பயணமும்... வாந்தி உணர்வும்..


பயணமும்... வாந்தி உணர்வும்..
x
தினத்தந்தி 4 July 2021 2:21 PM GMT (Updated: 4 July 2021 2:21 PM GMT)

பயணத்தின்போது நிறைய பேர் ‘டிராவல் சிக்னஸ்’ எனப்படும் பயண பிணி பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.

கார், பஸ், படகு, விமானம், ரெயிலில் பயணிக்கும்போது இது வழக்கமாக நிகழும். அதற்கு காரணம், உடலின் உணர்ச்சி உறுப்புகள் மூளைக்கு கலவையான செய்திகளை அனுப்பும். இதனால் தலைச்சுற்றல், லேசான தலைவலி, குமட்டல், சோர்வு, வாந்தி போன்ற பாதிப்புகள் நேரும்.

சிலருக்கு பஸ், காரில் ஏறி அமர்ந்ததும் சில நிமிடங்களிலேயே வாந்தி, குமட்டல், தலைசுற்றல், தலைவலி, சோர்வு போன்ற அறிகுறிகள் வெளிப்பட தொடங்கிவிடும். உடல் மற்றும் மனதளவில் பயணத்திற்கு தயாராகாமல் இருக்கும்போது இந்த பிரச்சினை அதிகம் எட்டிப்பார்க்கும். மேடு, பள்ளங்களில் பயணிப்பது, அங்கும், இங்கும் உடல் அசைவது என பயணம் அசவுகரியமாக அமையும்போதும் ‘டிராவல் சிக்னஸ்’ பிரச் சினையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பெரும்பாலானோர் பயணத்தின்போது எலுமிச்சை பழத்தை கையில் வைத்தபடியே அமர்ந்திருப்பார்கள். குமட்டல், வாந்தி போன்ற உணர்வு ஏற்படும்போது சட்டென்று எலுமிச்சை பழத்தை மூக்கில் வைத்து நுகர்வார்கள். அந்த அளவுக்கு பயண பிணியை போக்குவதில் எலுமிச்சை பழத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. பயணத்தின்போது எலுமிச்சை ஜூஸையும் எடுத்து செல்லலாம். குமட்டல், வாந்தி போன்ற உணர்வு எட்டிப்பார்க்கும்போது எலுமிச்சை சாற்றுடன் உப்பு, நீர் கலந்த பானத்தை பருகினால் உடனடியாக அந்த உணர்வு கட்டுப்பட்டு விடும்.

இஞ்சியையும் பயணத்தின்போது உடன் எடுத்துச் செல்லலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி டப்பாவில் அடைத்துவைத்துக்கொள்ள வேண்டும். பயணத்தின்போது இஞ்சி துண்டை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் ‘டிராவல் சிக்னஸ்’ பிரச்சினையை தவிர்த்துவிடலாம். இஞ்சியை போல கிராம்பையும் வாயில் போட்டு மெல்லலாம். ஒரு கைப்பிடி கிராம்பை லேசாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பயணத்தின்போது வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் தலைதூக்கினால் இரண்டு கிராம்பை மென்றுவிடலாம்.

எலுமிச்சை பழத்தை போலவே சிட்ரஸ் பழங்களையும் பயணத்தின்போது கொண்டு செல்லலாம். திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை பயணத்தின்போது உட்கொள்ளலாம். அதில் இருக்கும் புளிப்பு தன்மை பயண பிணி உணர்வை நெருங்க விடாது. புதினா இலைகளையும் மெல்லலாம். அதன் வாசனை மூளை செல்களுக்கு புத்துயிர் அளிக்கும். வாய் சுகாதாரத்தை பேணுவதற்கும் உதவும்.

Next Story