சிறப்புக் கட்டுரைகள்

சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா? + "||" + Does the kitchen need chimneys?

சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா?

சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா?
பழைய கால வீடுகள் எல்லாவற்றிலுமே சமையறைகளில் புகை போக்கிகள் இருப்பதை பார்க்க முடியும். இப்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படும் நவீன புகை போக்கிகளையே ‘சிம்னிகள்’ என்று அழைக்கிறார்கள்.
வெப்பம், புகை, உணவு நாற்றங்கள், நெடிகள் மற்றும் காற்றில் பரவும் கிரீஸ் ஆகியவற்றை சிம்னியின் உள்ளேயிருக்கும் விசிறி மற்றும் வடிகட்டியை (பில்டர்) பயன்படுத்தி பிரித்தெடுப்பதை சிம்னியின் செயல்பாடு என்று சொல்லலாம். சிம்னிகளில் “வால் மெளவுன்டட் சிம்னி” என்பது சமையலறையில் அடுப்பிற்கு மேலே சுவற்றில் பொருத்தப்படும் சிம்னியாகும். “ஐலேண்ட் சிம்னி” என்பது சில வீடுகளில் சமையறையின் மையத்தில் சமையல் மேடையானது அமைக்கப்பட்டு அதன் மேல் அடுப்பானது பொருத்தப்பட்டிருக்கும். அடுப்பிற்கு மேலே தொங்கியபடி அமைக்கப்படும் சிம்னிகளை  “ஐலேண்ட் சிம்னிகள்” என்று அழைக்கிறார்கள். “பில்ட் இன் சிம்னி” என்பது சமையலறை சுவற்றில் செய்யப்பட்டிருக்கும் மரக்கேபினட்டினுள் உள்ளிருக்குமாறு அடுப்பிற்கு மேலே அமைக்கப்படுவதாகும். சில வீடுகளில் இடவசதிக்கேற்ப அடுப்பானது சமையலறைகளின் மூலையில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் அடுப்பிற்கு மேலே மூலைகளில் பொருத்தப்படும் சிம்னிகள் “கார்னர் சிம்னி” என்று அழைக்கப்படுகின்றன.

* சிம்னிகளின் வடிவமைப்பு உபயோகப்படுத்தப்டும் பெருள் மற்றும் வடிகட்டுதல் செயல்முறையை பொறுத்து, சிம்னி வடிகட்டிகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை கேசட் பில்டர், பேபில் பில்டர்(இந்திய உணவுக்கு சிறந்தது), கார்பன் பில்டர்களாகும்.

* ஆட்டோ கிளீன் சிம்னி: பெயருக்கு தகுந்தாற்போல் அதன் உடல் பாகங்களை சுத்தமாக பராமரிக்கும் திறன் கொண்டவை இவை. இதனுள்ளே இருக்கும் ஒரு கிண்ணம் போன்ற அமைப்பில் இந்த சிம்னிகள் சமைக்கும் போது காற்றிலிருக்கும் எண்ணெய் துகள்களை சேகரிக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் எண்ணெய் கிண்ணத்தை மாதமொரு முறை தனியே கழற்றி சுத்தப்படுத்துவதால் சிம்னியை சுத்தம் செய்வது மிக எளிதான வேலையாகி விடுகின்றது. இவ்வாறு செய்வதால் சிம்னியின் உறிஞ்சும் சக்தி மேம்பட்டு புகைபோக்கி நீண்ட காலங்கள் உழைக்கின்றது.

* சமையலறை சிம்னிகளின் வடிவமைப்பானது கன்வெக்ஸனல் மற்றும் கன்டெம்ப்ரரி என அதன் தோற்றத்தை பொறுத்து இரண்டு வகைகளாக உள்ளன.

சிம்னிகளை பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

* சமையலறை டைல்ஸ்களை பாதுகாப்பதில் சிம்னிகள் பெருமளவில் உதவுகின்றன. நம்முடைய சமையலில் எண்ணெயானது அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றது. இந்த எண்ணெயானது தரையில் தெறித்து ஏற்படும் அழுக்கு, பிசுபிசுப்பு மற்றும் சமையலறை சுவற்றில் ஏற்படும் கறைகள், சமையலறை கேபினட்டுகளை காப்பாற்றுவதில் சிம்னிகள் பெரும்பங்காற்றுகின்றன.

* சிம்னிகள் பொருத்தாத சமையலறைகளின் சுவற்றின் பெயிண்டானது சமைக்கும்போது ஏற்படும் புகை மற்றும் எண்ணெய் துகள்களால் நிறம் மாறி அழுக்காகவும், பிசுபிசுப்பாகவும் இருப்பதை பார்க்க  முடியும். மேலும், மாடுலர் கிச்சன், கேபினட்டுகளை அதிக செலவு செய்து அமைத்துவிட்டு அவற்றை பிசுபிசுப்பாகவும், அழுக்காகவும் வைத்திருப்பது சரியா? சிம்னிகளானது பொருத்தப்படும் போது அவைச சைமயலறைச் சுவர்கள் மற்றும் கேபினட்டுகளை புகை மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பிலிருந்து காப்பாற்றுகின்றன.

* சமையலறையில் மீன், நண்டு போன்றவற்றை சமைக்கும்போது அதன் வாசனையானது வீடு முழுவதும் கட்டாயம் பரவும். இந்த வாசனை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. நல்ல வாசனையோ அல்லது கெட்ட வாசனையோ சிம்னியிலிருக்கும் பட்டனை இயக்கினால் நொடிகளில் வாசனை போய்விடும். சில சமயங்களில் சில உணவு பொருட்களை சமைத்த வாசனையானது நீண்ட நேரம் வரை சமையலறையிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். இதற்கும் சிம்னி பட்டனை ஒரு கிளிக் செய்து வாசனைக்கு குட்பை சொல்லுங்கள்.

* நாம் உணவில் மசாலா பொருட்களை அதிக அளவில் சேர்த்து கொள்கிறோம் என்பதை மறுக்க முடியாது. சமையலில் பயன்படுத்தப்படும் கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய் போன்றவை வலுவான நறுமணம் கொண்டவை. இவை பயன்படுத்தப்படும்போது வீட்டினுள்ளே இருப்பவர்கள் தும்மாமல் இருக்க முடியாது. இது போன்ற சமயங்களில் சிம்னியை இயக்கினால் அவை சமைக்கும்போது ஏற்படும் நெடியை உறிஞ்சி நம்மை தும்மலில் இருந்து காப்பதோடு சமைக்கும் பகுதியில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவாமலும் தடுக்கும்.

* நேர்த்தியான மற்றும் கம்பீரமான தோற்றமுள்ள சமையலறை சிம்னிகள் உங்கள் சமையலறையை மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நம் வீட்டு  சமையலறையின் அளவு, வசதி ஆகியவற்றிற்கு ஏற்ப சிம்னிகளை தேர்வு செய்து பொருத்தி கொள்வது இல்லத்தரசிகளின் விருப்பத்தை கருத்தில் கொண்டு சிம்னிகளை வாங்குவதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

* சமையறையை சுத்தம் செய்வதில் பாதி வேலையை இந்த சிம்னிகள் குறைக்கின்றன. சிறிய அளவிலான வீடானாலும், பெரிய வீடானாலும் ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்கும் சிம்னிகள் அவசியம்தான்

* சிம்னிகளை சுத்தம் செய்ய தொழில்நுட்ப வல்லுநர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். வருடத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சுத்தம் செய்தால் அவை நீண்ட நாட்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உழைக்கும்.