சிறப்புக் கட்டுரைகள்

தன்னம்பிக்கை டேங்கர் லாரி ஓட்டும் முதுகலை பட்டதாரி பெண் + "||" + Self-confidence Driving a tanker truck Postgraduate girl

தன்னம்பிக்கை டேங்கர் லாரி ஓட்டும் முதுகலை பட்டதாரி பெண்

தன்னம்பிக்கை டேங்கர் லாரி ஓட்டும் முதுகலை பட்டதாரி பெண்
எர்ணாகுளம் இந்துஸ்தான் பெட்ரோலியம் எல்.பி.ஜி. நிலையத்தில் இருந்து மலப்புரம் திரூர் பெட்ரோல் பங்கிற்கு டேங்கர் லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கண்டாசங்கடவு கிராமத்தைச் சேர்ந்த டெலிஷா, எர்ணாகுளம் இந்துஸ்தான் பெட்ரோலியம் எல்.பி.ஜி. நிலையத்தில் இருந்து மலப்புரம் திரூர் பெட்ரோல் பங்கிற்கு டேங்கர் லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார். இளம் பெண் டேங்கர் லாரி ஓட்டுகிறார் என்பதுடன், அவர் முதுகலை பட்டம் பயில்வதுதான் சுவாரசியமான விஷயம்.

“கடந்த 3 ஆண்டுகளாக டேங்கர் லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு செல்லும் வாகனங்களை அத்தியாவசியம் என்பதால் வாகன ஆய்வாளர்கள் நிறுத்துவதில்லை. ஆனால், சில வாரங்களுக்கு முன்பு நான் லாரி ஓட்டி வருவதைப் பார்த்த வாகன ஆய்வாளர் ஒருவர், அடுத்த சோதனைச் சாவடிக்கு எச்சரித்து, ஒரு பெண் லாரி ஓட்டி வருகிறார் என்று அவர்களை உஷார்படுத்தினார்.

என்னிடம் லைசென்ஸ் இருக்காது என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். எனது லைசென்ஸ் மற்றும் கம்பெனி ஆவணங்களைக் காட்டியதும் அமைதியானார்கள். 3 ஆண்டுகளாக டேங்கர் லாரி ஓட்டியும் இவர்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் சமூக ஊடகங்கள் மூலம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்’’ என்றவர், லாரி ஓட்ட தொடங்கியது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

‘‘வாகனம் ஓட்டுவதை என் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் இரு சக்கர வாகனத்துக்கு லைசென்ஸ் பெற்றேன். அதன்பிறகு 4 சக்கர வாகனம் மற்றும் 6 சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றேன். கனரக வாகனத்தை ஓட்டும் பெண் ஓட்டுநர் வேறு யாராவது கேரளாவில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. சிறு வயதிலிருந்தே வாகனங்களை ஓட்டுவது எனக்குப் பிடிக்கும். என் தந்தையும் லாரி ஓட்டுநர். அவருடன் தொடர்ந்து பயணித்து நானும் டேங்கர் லாரி ஓட்டக் கற்றுக் கொண்டேன். என் தந்தைக்கு ஹெல்பராக ஆரம்பித்து இன்று லாரி ஓட்டுநராகியிருக்கிறேன்’’ என்றார்.

டெலிஷா முதுகலைப் பட்டம் பயின்று வருகிறார். அதோடு வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்திற்காக லாரி ஓட்டுகிறார்.

‘‘ஒரு ‘ட்ரிப்புக்கு’ 300 கி.மீ பயணிப்பேன். அதிகாலை 2.30 மணிக்கு பணியைத் தொடங்குவேன். 150 கி.மீ தொலைவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் எரிபொருள் நிரப்பியதும், எங்கும் நிற்காமல் பிற்பகல் 2.30 மணிக்குத் திரும்பிவிடுவேன். லாரி ஓட்டிக் கொண்டே முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். என் படிப்புக்கு ஓட்டுநர் வேலை தடையாக இல்லை. வேலை பார்த்துக் கொண்டே ஆன்லைன் வகுப்பிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

எரிபொருள் வாகனத்தை ஓட்டுவது மிகவும் கடினம். முதல் 2 அறையில் பெட்ரோலும், மற்ற ஓர் அறையில் டீசலும் நிரப்பப்பட்டிருக்கும். கவனமாக ஓட்டி வரவேண்டும். மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். ஒரு வாகனத்தை முந்திச் செல்லும்போது கவனம் வேண்டும். பின்னால் வந்து ஏதாவது வாகனம் இடித்தாலும் ஆபத்து ஏற்படக்கூடும். எரிபொருள் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை ஓட்டும் முன்பு, காலியான லாரியை ஓட்டிப் பழகினேன். பெண் என்பதால் எனக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்பட்டதில்லை’’ என்றவருக்கு அரசு பேருந்து ஓட்டும் ஆசையும் இருக்கிறது. அதை தன்னுடைய வேலையாகவும் மாற்ற ஆசைப்படுகிறார்.

‘‘வால்வோ பேருந்தை ஓட்ட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்குள் எனக்கு அரசுப் பணி கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். கேரள அரசுப் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தியாவின் முதல் டேங்கர் லாரி ஓட்டுநரான யோகிதா ரகுவன்ஷியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போல நானும் பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்க விரும்புகின்றேன்.

சமூக ஊடகங்களில் எனது செய்தி பரவியதும் என் தந்தையுடன் சேர்ந்து நானும் மகிழ்ச்சியடைந்தேன். நான் டேங்கர் லாரி ஓட்டுவதாகச் சொன்னால் என் நண்பர்கள் கூட நம்பவில்லை. என் ஆசிரியர்கள் வியப்படைந்தனர். இன்றைக்கு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டு வருகிறேன். மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளும் என்னை அழைத்துப் பாராட்டினர். என் அம்மாவுக்கு நான் லாரி ஓட்டுவது பிடிக்கவில்லை என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக அவரும் சமாதானம் அடைந்து வருகிறார்” என்றார்.

வாகனம் ஓட்டுவதை என் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் இரு சக்கர வாகனத்துக்கு லைசென்ஸ் பெற்றேன். அதன்பிறகு 4 சக்கர வாகனம் மற்றும் 6 சக்கர வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றேன்.