவரது கணவர் மரணம் அடைந்திருக்கிறார். பல்வேறு நெருக்கடி களையும் எதிர்கொண்டிருக்கிறார். அத்தனையையும் சமாளித்து மன உறுதியோடு படிப்பை தொடர்ந்து பி.எச்டி படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறார். உஷா முதலில் சமஸ்கிருதத்தில் மூன்றாண்டு பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். அதன் பிறகு இரண்டாண்டு முதுகலை படிப்பை தொடர்ந்தவர், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அகாடெமியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளில் முனைவர் பட்ட படிப்பை முடித்திருக்கிறார்.

உஷாவை போலவே ஏராளமானவர்கள் முதுமை காலத்தில் கல்வியை தொடர்ந்து இளமை கால கனவுகளை நிறை வேற்றிக்கொண்டிருக்கிறார்கள். மாலா தத்தா என்ற 50 வயது பெண்மணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது மகளுடன் சேர்ந்து படித்து பி.எச்டி பட்டத்தை பெற்றார். கேரளாவை சேர்ந்த கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி 4-ம் வகுப்பு தேர்வெழுதி 98 சதவீத மதிப்பெண் பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். கடந்த ஆண்டு, ஒடிசாவைச்சேர்ந்த ஜெய் கிஷோர் பிரதான் என்ற வங்கி ஊழியர் பணி ஓய்வுக்கு பின் 60 வயதில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

Next Story