நன்கொடையாளர் நடமாடும் ரத்த தான மனிதர்


நன்கொடையாளர் நடமாடும் ரத்த தான மனிதர்
x
தினத்தந்தி 4 July 2021 11:24 AM GMT (Updated: 4 July 2021 11:24 AM GMT)

முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாக சொல்கிறார்.

இந்தியாவில் அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் முதன்மையான நபராக விளங்குகிறார், ஷபீர் கான். 58 வயதான இவர், காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர். 41 ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வரும் இவர், இதுவரை 82 லிட்டர் ரத்தத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு எப்போதும் தயாராக இருப்பதாக சொல்கிறார். முதன் முதலில் ரத்த தானம் செய்த தருணத்தை நினைவுகூர்பவர், ‘‘1980-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் காயம் அடைந்தார். அவரது உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியது. அதனால் அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் போக்குவரத்து வசதி எதுவும் இல்லாததால் நடந்தே மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்தேன்’’ என்கிறார்.

முதன் முதலில் ரத்த தானம் செய்தபோது ஷபீர் கான் பதற்றம் அடைந்திருக்கிறார். ஆனால் இப்போது ரத்த தானம் செய்வது அவருக்கு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ‘காஷ்மீரின் ரத்த மனிதர்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். கடந்த மாதம் 20-ந் தேதி 174-வது ‘பைண்ட்’ ரத்தத்தை ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வழங்கினார். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை ரத்த தானம் செய்யும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். காஷ்மீர் மட்டுமின்றி ஒடிசா, புதுடெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா உள்பட நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று ரத்த தானம் செய்திருக்கிறார்.

2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்பில் இருந்து ரத்த தான இயக்கங்களை வழி நடத்தி இருகிறார். ‘யார் வேண்டுமானாலும் கொடுக்கக்கூடிய மிக அருமையான பரிசு ரத்தம்’ என்று ஷபீர் கான் நம்புகிறார். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 2,300 உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ ரத்த தான இயக்க குழுவுக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்த குழு மூலம் ரத்ததானம் செய்வதற்கு பொதுமக்களை ஊக்கப் படுத்துவதோடு போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

“ரத்த தானம் செய்தால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். ரத்தம் என்பது சந்தையில் வாங்கக்கூடிய பொருளல்ல. காஷ்மீர் போன்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். விபத்துக்குள்ளானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ரத்தம் தேவைப்படும் மற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் ரத்தத்தின் தேவை மிக அதிகமாக உள்ளது. எனவே மதம், சாதிக்கு அப்பாற்பட்டு உயிரைக் காப்பாற்றுவதற்கு மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். நான் அல்லாஹ்வுக்காகவும், மனிதகுலத்துக்காகவும் ரத்ததானத்தை நன்கொடையாக செய்கிறேன். இனியும் தொடர்ந்து செய்வேன். எல்லோரும் தாமாக முன் வந்து ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்.

Next Story