சிறப்புக் கட்டுரைகள்

சொத்துக்களை விற்று, பசுக்களை காப்பாற்றும் ஜெர்மனி பெண் + "||" + Sold the property Will save the cows German woman

சொத்துக்களை விற்று, பசுக்களை காப்பாற்றும் ஜெர்மனி பெண்

சொத்துக்களை விற்று, பசுக்களை காப்பாற்றும் ஜெர்மனி பெண்
உத்தரப்பிரதேசம் மாநிலம் விருந்தாவனத்தில் பசு காப்பகம் நடத்துகிறார்.
கைவிடப்பட்ட 2000 பசுக்களைப் பராமரித்து வருகிறார் 61 வயதான ஜெர்மனி பெண் ப்ரைடெரிக் இரினா ப்ரூனிங். இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் விருந்தாவனத்தில் பசு காப்பகம் நடத்துகிறார். விலங்குகள் உரிமை ஆர்வலரான அவருக்கு, கடந்த 2019-ம் ஆண்டு நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த 1978-ம் ஆண்டு மாணவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த ப்ரைடெரிக் இரினா ப்ரூனிங், தன் வாழ்க்கையைப் பயனுள்ளதாக வாழ, உத்தரப்பிரதேச மாநிலம் ராதாகுந்திலேயே தங்கிவிட்டார்.

இங்கு தங்கிய பிறகு, அவரது குறிக்கோள்கள், மதம் மற்றும் பெயர் எல்லாமே மாறிவிட்டது. தற்போது அவரை சுதேவி என்றே அழைக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ராதா சுரபி பசு காப்பகம் நடத்தும் அவர், பசுக்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் சேவையையும் நடத்துகிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு மதுராவில் காயமடைந்த நிலையில் பசு ஒன்றைக் கண்டார். பதறிப்போன அவர் உடனே அதற்கு சிகிச்சை அளித்தார்.

அப்போதுதான் தமது சொகுசு வாழ்க்கையைத் துறந்துவிட்டு, கைவிடப்பட்ட பசுக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்ற முடிவுக்கு வந்தார். கடந்த 40 ஆண்டு களாக ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட பசுக்களை மீட்டு, தன் காப்பகத்தில் உணவளித்துப் பராமரித்து வருகிறார். சுதேவி தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்…

“பசுக்களைப் பராமரிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள நிறைய புத்தகங்களைப் படித்தேன். அதேசமயம், இந்தி பேசவும் கற்றுக்கொண்டேன். பால் தரும் பசுக்களுக்கு வயதானதும், அதனைப் பராமரிக்க முடியாமல் கைவிடும் போக்கு இந்தியாவில் அதிகம் உள்ளது. நடக்க முடியாத அளவுக்கு சில பசுக்கள் உடல்நிலை குன்றிவிடுகின்றன. ஒருமுறை பசுவின் கன்று ஒன்று விபத்தில் சிக்கி காயத்துடன் சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. அந்தக் கன்றுக் குட்டிக்கு உடனே சிகிச்சை அளித்துக் காப்பாற்றினேன்.

அப்போதுதான் என் வாழ்க்கையின் அவசியத்தை உணர்ந்தேன். அன்றைக்கு ஒரு கன்றுக்குட்டியுடன் ஆரம்பித்த என் காப்பகத்தில் 10 மாடுகள், 100 மாடுகள் என உயர்ந்து இன்றைக்கு கை விடப்பட்ட 2000 பசுக்களைப் பராமரித்து வருகிறேன்.

இதற்காக 3 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். பெர்லினில் உள்ள என் பரம்பரை சொத்துகளை விற்றே செலவுகளைச் செய்து வருகிறேன். என் பெற்றோர் கொடுத்த பணத்தை வைத்து, பசுக்களுக்குக் கொட்டகை அமைத்துள்ளேன்.

60 ஊழியர்களுக்குச் சம்பளம், பசுக்களுக்குத் தீவனம் மற்றும் மருந்து என மாதந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் 35 லட்சம் வரை செலவாகிறது. எனது காப்பகத்தில் தற்போது பார்வையற்ற 600 பசுக்களும், 600-க்கும் மேற்பட்ட கன்றுக் குட்டிகளும் உள்ளன.

காப்பகத்தை நடத்த போதிய நிதி இன்றி சிரமப்படுகிறோம். இந்தச் சூழ்நிலையிலும் யாராவது காயமடைந்த பசுவை அழைத்து வந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். சிகிச்சையின்போது சில பசுக்கள் இறந்துபோயின.

பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் பணம் தேவைப் படுகிறது. மக்களிடமிருந்து நன்கொடை பெறு கிறோம். ஆனால், அரசு எங்களுக்கு அதேபோன்ற உதவியைச் செய்யவில்லை” என்றார்.

ப்ரூனிங், இந்தியாவுக்கு முதல் முறை மாணவர் சுற்றுலா விசாவில் வந்தவர். அவரது விசா நீட்டிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மாணவர் விசாவை வேலை பார்ப்போருக்கான விசாவாக மாற்ற விதிகளில் இடமில்லாததால் நிராகரிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இதனையடுத்து, தான் பெற்ற பத்மஸ்ரீ விருதை அரசிடமே திரும்பத் தரப்போவதாக சுதேவி மிரட்டல் விடுத்தார். அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு, அவரை மீண்டும் விண்ணப்பிக்க வைத்து, விசாவை நீட்டிக்க உதவினார்.